Friday, August 19, 2022
முகப்பு செய்தி இந்தியா புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

தடை செய்யப்படாத நூலாக இருந்தாலும், அந்த நூலை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்? என கன்சால்வேசிடம் கேள்வியெழுப்பியுள்ளார், நீதிபதி.

-

பீமா கோரேகானில் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடந்த எல்கர் பரிசத் நிகழ்வில் வன்முறையை தூண்டுவிதமாகப் பேசியதாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வரவர ராவ், அருண் ஃபெரைரா, கவுதம் நவ்லாகா, வெர்னான் கோன்சால்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மோடி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாகவும்; அவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இதை ஏற்பாடு செய்ததாகவும் புனே போலீசு குற்றம்சாட்டியிருந்தது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புப் (உபா-UAPA) பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஓராண்டுகளாக அவர்கள் சிறையில் உள்ளனர். பிணை கேட்டு தொடர்ந்து மனு செய்தபோதும், பிணை வழங்கப்படாமல் இழுத்தடிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது புனே போலீசு.

1-Vernon-Gonsalves
செயல்பாட்டாளர் வெர்னான் கன்சால்வேஸ்

இந்நிலையில் கடந்த வாரம் செயல்பாட்டாளர் வெர்னான் கன்சால்வேஸ் பிணை கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை நடத்தியது மும்பை உயர்நீதிமன்றம். அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி, நாடு எத்தகைய எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்கிறது என்பதை பறை சாற்றுவதாக உள்ளது.

“ஜங்கல்மஹலில் போரும் அமைதியும்” என்ற நூல் கன்சால்வேஸ் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நூல் லால்கர் இயக்கத்தில் மாவோயிஸ்டுகளின் பங்கு குறித்தும், சி.பி.எம்- கட்சியின் துரோகம் குறித்தும் அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்டது. இந்த நூலை எழுதியவர் பிஸ்வஜித் ராய்.

பிணை மனு மீதான விசாரணையின் போது, இந்நூல் குறித்துக் குறிப்பிட்ட நீதிபதி, “‘போரும் அமைதியும்’ போன்ற நூல்களை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்?” என கன்சால்வேஸை நோக்கிக் கேட்டிருக்கிறார் நீதிபதி.

இதுகுறித்து பத்திரிகைகளில் முதல்நாள் வெளியான செய்திகளில், லியோ டால்ஸ்டாயின் ”போரும் அமைதியும் ..” என்ற நாவலை வைத்திருந்தது குறித்து  நீதிபதிகள் கடிந்து கொண்டதாக செய்தி வெளியிட்டன.  ஆனால் அடுத்த நாளில் சுதா பரத்வாஜ்-ன் வழக்கறிஞர் இது குறித்து அளித்த விளக்கத்தில், அந்நூல் பிஸ்வஜித் எழுதிய நூல் என்றும், வெளியில் லியோ டால்ஸ்டாயின் ’போரும் அமைதியும்” எனத் தவறாக குறிப்பிடப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் சோதனையின்போது முற்போக்கு கலை அமைப்பான கபிர் கலா மன்ச் வெளியிட்ட ‘ராஜ்ஜிய தமன் விரோதி’ என்ற சி.டி. -யும், மார்க்சிஸ்ட் நூல்களும், ஜெய் பீம் காம்ரேட், போரும் அமைதியும், Understanding Maoists, RCP Review போன்ற நூல்களையும் கைப்பற்றியிருக்கிறது போலீசு. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சில கடிதங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக புனே போலீசு சொன்னது.

“புனே போலீசு கைப்பற்றப்பட்டதாகச் சொல்லும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் அவரால் எழுதப்பட்டவையோ, அவருக்கு வந்தவையோ அல்ல. அடிப்படை ஆதாரங்கள் இல்லாதபோது கன்சால்வேசுக்கு பிணை மறுக்கக்கூடாது” என வாதாடினார் அவருடைய வழக்கறிஞர் மிர் தேசாய்.

படிக்க:
தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !
♦ காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த புனே போலீசின் வழக்கறிஞர், கைப்பற்றப்பட்ட சி.டி.-க்கள், நூல்கள் மிக முக்கியமான சான்றுகள்தான் என தெரிவித்துள்ளார். மின்னணு ஆதாரங்கள் எதுவும் கன்சால்வேசுக்கு எதிராக இல்லை எனவும் அவர் கூறினார்.

ஆனால், நீதிபதியைப் பொறுத்தவரை ‘போரும் அமைதியும்’ நூலே, கன்சால்வேஸ் குற்றம்செய்தவராக இருப்பதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. “இந்த நூல்களை வைத்திருப்பது கன்சால்வேஸை பயங்கரவாதி ஆக்கிவிடாது அல்லது தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்கிவிடாது” என வாதிட்டதற்கு :

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சாராங் கோட்வால்.

“ஆனாலும்…கன்சால்வேஸ் ஏன் அத்தகைய நூல்களை வைத்திருந்தார் என்பதை விளக்க வேண்டும்” என நீதிபதி கோட்வால் கேட்டிருக்கிறார். சி.டி. -க்களும் நூல்களும் கோன்சால்சுக்கு எதிராக எப்படி குற்ற ஆவணங்களாக முடியும் என புனே போலீசு சொல்கிறது என்பதையும் நீதிபதி கேட்டிருக்கிறார்.

“இதுவரை போலீசு கன்சால்வேஸ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி.-க்கள், ஆவணங்கள், துண்டறிக்கைகளுக்கும் அவர் இந்த வழக்கில் இணைக்கப்பட்டதற்கு என்ன தொடர்பு என நிரூபிக்கவில்லை. ஆட்சேபனைக்குரிய தலைப்பு மட்டுமே போதுமானது அல்ல. இந்த சி.டி. -க்களை பரிசோதித்திருக்கிறீர்கள்? உள்ளே ஒன்றும் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?” எனவும் போலீசைக் கேட்டார் நீதிபதி.

கடந்த ஆகஸ்டில் செயல்பாட்டாளர்களோடு கைதான கவிஞர் வரவர ராவின் மருமகனும் பேராசிரியருமான கே. சத்தியநாராயணா வீட்டிலிருந்து கார்ல் மார்க்ஸ், சாதி, தலித் தொடர்பான நூல்களை கைப்பற்றியது புனே போலீசு. அப்போது அவரிடம் “நீங்கள் ஏன் மவோ, மார்க்ஸ் நூல்களைப் படிக்கிறீர்கள். கத்தாரின் பாடல்களை ஏன் வைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஏன் அறிவுஜீவியாக இருக்கிறீர்கள்? ஊதியமாக பெறும் பணத்தை வைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாதா?” என்றெல்லாம் கேட்டுள்ளது போலீசு. இதேபோன்ற கேள்விகளை மற்றொரு மருகனான கே.வி. குர்மநாத்திடமும் கேட்டுள்ளனர். அவருடைய வீட்டில் இருந்தும் தலித் தொடர்பான நூல்களை ‘கைப்பற்றியுள்ளனர்’.

“புனே போலீசைப் பொறுத்தவரை அறிவுஜீவியாக இருப்பவர்கள் ஆபத்தானவர்கள். ஒருவேளை என்னுடைய நூலகத்தைப் பார்த்தால் அதுவே குற்றச்சாட்டு ஆதாரம் ஆகிவிடுமா?” என கேட்கிறார் பத்திரிகையாளர் சித்தார்த் பாட்டியா.

படிக்க:
கால்கள் அற்றவன் நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான் !
♦ லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்

“நேருவை இந்திய வரலாற்றிலிருந்து துடைத்தெடுக்கும் பணியில் உள்ளது இந்த அரசு. நேரு குறித்த அதிக எண்ணிக்கையிலான நூல்களை வைத்திருக்கும் என் மேல் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தாலும் வியப்புகொள்ள முடியாது. கார்ல் மார்க்ஸின் மூலதனமும் அவருடைய மகள் எழுதிய இரண்டு மூன்று நூல்கள் வைத்திருப்பது. என்னை மார்க்சியவாதியாக்க போதுமானவை.” என்கிற அவர், “உங்கள் வீட்டில் உள்ள எந்த நூலின் தலைப்பும் அரசு உங்களை கைது செய்யப் போதுமானவையே” என்கிறார்.

மேலும், “ஏன் குற்றம் தொடர்பான நாவல்களை வைத்திருக்கிறீர்கள் ? அதுகூட உங்களுடைய குற்ற எண்ணத்தோடு தொடர்புடையது” என போலீசு குற்றம்சுமத்தலாம் எனவும் விமர்சித்துள்ளார் பாட்டியா.

”குடிமக்களின் ஒவ்வொரு அசைவிலும் அவர்கள் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த மொழியை பேச வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், யாரை காதலிக்க வேண்டும்/திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அரசு கட்டுப்படுத்துகிறது. நாம் என்ன படிக்க வேண்டும் என கட்டளையிட இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும். எந்த நூலை வாங்கும் போதும் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டு நூலை வாங்குங்கள் என்கிற சட்டம் கொண்டுவந்தால், பிரச்சினை முடிந்தது” எனவும் காட்டமாகிறார்.

தன்னை விமர்சிப்பவர்களை, தன்னுடைய மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பவர்களை ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்த திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது அரசு. செயல்பாட்டாளர்கள் படிப்பது, எழுதுவதைக்கூட குற்றத்துக்கான ஆதாரமாக சேகரிக்கிறது அரசின் போலீசுத்துறை. வரவிருக்கிற ஐந்தாண்டுகளில் இந்துத்துவ பாசிஸ்டுகள் இன்னும் கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவ இருக்கிறார்கள் என்பதற்கான மோசமான அறிகுறி இது.

கலைமதி
நன்றி :  தி வயர் , இந்தியா டுடே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க