privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்டமாணவியின் எதிர்ப்பு !

ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்டமாணவியின் எதிர்ப்பு !

நான் கற்றவை அனைத்தும் , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் கையிலிருந்து பதக்கம் பெறவேண்டுமா? என்பது குறித்த விழுமியக் குழப்பத்தில் என்னை ஆழ்த்தின.

-

டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, தலைமை நீதிபதி கையால் தங்கப் பதக்கம் பெறுவதைத் தவிர்க்க பரிசு வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (17-08-2019)  தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

அப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி சுரபி கர்வா. இவர் அரசியல்சாசன சட்டம் என்ற பிரிவில் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அரசியல்சாசன சபை விவாதங்கள் குறித்த பெண்ணிய விமர்சனத்தையே தனது ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்திருக்கிறார்.  அவரது ஆய்வுக் கட்டுரையின் மையக் கேள்வியே, “அரசியல் அமைப்புச் சட்டம் பெண்களுக்கான ஆவணம்தானா?” என்பதுதான்.

தனது முதுகலை பட்டப் படிப்பில் முதலிடம் பெற்ற சுரபி கர்வாவுக்கு, தமக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது. அதற்கான மகிழ்ச்சியில் திளைப்பதற்குள் அடுத்த செய்தி அவரை அதிர்ச்சியுறச் செய்தது. மாணவர்களுக்கு பரிசு வழங்க சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பங்கேற்கப் போகிறார் என்பதுதான் அது.

ரஞ்சன் கோகாய்-ன் கைகளால் அதைத் தாம் பெறவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தபோது, அந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற (17-08-2019) கல்லூரியில் நடைபெற்ற பரிசளிக்கும் விழாவில் சுரபி கர்வா பங்கேற்கவில்லை. அச்சமயத்தில் அவர் பணியிலிருந்தார்.

படிக்க:
ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !
♦ ” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசுகையில், “வகுப்பறையில் நான் கற்றவை அனைத்தும் என்னை கடந்த சில வாரங்களாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் கையிலிருந்து நான் பதக்கம் பெறவேண்டுமா என்பது குறித்த விழுமியக் குழப்பத்தில் என்னை ஆழ்த்தின. அவர் தலைமைதாங்கும் நீதித்துறை அவர்மீதான பாலியல் குற்றச்சாட்டைக் கைவிட்டிருக்கிறது.” என்று கூறுகிறார் சுரபி கர்வா.

மேலும், “அரசியல் சாசனத்தின் மதிப்பைக் காப்பதில், வழக்கறிஞர்களின் பங்கு குறித்து என்னை நானே கேள்வியெழுப்பிக் கொண்டு பதில் தேடினேன். அரசியல் சாசனத்தின் மதிப்பைக் காப்பது குறித்து தலைமை நீதிபதியே சில சமயங்களில் குறிப்பிட்டுள்ளார்.” என்றும் கூறியிருக்கிறார் சுரபி கர்வா.

உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியர் தலைமை நீதிபதி மீது வைத்த குற்றச்சாட்டை, நீதிமன்றம் நடத்திய விதம்தான் தலைமை நீதிபதியிடமிருந்து தாம் பதக்கத்தை வாங்குவதைத் தவிர்க்க; அந்நிகழ்ச்சியை தாம் புறக்கணித்ததற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய உச்சநீதிமன்ற பெண் ஊழியர் கொடுத்த புகாரை விசாரித்த நீதிமன்றம், ஒரு கண் துடைப்பு விசாரணைக் கமிசன் வைத்து அவ்வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தது.

புகார் அளித்த பெண்ணிற்காக வாதாட யாரையும் அனுமதிக்காத காரணத்தால் அந்த விசாரணையை புறக்கணித்து, புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.இந்த நிகழ்வைத்தான் சுரபி கர்வா குறிப்பிடுகிறார்.

அந்நிகழ்வில் பங்கேற்ற ரஞ்சன் கோகாய், பட்டம் பெறுவதை, அரசியல் சாசனத்தின் மதிப்புகளைக் காப்பதற்கான கடமையின் அழைப்பு எனக் குறிப்பிட்டார்.

இவர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கைக் கையாண்டு அரசியல் சாசனத்தின் மதிப்பைக் காத்த இலட்சணம்தான் ஊரே பார்த்து கைகொட்டி சிரித்ததே. இத்தகைய ‘யோக்கிய சிகாமணியின்’ கைகளில் இருந்து பதக்கம் பெறுவதற்கு சும்மா இருப்பதே மேல் என்று முடிவெடுத்துள்ளார் சுரபி கர்வா.

“தங்கப் பதக்கம் பெறுவதே ஒரு மதிப்புதான். இந்த நிலைக்கு என்னைக் முன்னேற்றிய எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நான் நன்றி கடமைப்பாட்டுள்ளேன். பதக்கத்தை வெற்றி பெறுவதை விட ஒரு நபரிடமிருந்து அதை வாங்குவது ஒன்றும் சிறப்பானதல்ல.” என்று கூறியிருக்கிறார் சுரபி கர்வா.

பாசிசம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் இந்நிலையில், நம் சமூகத்திற்கு இன்னும் நிறைய சுரபி கர்வாக்கள் தேவை !


நந்தன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க