Friday, June 2, 2023
முகப்புமறுகாலனியாக்கம்சூழலியல்நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !

நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !

இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்?

-

டந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வாக ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயம் நுட்பங்களை பின்பற்ற அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று சொன்னார். இந்தியாவின் விவசாயத் துறையை முந்தைய அடிப்படை நிலைக்கு திரும்ப கொண்டு செல்லும் எனவும் அவர் பேசினார்.

‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ அறிமுகப்படுத்தியவர் மகாராஷ்டிர மாநிலம், விதார்பாவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர். தமிழக வேளாண் இதழ்கள் இவரை ஹீரோவாக்கியுள்ளன. இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்கள் குறிப்பாக, மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம், வேப்பிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரம், வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி மருந்து ஆகியவற்றை தயாரிக்கலாம் என்பதே பாலேக்கர் முன்வைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம். செயற்கை வேதிப்பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் இவர்.

சுபாஷ் பாலேக்கர்.

தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக அரசு சூளுரைத்த நிலையில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்டை அடுத்த இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், “ஜீரோ பட்ஜெட் விவசாயம் பயிர் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, காற்றில் உள்ள நைட்ரஜன் மூலம் மண்ணை வளமாக்கும். அதோடு, விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும்” என சொல்லப்பட்டது.

தமிழகத்தில்கூட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மூலம் இத்தகைய கருத்துக்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அதை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த போதிய அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதுவும் அரசிடம் உள்ளதா என்பதும் தெளிவில்லாமலேயே உள்ளது.

‘வேதிப்பொருட்கள்’ என்ற பதம் இயற்கை விவசாயத்தை மிகைப்படுத்த பொதுவில் வைக்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஆனால், இது அடிப்படை வேதியியல் செயல்முறைகள் மீதான அலட்சியத்தின் அறிகுறியாகவும் மாறியுள்ளது.

நவீன வேளாண் தொழிற்நுட்பங்களுக்கு சாத்தியமான மாற்றாக ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை இதுநாள் வரை ஆய்வுத் துறையினர் கவனத்தில் கொள்ளவே இல்லை என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். “இது அந்த அளவுக்கு திறன்படைத்தது எனில், பசுமை புரட்சி என்ற ஒன்று ஏற்பட்டே இருக்காது. ஏனெனில் பசுமை புரட்சிக்கு முன்பாக, ஏதோ ஒரு வகையில் இயற்கை விவசாயத்தை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்துகொண்டிருந்தனர்” என்கிறார் ஒரு அறிவியலாளர்.

“எப்படியாயினும், அனைத்து அறிவியல் பகுப்பாய்வுகள் எதிர்திசையையே சுட்டிக்காட்டுகின்றன. இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் குறைகிறது என்பதே அது. உற்பத்தித்திறன் குறையும்போது எப்படி விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்?” என வினவுகிறார் அவர்.

இயற்கை விவசாயத்தின் உற்பத்தித் திறன், மண்வளம், செடிகளின் நிலையில், விவசாயிகளின் வருமானம் குறித்த குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் எதுவும் இல்லை.  இந்த நிலையில், மெத்தப் படித்த நிர்மலா சீதாராமன் எந்த வகையில் இந்தத் திட்டத்தை சொன்னார் என்பது கேள்விக்குறியதாகிறது. பட்ஜெட் உரையில் அறிவிக்கிறார் எனில், அந்தத் திட்டத்துக்கு பின்புலமாக அமைந்த ஆய்வறிக்கைகள், ஆதாரங்கள், புள்ளி விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

பட்ஜெட்டுக்கு சிறிது காலங்களுக்கு முன்னதாக ஏப்ரல்- ஜூன் மாதத்தில்  நிதி ஆயோக், ICAR மற்றும் NAARM ஆகியவற்றிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வொன்றை செய்யுமாறு பணித்துள்ளது. அந்த ஆய்வு முடியும் முன்பே, நிர்மலா சீதாராமன் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்கிறார்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர் ஒருவர், “இந்த ஆய்வு இரண்டு பிரிவுகளாக செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் சமூக பொருளாதார தாக்கம் மற்றும் மண் வளம், செடி மாதிரி பகுப்பாய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பகுப்பாய்வு செய்ய உள்ளோம். அவர்களிடம் வருமானம் குறித்தும் உற்பத்தியின் தரம் எப்படி மாறியுள்ளது, உற்பத்தி அளவு எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் கேட்டுள்ளோம். இதை சரிபார்ப்பதற்கு போதிய நேரம் தரப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார்.

இரண்டாவது பகுதி ஆய்வில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலத்தின் மண் மற்றும் செடிகளை வேதியியல் சோதனைகளுக்கு உட்படுத்த சேகரித்துள்ளதாக கூறுகிறது.

“அதிலும்கூட ஒரு பருவத்துக்கு பிந்தைய நிலங்களில்தான் பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க முடிகிறது. ஆனால், ஒரே ஒரு பருவத்தை வைத்து சோதனை முடிவுகளை பொதுவானதாக்க முடியாது” என்கிறார் ஒரு ஆய்வாளர்.

மாட்டுச் சாணம், மாட்டு மூத்திரம், வெல்லம் மற்றும் பருப்பு மாவுகளை சேர்த்து செய்யப்படும் பயிர் ஊக்கியில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன, மண் மற்றும் செடியின் தேவைகளை எப்படி அது பூர்த்தி செய்யும் என்பது குறித்து குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியாது என்கிறார்.

“நாங்கள் நிதி ஆயோக்கிடம் முறையான ஆய்வுகளை முடிக்க எப்படியும் இரண்டாண்டுகளாவது வேண்டும் என்று கூறினோம். இந்த குறுகிய காலத்தில் எந்தவித தாக்கத்தையும் காண முடியாது. ஆறு மாதத்துக்குள் ஆய்வை முடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமான தகவல்களைத் தர இந்தக் காலம் போதாது” என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என சொல்லிக்கொண்டாலும் அது ஜீரோ பட்ஜெட் விவசாயமல்ல; வழக்கமான விவசாய முறையைக்காட்டிலும் 30-40% செலவு குறைவானது எனவும் முதல் இரண்டு வருடங்களில் உற்பத்தி அளவு 20-30% குறையும். ஆனால், அடுத்த ஆண்டு வழக்கமான நிலைக்கு வரும் என சொல்கிறார்கள். அது பற்றி ஆய்வாளர்கள் உறுதியளிக்கவில்லை. அதற்கு நீண்ட கால ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பிறகு எப்படி இயற்கை விவசாயிகளின் வருமானம் பெருகியுள்ளதாக சிலர் கூறிக்கொள்கிறார்கள். ‘இயற்கை’ முறையில் விளைவிக்கப்பட்டது என்கிற முத்திரைதான் காரணம் என்கிறார்கள் அவர்கள். வழக்கமான விலையைக் காட்டிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதாகக் கூறும் பொருட்களின் விலை 30-40% அதிகம்.

படிக்க:
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

ஒட்டுமொத்தமாக, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை நாடு முழுவதிலும் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியாது என நிபுணர்கள் சொல்கிறார்கள். “உற்பத்தி திறன் குறைவதால், பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும். அதோடு, இதுபோன்ற உற்பத்திக்கு ஏற்ற வளர்ச்சியடைந்த, நிலையை உணர்ந்த சந்தை நமக்குத் தேவை. அது நம்மிடம் இல்லை” என்கிறார் ஒரு நிபுணர்.

ஆக, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. கூடுதலாக, மாட்டு மூளை சங்க பரிவாரங்களின் ‘பழங்கால’ விவசாய பாரம்பரியத்தை முன்னெடுக்கவும் பயன்படுகிறது. மாட்டு மூத்திரம் கேன்சரை உள்ளிட்ட மனித நோய்களுக்கு மருந்தாகும் என நம்பும் சங்கிகள், மாட்டுச்சாணத்தை நிலத்தில் போட்டு இரண்டு மடங்கு லாபம் ஈட்டலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து வியப்பு கொள்ள முடியவில்லை.

கட்டுரை: கபீர் அகர்வால்
தமிழாக்கம் : அனிதா

நன்றி : thewire.in

  1. ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது மேட்டுக்குடிகளையும் மேல்தட்டு நடுத்தர வர்க்க சந்தையை குறிவைத்து இறங்கியுள்ள ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சாமானிய விவசாயியால் ஒருபோதும் இதைச் செய்து இலாபம் ஈட்ட முடியாது. — நீங்கள் கூறுவது மிகவும் தவறான வாதமாகும் உங்களுக்கு பிஜேபி கட்சியை பிடிக்காது என்பதால் இந்த விவசாய முறையையும் குறை சொல்லாதீர்கள்.இந்த விவசாய முறையின் மூலம் லாபம் அடைந்து வரும் பல விவசாயிகளை நான் அறிவேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க