Saturday, May 25, 2024
முகப்புசெய்திஇந்தியாகாயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !

காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !

இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு  தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக இந்த ஈத் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.

-

லிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீர் மாணவர்களுக்கு மத்திய அரசின் தொடர்பு அதிகாரி ஈத் பண்டிகையை கொண்டாட விடுத்திருந்த அழைப்பை அம்மாணவர்கள் நிராகரித்துள்ளனர். பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் நடக்கவிருந்த விழாவில் பங்கேற்க காஷ்மீர் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் தொடர்பு அதிகாரி சஞ்சய் பண்டிதா.

சஞ்சய் பண்டிதாவின் அழைப்புக்கு காஷ்மீர் மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், பிரிவு 370-ஐ நீக்கிய டெல்லியின் வஞ்சகத்தனமான நடத்தைக்கு எதிராகவும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டதற்கு எதிராகவும்  தங்களது கடுமையான கோபத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த அழைப்பு காயத்தில் உப்பை தேய்ப்பதைப் போன்றிருப்பதாகவும் கொடூரமான அரசின் முகத்தை மனித முகமூடி அணிவித்து உலகத்தின் முன்பு காட்டும் முயற்சி இது எனவும் மாணவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

கிட்டத்தட்ட 10 நாட்களாக முற்றிலுமான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காஷ்மீருக்கு வெளியே உள்ளவர்கள் தங்கள் பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இத்தகைய அழைப்பை ஏற்பது ஜம்மு – காஷ்மீரில் பெருமளவிலான இராணுவமயமாக்கல் மற்றும் முழுமையான அடக்குமுறையை எதிர்கொள்ளும் தங்களுடைய பெற்றோரை அவமதிப்பது போலாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்.

ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், நிகழ்வை ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரிக்கு ரூ. 1 இலட்சத்தை மற்ற மாநிலங்களில் பயிலும் ஜம்மு – காஷ்மீர் மாணவர்களுக்கு ஈத் விருந்தளிக்க ஒதுக்கியிருப்பதாக ஊடகங்கள் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மாணவர்கள்,  இந்த அழைப்பின் பின்னால் உள்ள அரசியல் பயமூட்டுவதாக கூறியுள்ளனர்.

ஆளுநருக்கு தங்கள் மீது எந்தவித பரிவும் இல்லை மாறாக, இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு  தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக அழைப்பும் விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.

இந்த அழைப்பை தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்கான வாய்ப்பாக கருதும் மாணவர்கள், டெல்லியின் எதேச்சதிகாரத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் சிறப்பு மாநில தகுதியை வழங்கிய 370 பிரிவை நீக்கியிருப்பது ‘உரிமைக் கொள்ளை’ எனவும் தங்களுடைய அறிக்கையில் கூறியுள்ளனர். மாநிலத்தில் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கையும், தகவல் தொடர்பு துண்டிப்பையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

அதுபோல, அரசியல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணமாக பத்திரிகைகள் செயல்படாமல் இருப்பதும் தங்களை கவலை கொள்ளச் செய்வதாக கூறியுள்ளனர். அரசின் நடவடிக்கைகள் தங்களுடைய கலாச்சாரம், வரலாறு மற்றும் மதத்தை அபகரிக்கும் ‘மாபெரும் அச்சுறுத்தல்’ எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.

படிக்க:
காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

முடிவெடுப்பதற்கு முன் ஜம்மு – காஷ்மீர் மக்களின் எண்ணங்களை அறியாமல், அவசர நிலை சூழ்நிலையை  உருவாக்கியதை விமர்சித்துள்ள மாணவர்கள் முடிவு அறிவிப்புக்குப் பிறகு கருத்துக்களை அறியவிடாமல் தகவல் தொடர்புகளை துண்டித்துள்ளதை கண்டிக்கின்றனர். தங்களுடைய பெற்றோரிடம்கூட பேச முடியாத சூழல் நீடிப்பதையும் தங்களுடைய அறிக்கையில் கூறியுள்ளனர்.

மக்களின் விருப்பத்தை பெற முடியாத மோடி அரசு, போலி முகத்தைக் காட்ட விலைகொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறது.  அறுபது ஆண்டு காலப் போராட்டம் காஷ்மீரிகளை அரசியல்மயப்படுத்தியிருப்பதை மாட்டு மூளைக் கூட்டம் எப்போது உணரப்போகிறது?


அனிதா
நன்றி: தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க