வேதாரண்யம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலையை முக்குலத்துப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த தேவர் சாதிவெறியர்கள் பட்டப்பகலில் காவல் நிலையத்திற்கு முன்பாகவே உடைத்தது தமிழகம் முழுவதும் கண்டனத்துக்கு உள்ளானது. சிலையின் தலையை உடைத்து வெறிக்கூச்சலிட்ட அக்கும்பல் ஆத்திரம் அடங்காது சிலையை முழுவதுமாக தகர்க்கவும் முயன்றுள்ளது.
சிலையை உடைக்கும் அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவிய பின்னர்தான் இது பேசுபொருளானது. இப்பிரச்சினையை பல ஊடகங்களும் இரு சமூகங்களுக்கிடையிலான மோதல் என்பதாக செய்திகள் வெளியிட்டு நிறுத்திக்கொண்டன.
இவ்விவகாரம் தொடர்பாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கூறியதாவது :
வேதாரண்யத்தில் முக்குலத்துப் புலிகள் என்ற பெயரில் ஒரு கும்பலை வைத்து பிழைப்பு நடத்து வரும் பாண்டியன் என்பவர், கோவில் தேரோட்டத்தின் போது, அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை இடைஞ்சலாக இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் ஏற்கெனவே வழக்கு தொடுத்திருக்கிறார். அதுமட்டும் அல்லாது அச்சிலையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
(சிலையை நீக்க வேண்டும் எந்த் திமிராக பேட்டியளிக்கும் முக்குலத்தோர் புலிப்படை – கோப்பு காணொளி)
இவ்வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த விவகாரம் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான் அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒருவரின் திருமணத்தின் போது, இதே முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கும்பல் திட்டமிட்டு தகராறு செய்கிறது.
இந்தத் தகராறின் தொடர்ச்சியாக கடந்த 25.08.2019 அன்று ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் காலை அறிவாளால் வெட்டியுள்ளனர், முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கிரிமினல்கள். இச்சம்பவத்துக்கு சூத்திரதாரியான பாண்டி, வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு வந்திருந்த நிலையில், ராமச்சந்திரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாண்டியின் காரை அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர்.
படிக்க:
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !
இதனை எதிர்பார்த்துக் கிடந்த சாதி வெறிக் கும்பல், இதையே சாக்காக வைத்து அம்பேத்கரின் சிலையை உடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாது தாழ்த்தப்பட்ட மக்களின் கடைகளையும் சூறையாடியுள்ளது. இதற்காகவே அரிவாள் மற்றும் சிலையை உடைக்க சுத்தியல் என திட்டமிட்ட வகையில் முன் தயாரிப்புகளோடு வந்துள்ளது அக்கும்பல்.
போலீசு நிலையம் அருகிலேயே இந்த சிலை உடைப்பு சம்பவம் நிகழ்ந்த போதிலும் இதனை போலீசார் கலைக்கவில்லை. அதன் பின்னர் பல்வேறு முனைகளில் இருந்து ஜனநாயக சக்திகள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே 12 மணி நேரத்தில் அங்கு அண்ணல் அம்பேத்கர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.
சிலை உடைப்பின் போது அமைதி காத்த போலீசார், சாதி வெறியர்களின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது. ஆனாலும் வேதாரண்யம் பகுதியைத் தாண்டி பல ஊர்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
தகவல் : மக்கள் அதிகாரம், வேதாரண்யம்
***
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்ப்பு ! ஆதிக்க சாதி வெறியர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்! வேடிக்கை பார்த்த போலீசாரை பணிநீக்கம் செய்!
என்கிற முழக்கத்தை முன்வைத்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 26.08.2019 அன்று காலை கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ,
மதுரை.
வேதாரண்யத்தில் நடந்திருக்கும் அம்பேத்கர் சிலை உடைப்பு அசாதாரணமான கிரிமினல் குற்றம் மட்டுமல்ல. அது ஆதிக்க சாதிவெறி மனப்பான்மையின் வெளிப்பாடு. இந்நிலையில் அந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யக் கோரியிருக்க வேண்டும். ஆனால், மக்கள் அதிகாரம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கண்டனத் துண்டறிக்கையில் அச்சாதிவெறியர்களைக் குண்டர் சட்டத்தில் மட்டும் கைது செய்யக் கோரியிருப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? இச்சிலை உடைப்பைக் கிரிமினல் குற்றம் என்ற வகையில் மட்டுமே அணுகும் முறையின் வெளிப்பாடா இது எனக் கொள்ளலாமா?