privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !

ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே பெண்களை ஆரியர் திருமணம் செய்து கொண்டனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 20.

-

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 20

கோவலனைப் பாருங்கள். பெரிய கோடீஸ்வரனின் ஒரே பிள்ளை. அவன் ஏன் இரவில் புறப்பட்டு ஒருவருக்கும் தெரியாது மதுரைக்குச் செல்ல வேண்டும்? பொருள் தேட தந்தையைக் கேட்டால் கொடுக்க மாட்டாரா? அல்லது கண்ணகி மாமன் மாமியுடன் சண்டை போட்டுக் கொண்டாளா? ஒரு சமயம் கண்ணகி கூறுகிறாள் தோழியிடம், “நான் அழுதேனென்று என் மாமியிடம் கூறாதே. கூறினால் மனைவிக்கு வேண்டியதைக் கொண்டு கொடுத்து முகங்கோணாது வைத்து வாழத் தெரியாத நீயும் ஓர் ஆண்மகனா? என்று என் நாயகனைக் கோபிப்பாள் மாமி” என்று கூறுகின்றாள். இதனால் கண்ணகிக்கு மாமியிடம் சண்டையல்ல; அன்புடன் வாழ்ந்தவர்கள் எனத் தெரிகிறது. பின் ஏன் கோவலன் மதுரை சென்றான்? தந்தை பொருளால் வாழுகின்றான் என்று தன்னை உலகம் பழிக்குமெனக் கருதியேதான். மேலும் கோவலனுக்கு மணமான உடனேயே, பெற்றோர் இவர்களை தனியே வைத்து விடுகின்றனர். ஏன்? வேறுபடு திருவின் வீறு பெறக் காணவே. தந்தையின் பணத்தால் வாழுதலைப் பழியெனக் கருதினர் தமிழ் மக்கள். ஒருவேளை தந்தை இறந்தால், மீதி வைத்து விட்டுப் போனால் – அது மக்களைச் சாரும். ஆனால், இக்காலத்தே போல் தந்தை இருக்கும்போதே “பாகத்தைப் பிரி” எனச் சண்டை பிடிப்பது அன்று கிடையாது.

கலியாணம் செய்தபின் மனைவியிடத்து அன்பைச் செலுத்து என்பது ஆரியர் கொள்கை. காரணம் என்ன? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தமிழர்களைப் போல் வாழ்க்கையில் இன்பம் பெற வாழ்க்கைக்கு ஒரு கூட்டாளியே மனைவி எனக் கருதினார்களில்லை. தமிழன், ஒரு பெண்ணிடத்து முதலில் அன்பு செலுத்தியதன்றி, அவளை மணக்க விரும்பினானில்லை. பெண்ணும் அது போலவே .

ஒரு தமிழன் ஒரு பெண்ணை முதன் முதல் பார்த்த காலையில் ஐயப்படுவான். ஏன்? இருவரும் ஒருவரையொருவர் அறியாவிடத்து, அன்பு உண்டாகிறது! கம்பரும், இராமனைத் தெருவில் கண்ட அளவில் சீதைக்கு முன்பு அன்பு உண்டாகிறது. பின் ஐயப்படுகிறாள் என்று தெரிவிக்கின்றார். இராமனுக்கும் அவ்வாறே ஐயம் தோன்றுகிறது. ஐயம் நிகழ்வது அவசியம். அது இயல்பானதே. ஆனால் வால்மீகி, இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்ததாகவே தெரிவிக்கவில்லை. ஏன்? ஆரியருக்கு அன்பு செலுத்திய பிறகு மணம் செய்யும் வழக்கமில்லை. இந்த ஐயம் ஆணுக்கு மட்டுமல்ல; பெண்ணுக்கும் உண்டாகும்.

ஆனால், தொல்காப்பியத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், “ஆணுக்கு மட்டுந்தான் அறிவிருக்கின்றது” என்று கூறுகின்றார். ஆனால், தமிழ் மகனாகிய சேக்கிழாரோ, பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் மனைவியும் முதன் முதல் சந்தித்த காலத்து, இருவருக்கும் ஐயம் தோன்றியதாகத் தெரிவிக்கின்றார். இதுதான் சிறந்தது. பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்பதே தமிழன் வழக்கம். ‘சிறந்துழி ஐயம் சிறந்ததென்ப’ என்றார் தொல்காப்பியர். ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் இவள் விபச்சாரியா? கற்புடையவளா? எனச் சந்தேகித்தால் அங்கே அன்பு திகழ இடமில்லை . அவருக்குத் தகுந்த ஐயம் தோன்றலாகாது. பாலைக்கண்ட ஒருவன் இது பசுவின் பாலா? அன்றிப் பன்றியின் பாலா? என்று நினைப்பானானால் பின்னர் அப்பாலைச் சாப்பிட முடியுமா? எனவே மேலதாய் வந்தவிடத்து, அதாவது சிறந்ததாய் வந்தவிடத்துத்தான் அன்பு செல்லும். இதைத்தான் ”சிறந்துழி ஐயம்” என்றார் தொல்காப்பியர். இதையுணராத நச்சினார்க்கினியர், சிறந்த ஆண்மகனிடத்துத்தான் ஐயம் தோன்றுமென அறியாது கூறினார்.

நிற்க, தன் மகள் ஒருவனைக் காதலித்தால், பெற்றோர் அவள் விருப்பத்திற்கிணங்குவர்; இன்றேல் அப்பெண் உயிரை விடுவாளே தவிர வேறோர் ஆடவனை மனதில் நினையாள். ஆடவனும் அப்படியே. எனவே இரண்டிடத்தும் சமமாய் ஒத்த காதலாய் இருக்க வேண்டும். இருந்தால்தான், வாழ்க்கை செவ்வனே நடைபெறும். காதலர் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டாலும் பெற்றோர் சம்மதம் பெற்றே மணப்பர். சம்மதம் கிடைக்காவிட்டால் பல வழியிலும் பெற முயல்வர். இத்திருமணம் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே நடைபெறும். இவ்வழக்கை இன்னும் தமிழ்நாட்டில் காணலாம். சில சமயம் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தராவிடில், இருவரும் ஒருவருக்குத் தெரியாது வீட்டை நீங்கிச் செல்வதுமுண்டு. அப்படித் தன் பெண் சென்று விட்டால், அப்பெண்ணின் தாய், எங்கு மணமகன் வீட்டில் திருமணம் நடந்துவிடுமோ என்று வருந்துவாள். பின்னர் அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து மணம் முடிப்பார்.

அக்காலத்தில் எங்கும் – ஏன்? இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே கூடத் தரகர்கள் கிடையாது. இடைக்காலச் சைவம் கூட இதில் சிறிது மாறுபட்டது. ஆனால், முன்பு இறைவனுக்கும் உயிர்க்கும் நேரே தொடர்பு இருந்து வந்ததேயொழிய இடையில் யாருமில்லை. இந்தத் தொடர்பு போல் இருவர் காதலும் தூய்மையானது.

”பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்ற நச்சினார்க்கினியர், பார்ப்பனத் தோழன் உண்டென்று கூறுகிறார். இது தவறு. இன்று மணச்சடங்கு செய்ய வரும் பார்ப்பனன் தோழனா? கிடைத்தவற்றையெல்லாம் அடித்துக் கொண்டல்லவா போகிறான்?

படிக்க:
பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கை கமுக்கமாக விசாரிக்க வேண்டுமாம் !
என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

நிற்க, காதலரிருவரும் ஒருவரையொருவர் விரும்பிய அன்றே மணம் நடந்து விடுகின்றது. ஆனால் இவர்கள் மணத்தினை உலகறியச் செய்யவே, பழி நீங்கவே, சில சடங்குகள் வகுத்தனர். அதுதான் “காரணம்” என்பது. இப்பழைய முறைகளில் இன்னும் சில நம்மிடையே இருந்து வருகின்றன.

தான் தேடிய பொருளால், தன் முயற்சியால் இல்லறம் நடைபெற வேண்டுமெனத் தமிழன் விரும்பியது போல விருந்து புறந்தருதல், அதாவது விருந்தினரை உபசரித்தலும் தமிழனின் சிறந்த குணமாகும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க