Saturday, November 28, 2020
முகப்பு கலை கதை காத்திருக்காதே ! இளமையை வீணாக்கி விடாதே !

காத்திருக்காதே ! இளமையை வீணாக்கி விடாதே !

அங்கவீனனின் மனைவியாக நேரிடும் அல்லது மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும்... இளமையை வீணாக்கி விடாதே. நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 38 ...(மேலும்)

-

பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 13

கிரிகோரிய் க்யோஸ்தியேவ் ஜூன் மாத நடுவில் மருத்துவமனையிலிருந்து வெளியேறினான்.

இதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அவனும் அலெக்ஸேயும் விரிவாகப் பேசிக் கொண்டார்கள். இருவரும் துன்பத்தில் தோழர்கள், இருவருடைய சொந்த விவகாரங்களும் ஒரே மாதிரியாகச் சிக்கலான நிலைமையில் இருக்கின்றன என்பது குறித்து இருவருமே உள்ளுற மகிழ்ச்சிகூட அடைந்தார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் வழக்கமாக நடப்பது போல இருவரும் தங்கள் அச்சங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி ஒருவருக்கொருவர் விவரித்தார்கள். தங்கள் ஐயப்பாடுகளை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள அவர்களது தன்மானம் இடந்தரவில்லை. ஆதலால் தமக்குள்ளேயே அவற்றை வைத்துக் கொண்டு மருகவேண்டியிருந்தது. இது அவர்களுக்கு இருமடங்கு அதிகக் கடினமாயிருந்தது. இப்போது அந்த ஐயப்பாடுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒருவருக்கொருவர் சொல்லி ஆற்றிக் கொண்டார்கள் அவர்கள். தங்கள் காதலிகளின் நிழற்படங்களை ஒருவருக்கொருவர் காட்டினார்கள்.

அன்யூத்தா, க்யோஸ்தியேவை எப்படி வரவேற்றாள், அவனது விகாரமான முகத்தைப் பற்றி என்ன நினைத்தாள், அவர்கள் விவகாரம் எப்படி முடிந்தது என்பதை எல்லாம் மெரேஸ்யெவுக்கு அவன் எழுதுவதாக ஒப்பந்தமாயிற்று. க்யோஸ்தியேவ் விஷயம் நல்லபடியாக முடிந்தால் ஓல்காவுக்குத் தன்னைப் பற்றி எல்லாவற்றையும் எழுதிவிடுவது என்றும், இன்னும் பலவீனமாக, பெரும்பாலும் படுத்த படுக்கையாயிருந்த தாயாருக்குக் கலவர மூட்டுவதில்லை என ஓல்காவிடம் உறுதிமொழி வாங்கிக் கொள்வது என்றும் மெரேஸ்யெவ் அப்போதே தீர்மானித்துக் கொண்டான்.

க்யோஸ்தியேவ் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாளை இந்தக் காரணத்தால்தான் இருவரும் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். பதற்றத்தால் இருவரும் சந்தடி செய்யாமல் எழுந்து ஆளோடிக்கு வருவார்கள். க்யோஸ்தியேவ் கண்ணாடி முன் நின்றுகொண்டு காயத் தழும்புகளைத் தடவித் தேய்த்துக் கொள்வான். மெரேஸ்யெவ் ஓசைப் படாமல் இருக்கும் பொருட்டுக் கவைக்கோல்களின் நுனியில் துணியைச் சுற்றிக் கொண்டு அதிகப்படி முறை நடைபழகுவான்.

காலைப் பத்து மணிக்குக் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா க்யோஸ்தியேவைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக அவனிடம் தந்திரப் புன்னகையுடன் தெரிவித்தாள். அவன் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு துள்ளி எழுந்தான். தழும்புகள் முன்னிலும் துலக்கமாகத் தெரியும் படி அவன் முகம் கன்றிச் சிவந்திருந்தது. மளமளவென்று சாமான்களைத் திரட்டலானான்.

அவனுடைய பதற்றத்தையும் பரபரப்பையும் பார்த்து முறுவல் செய்தவாறு, “அருமையான பெண், ரொம்பப் பொறுப்புள்ளவள்” என்று கூறினாள்….

வார்டுக்காரர்கள் எல்லோரும் – ஏக்கம் பிடித்த மேஜரும் மெரேஸ்யெவும் புதிதாக வந்திருந்த நோயாளிகளும்- க்யோஸ்தியேவ் தெருவில் வருவதை எதிர்பார்த்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார்கள்.

“வருகிறான்!” என்று கிசுகிசுத்தான் மெரேஸ்யெவ். கனத்த ஓக் மர வெளிவாயிற் கதவு மெதுவாகத் திறந்திருந்தது. அதிலிருந்து இருவர் வெளிப்பட்டார்கள். ஒருத்தி, கறுப்பு ஸ்கர்ட்டும் வெள்ளை பிளவுஸும் அணிந்த, சதைப் பிடிப்புள்ள பெண். அவள் தொப்பி அணியவில்லை. அவளது கேசம் பகட்டின்றி வாரி விடப்பட்டிருந்தது. மற்றவன் இளம் படை வீரன். அவன் க்யோஸ்தியேவ் என்பதை மெரேஸ்யெவ் கூட முதல் பார்வையில் கண்டு கொள்ள முடியவில்லை. ஒரு கையில் பெட்டியையும் மறு கையில் மேல் கோட்டையும் எடுத்துக் கொண்டு மீள்விசையும் உறுதியுமாக அனாயாசமாக அவன் நடந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சி உண்டாயிற்று. தனது பலத்தைச் சோதித்துப் பார்த்து, வெகு தூரம் நடக்கும் வாய்ப்பினால் களிப்படைந்து க்யோஸ்தியேவ் வாயில் படிகளில் ஓடக்கூட இல்லை, லாவகமாக வழுகிச் சென்றான் போலும். தனது துணைவிக்குக் கைலாகு கொடுத்து நடத்திச் சென்றான். இருவரும் நாற்பத்து இரண்டாம் வார்டு ஜன்னலை நெருங்கியவாறு ஆற்றோரச் சாலையில் நடந்தார்கள். லேசாகத் தூறிய பெருத்த பொன் மழைத் துளிகள் அவர்கள் மேல் தெறித்தன.

அவர்களைக் கண்டு அலெக்ஸேயின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து பொங்கிற்று. எல்லாம் நலமாகத் தீர்ந்துவிட்டது. அந்தப் பெண்ணின் முகத்தில் ஒளிவு மறைவின்மையும் எளிமையும் இனிமையும் ததும்புவது காரணம் இன்றி அல்ல. இத்தகைய பெண் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள். ஆமாம், இம்மாதிரிப் பெண்கள் துன்பத்துக்கு உள்ளான மனிதனை அருவருத்து ஒதுக்க மாட்டார்கள்.

அவர்கள் ஜன்னலுக்கு நேராக வந்து சற்று நின்று நிமிர்ந்து பார்த்தார்கள். மழையால் மெருகூட்டப்பட்டிருந்த கரையோரக் கைப்பிடிச் சுவர் அருகே நின்றார்கள் அவர்கள். மெதுவாக வீழ்ந்த மழைத்துளிகள் இட்ட கோணலான பளிச்சிடும் கோடுகள் அவர்களுக்குப் பின்னணியாக விளங்கின. க்யோஸ்தியேவின் முகத்தில் குழப்பமும் கடுகடுப்பும் கலவரமும் காணப்பட்டதையும் அவனுடைய அன்யூத்தா எதனாலோ கவலையும் கலக்கமும் கொண்டிருப்பதையும் அலெக்ஸேய் அப்போது கவனித்தான். அன்யூத்தாவின் கை க்யோஸ்தியேவின் கையில் தளர்வாகவே கோக்கப்பட்டிருந்தது. அவளது நிலை கிளர்ச்சியையும் தயக்கத்தையும் காட்டியது. இதோ அவள் கையை உருவிக் கொண்டு ஓடிப் போய்விடுவாள் போலிருந்தது அவளது தோற்றம்…

அன்று எஞ்சிய நேரமெல்லாம் அலெக்ஸேய் கலவரமுற்றிருந்தான். மாலையில் அவன் நடைப் பயிற்சிகூடச் செய்யவில்லை. எல்லோருக்கும் முன்னதாகவே உறங்குவதாகப் படுத்துக் கொண்டான். ஆனால் வார்டில் மற்றவர்கள் யாவரும் உறங்கி நெடு நேரம் சென்ற பின்னரும் அவனுடைய கட்டில் வில்கம்பிகள் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன.

மறுநாள் காலை மருத்துவத்தாதி வாயில் நிலையில் கால் வைத்ததுமே தனக்கு ஏதேனும் கடிதம் வந்திருக்கின்றதா என்று கேட்டான். கடிதம் இல்லை. அலெக்ஸேய் சுரத்தில்லாமல் முகங்கை கழுவிக் கொண்டான், உற்சாகமின்றி உணவு கொண்டான். ஆனால் வழக்கத்தைவிட அதிகமாக நடந்தான். முந்தைய நாளைய பலவீனத்திற்காகத் தன்னைத் தண்டிக்கும் பொருட்டு அதிகப் படியாகப் பதினைந்து தடவை நடந்து முந்திய நாள் விட்ட குறையைப் பூர்த்தி செய்தான். எதிர்பாராத இந்தச் சாதனை எல்லாக் கலவரத்தையும் அவனுக்கு மறக்கடித்து விட்டது. கவைக்கோல்களின் உதவியால், மிகவும் கலைத்து விடாமல் விட்டாற்றியாக நடக்க தன்னால் முடியும் என நிரூபித்து விட்டான். ஆளோடியின் நீளமான ஐம்பது மீட்டரை நடைகளின் எண்ணிக்கையான நாற்பத்தைந்தால் பெருக்கினால் இரண்டாயிரத்து இரு நூற்று ஐம்பது மீட்டர், அதாவது இரண்டே கால் கிலோ மீட்டர் ஆயிற்று. இது கணிசமான தூரம், நிச்சயமாக!

தினப்படி பயிற்சியைக் காலையில் இருபத்து மூன்று, மாலையில் இருபத்து மூன்று, ஆக நாற்பத்து ஆறு நடைகள் ஆக்குவது என்றும் மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் பொழுது கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்ப்பது என்றும் மெரேஸ்யெவ் முடிவு செய்தான். இது இருண்ட எண்ணங்களிலிருந்து அவன் மனத்தை வேறுபுறம் திருப்பியது, உற்சாகம் ஊட்டியது, செயல்புரியச் சித்தமான மனநிலையை ஏற்படுத்தியது. மாலையில் அவன் பெருத்த மன எழுச்சியுடன் நடை பழகத் தொடங்கியவன், முப்பது நடைகள் போய் வந்ததைக் கவனிக்கக் கூட இல்லை. அந்தக் கணத்தில் உடையறைக்காரி அவனை நிறுத்தி ஒரு கடிதத்தை கொடுத்தாள்.

ஜன்னல் குறட்டில் சாய்ந்து கொண்டு மெரேஸ்யெவ் உறையைப் பிரித்தான். அது க்யோஸ்தியேவ் முந்தைய இரயில் நிலையத்தில் எழுதியிருந்த கடிதம். இந்த விரிவான கடிதத்தைப் படிக்கப் படிக்க அலெக்ஸேயேவின் முகத்தில் மேலும் மேலும் ஏக்கம் ததும்பலாயிற்று. அன்யூத்தா தாங்கள் நினைத்தபடியே அருமையான பெண் என்றும் அவளைக் காட்டிலும் அழகானவள் மாஸ்கோவில் ஒரு வேளை இருக்க மாட்டாள் என்றும், சொந்தக்காரன் போலத் தன்னை அவள் வரவேற்றதாகவும் தனக்கு அவள் முன்னிலும் அதிகமாகப் பிடித்துவிட்டாள் என்றும் எழுதியிருந்தான் க்யோஸ்தியேவ்.

“… ஆனால் நீயும் நானும் சர்ச்சை செய்த விஷயம் நாம் நினைத்த மாதிரியே ஆயிற்று. இவள் நல்லவள். என்னிடம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை, தோற்றத்திலும் எதையும் காட்டவில்லை. எல்லாம் நல்லபடியாகவே நடந்தது. ஆனால் நான் குருடன் அல்லவே. எனது பாழாய்ப்போகிற முகரக்கட்டை அவளுக்கு திகில் ஊட்டுவதைக் கண்டேன். எல்லாம் சாதாரணமாகவே இருப்பது போலிருக்கும். ஆனால் சட்டென்று கண்ணோட்டுவேன்: அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் வெட்கமோ, அச்சமோ, பரிதாபமோ, ஏதோ ஒன்று புலப்படும்… அவள் தனியாக இருக்கிறாள். பெற்றோர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். கெளரவமான குடும்பம் என்பது தெரிகிறது. எனக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தாள். ஆனால் தேநீர்ப் பாத்திரத்தில் என் பிரதி பிம்பத்தைப் பார்த்துப் பெருமூச்செறிந்த வண்ணமாக இருந்தாள். சுருங்கச் சொன்னால் நம்மால் முடியாது என்று உணர்ந்தேன்.

நான் அவளிடம் இப்படி இப்படி என்று விண்டு சொல்லியேவிட்டேன். ‘என் தோற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைக் காண்கிறேன். அதற்கென்ன, சரிதானே. உங்களைப் புரிந்து கொள்கிறேன். எனக்கு மனத்தாங்கல் ஏற்படவில்லை’ என்றேன். அவள் கண்ணீர் பெருக்கினாள். ‘அழாதீர்கள். நீங்கள் நல்ல பெண். எவனும் உங்கள் மீது காதல் கொள்வான். வாழ்க்கையை நீங்கள் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றேன். அப்புறம் சொன்னேன்: ‘நான் எப்பேர்பட்ட அழகன் என்பதை இப்போது நீங்கள் பார்த்துவிட்டீர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். நான் என் படைப் பிரிவுக்குப் போகிறேன். முகவரியை எழுதி அனுப்புகிறேன். எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிடவில்லை என்றால் எழுதுங்கள். அந்தச் சமயத்தில் விமானத்தாக்கு அபாய அறிவிப்பு ஒலித்தது. அவள் வெளியே போனாள். அந்தச் சந்தடியில் நான் மெதுவாக நழுவி நேரே ரெஜிமெண்ட் அலுவலகம் சென்றேன். போகிற போக்கிலேயே நியமனப் பத்திரம் பெற்றுக் கொண்டேன் எல்லாம் நலம். பிரயாணச் சீட்டு பையில் இருக்கிறது. போகிறேன். ஆனால் ஒரு விஷயம். அலெக்ஸேய், இப்போது நான் அவள் மேல் முன்னிலும் அதிகக் காதல் கொண்டு விட்டேன். அவள் இல்லாமல் எப்படி வாழ்வேனோ தெரியவில்லை.”

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

அலெக்ஸேய் நண்பனின் கடிதத்தைப் படித்தான். தன் வருங்காலத்தை ஒரு பார்வை பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. அவன் விஷயத்திலும் இப்படியே நேரும் போலும். ஓல்கா அவனை அருவருத்து ஒதுக்க மாட்டாள், முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டாள். பெருந்தன்மையுடன் புன்னகை செய்வாள், அருவருப்பை உள்ளடக்கிக் கொண்டு கொஞ்சி வருடுவாள்.

“இல்லை, இல்லை, வேண்டாம்! வேண்டாம்!” என்று உரக்கக் கூவினான் அலெக்ஸேய்.

விரைவாகக் கெந்தி நடந்து வார்டுக்குப் போய் மேஜை அருகே அமர்ந்து ஓல்காவுக்கு மளமளவென்று ஒரு கடிதம் எழுதினான். சுருக்கமான, விவகாரரீதியான, உணர்ச்சியற்ற கடிதம்: நம் உறவைப் பற்றி வெகுவாகச் சிந்தித்தேன். காத்திருப்பது உனக்குக் கடினமாயிருக்கும். யுத்தம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ? ஆண்டுகள் கழிந்து விடும், இளமை போய் விடும். யுத்தமோ, நிலையற்ற விஷயம் – எதிர்பார்ப்பு வீணாகவே முடியலாம். திடீரென நான் கொல்லப்படலாம். நீ எனக்கு மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும். அல்லது இன்னும் மோசமானது நிகழலாம்: நான் அங்கவீனம் அடையலாம். அப்போது நீ அங்கவீனனின் மனைவியாக நேரிடும். எதற்காக? இளமையை வீணாக்கி விடாதே. விரைவில் என்னை மறந்து விடு. எனக்கு நீ பதில் கூட எழுதாமல் இருக்கலாம். நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன். எவ்வளவு தான் கஷ்டமாயிருந்தாலும் நான் உன்னைப் புரிந்து கொள்வேன். இவ்வாறு செய்வதே மேலாயிருக்கும்….

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க