லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 4

லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் !
வி.இ.லெனின்

டால்ஸ்டாய் சார்ந்திருந்ததும், அவர் தமது அற்புத இலக்கிய நூல்களிலும் போதனைகளிலும் மிகவும் தெளிவாகப் பிரதிபலித்ததுமான சகாப்தம் 1261-க்குப் பிறகு துவங்கி 1905 வரை  நீடித்தது. உண்மையில், டால்ஸ்டாய் தமது இலக்கிய வாழ்க்கையினை இதற்கு முன்னரே துவங்கினார். அது பின்னால்தான் முடிவுற்றது. எனினும் டால்ஸ்டாயின் நூல்கள், டால்ஸ்டாயிசம் இவற்றின் தனிச்சிறப்பு அம்சங்கள் அனைத்தும் எழுச்சியுற்ற மாறுதல் தன்மையுடைய இந்தக் காலகட்டத்தில்தான் அவர் ஒரு கலைஞர் என்ற முறையிலும் சிந்தனையாளர் என்ற முறையிலும் முழுமையான முதிர்ச்சியடைந்தார் என்பதைக் காட்டுகின்றன.

அன்னா கரினினா  நவீனத்தில் வரும் லெவின் என்னும் பாத்திரத்தின் மூலம், டால்ஸ்டாய் இந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட ரஷ்ய வரலாற்றின் திருப்பத்தின் இயல்பைத் தெளிவாக வெளியிட்டுள்ளார்.

“அறுவடை, தொழிலாளர்களைக் கூலிக்கமர்த்தல், இத்தியாதி பற்றிய பேச்சினை மிகவும் தாழ்ந்த ஒன்றாகக் கருதும் வழக்கம் இருந்ததை லெவின் அறிவார்.”  இது இப்போது லெவினுக்கு ஒரே முக்கிய விஷயமாகத் தோன்றியது. “இது அடிமைச் சமுதாயத்தில் முக்கியமல்லாததாக இருக்கலாம், இங்கிலாந்தில் முக்கியமற்றதாக இருக்கலாம். இரண்டின் கீழும் நிலைமைகள் திட்டவட்டமானது. ஆனால், இங்கு இன்று எல்லாம் தலைகீழாகப் புரண்டு போய், மீண்டும் உருவாகி வருகிற பொழுதில் இந்த நிலைமைகள் எவ்வாறு உருவாகும் என்பது மட்டுமே ரஷ்யாவிலுள்ள முக்கிய பிரச்சினை” என்றார்  லெவின். (தொகுப்பு நூல்கள் பாகம் 10, பக்.137)

“இங்கு ரஷ்யாவில் யாவும் தலைகீழாகப் புரட்டப்பட்டிருக்கிறது.”, ”இப்போதுதான் உருவாகி வருகிறது ” 1861-1905 காலகட்டத்தினை இதைவிடப் பொருத்தமாகச் சிறப்பித்துக் காட்டுவது என்பதைக் கற்பனை செய்வதே கடினம். “தலைகீழாகப் புரட்டப் பட்டது” என்ன என்பது ஒவ்வொரு ரஷ்யனுக்கும் பழக்கமானது. குறைந்தபட்சம் நன்றாகத் தெரிந்த ஒன்று. இது அடிமை அமைப்பும் அதோடு சேர்ந்த “பழைய ஏற்பாடும்” முழுமையாக இருப்பது. “தற்போது உருவாகி வருவது” என்ன என்பது மக்கள் தொகையின் விரிவான பகுதிகளுக்கு முற்றிலும் தெரியாதது, அந்நியமானது, விளக்கமற்றது . ஒரு போலி வடிவத்தில் இங்கிலாந்தில் “இப்போதுதான் உருவாகி வருகிற” இந்த பூர்ஷுவா அமைப்பினை டால்ஸ்டாய் கருவில் கண்டார். உண்மையில் இது வெறும் போலி. ஏனெனில் இந்த “இங்கிலாந்தில்” காணப்பெறும் சமூக அமைப்பின் அம்சங்களையோ, இந்த அமைப்புக்கும் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியோ, பணம் வகிக்கும் பாத்திரம், பண்டமாற்றின் எழுச்சி வளர்ச்சி பற்றி ஆராய்வது என்று முயற்சியைக் கோட்பாட்டளவில் அவர் நிராகரிக்கிறார். நரோத்னி (55) க்குகளைப் போன்று அவர் பார்க்க மறுக்கிறார். “ரஷ்யாவில் உருவாகி வருவது“ பூர்ஷூவா அமைப்பே தவிர வேறன்று என்று பாராது கண்ணை மூடிக் கொண்டு அந்த எண்ணத்தையே விலக்கிவிட்டார்.

“ஒரே முக்கிய“ பிரச்சினை இல்லாவிடினும், 1861-1905 திட்டத்தில் (நமது காலத்திலும் கூட) ரஷ்யாவிலான அனைத்து சமூக அரசியல் செயல்பாடுகளின் உடனடிக் கடமைகள் என்ற கருத்தோட்டத்திலிருந்து பார்க்கும்போது முக்கியமாக இருக்கிற பிரச்சினை இந்த அமைப்பு  “எவ்வித உருவம்“ எடுக்கும் என்பதே. இந்தப் பூர்ஷூவா அமைப்பு “இங்கிலாந்து”, ஜெர்மனி,  அமெரிக்கா, பிரான்ஸ் இத்தியாதி நாடுகளில் மிகவும் வேறு வேறான வடிவங்களை எடுத்துள்ளது. ஆனால், பிரச்சினையை இவ்வாறு திட்டவட்டமாயும் ஸ்தூலமாயும் வரலாற்று ரீதியிலும் விளக்குவது என்பது டால்ஸ்டாய்க்கு முற்றிலும் புறம்பான ஒன்று. அவர் ஸ்தூலமற்ற முறையில் வாதிடுகிறார். சீலத்தின் அழியாத கோட்பாட்டின் நிலைகளை, சமயத்தின் அறியாத உண்மைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார். இந்தக் கருத்தோட்டத்தை அடையத் தவறுவது, பழைய அமைப்பின் சித்தாந்தப் பிரதிபலிப்பே (தலைகீழாகப் புரட்டப்பட்டது) நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ்த்திசை மக்களின் வாழ்க்கை முறையின் சித்தாந்தப் பிரதிபலிப்பேயாகும்.

லூசர்னே (1857-ல் எழுதப்பட்டது) என்ற நூலில் டால்ஸ்டாய் நாகரிகத்தை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுவது ஒரு “கற்பனைக் கருத்து ” “அது மனித இயல்பின் உள்ளார்ந்து கிடக்கும் நன்மை புரிதல் என்ற ஆதிகால இன்பகரத் தேவையினை அழிக்கும்” என்று கூறுகிறார். தவறாத வழிகாட்டி ஒன்றே ஒன்று தான், ” நம்மைப் பரிணமித்துக் கொண்டிருக்கும் உலக உணர்வு” என்கிறார் டால்ஸ்டாய். (தொகுப்பு நூல் II, பக்.125)

நமது காலத்தின் அடிமைத்தனம் (1900-ல் எழுதியது) என்ற நூலில் டால்ஸ்டாய் இந்த உலக உணர்வுக்கு மிகுந்த ஆர்வத்தோடு வேண்டுகோள் விடுக்கிறார். அரசியல் பொருளாதாரம் “ஒரு போலி விஞ்ஞானம்”,  ஏனெனில் அது மிகவும் “தனிச் சிறப்புடைய நிலைமைகளைக் கொண்ட இங்கிலாந்தை” ஒரு மாதிரியாக ஏற்கின்றது. உலகம் முற்றிலுமுள்ள வரலாறு முழுவதிலுமுள்ள மக்கள் நிலைமையினை மாதிரியாகக் கொள்ளவில்லை என்று கூறுகின்றார்.

முன்னேற்றமும் கல்வி பற்றிய வரையறுப்பும்”, (1862) என்ற நூலில் இந்த முழு உலகம் எப்படி இருக்கும் என்பது நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. “கீழ்த்திசை என்று அறியப்படுவதை” குறிப்பிட்டு, ”முன்னேற்றம் என்பது மனித குலத்தின் பொது விதி” என்ற வரலாற்றாசிரியர் கருத்தை டால்ஸ்டாய் எதிர்க்கிறார். ”மனித முன்னேற்றம் என்ற ஒரு பொது விதி கிடையாது. இதைக் கீழ்த்திசை மக்களின் அமைதி நிரூபிக்கின்றது ” என்கிறார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயிசம் அதன் உண்மையான வரலாற்று உள்ளடக்கத்தில் ஒரு கீழ்த்திசை ஆரிய அமைப்பின் சித்தாந்தமாகும். எனவே, துறவு, தீமையை எதிர்க்காமை, தோல்வி மனப்பான்மையின் ஆழ்ந்த குறிப்புகள்,  “எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் பெளதீகரீதியில் ஒன்றுமில்லை (“வாழ்க்கையின் பொருள்” பக்.52) “ஆன்மாவில் நம்பிக்கை எல்லாவற்றின் துவக்கத்தில் நம்பிக்கை, மனிதன் இந்தத் துவக்கத்துடனான தனது உறவில் வெறும் “உழைப்பாளியாக… தனது சொந்த ஆத்மாவினைக் காத்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

”கிரீட்சர் சொனாட்டா”  என்னும் நூலிலும் டால்ஸ்டாய் இந்தச் சித்தாந்தத்திற்கு உண்மையாக நடந்து கொள்கிறார். அவர் கூறுகின்றார்: “மகளிர் விடுதலை என்பது கல்லூரிகளில் இல்லை; பார்லிமெண்டுகளில் இல்லை; ஆனால், படுக்கை அறைகளில் இருக்கிறது.”  1862-ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் பல்கலைக் கழகங்கள்  “எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை” மட்டுமே பயிற்றுவிக்கின்றன, அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது.” மக்கள் முன்னால் சுற்றுச் சார்பிலிருந்து பயனற்ற முறையில் பிரிக்கப்பெற்று வாழ்க்கையில் எவ்வித இடத்தையும் பெறுவதில்லை,” என்று பலபடக் கூறுகின்றார். (IV பக் 136-137).

பழைய அமைப்பு தலைகீழாகப் புரட்டப் பெற்றுள்ள சகாப்தத்தில் தோல்வி மனப்பான்மை, எதிர்த்துப் போராடாமை, “உணர்வு”க்கு வேண்டுகோள் என்ற சித்தாந்தம் தவிர்க்க முடியாததாக உள்ளது . இந்தப் பழைய அமைப்பின் கீழ் வளர்க்கப்பெற்ற வெகுஜனங்கள் தமது தாய்ப்பாலுடன் கூடவே, இந்த அமைப்பின் கோட்பாடுகள், வழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகளைத் தன்வயப்படுத்தியிருந்தார்கள். எத்தகைய புதிய அமைப்பு “உருவாகி வருகிறது” என்னென்ன சமூக சக்திகள் “உருவாகி வருகின்றன” என்பனவற்றையும் இந்தச் சகாப்தத்தின் எழுச்சியின் தனி இயல்புகளான மிகவும் கடுமையான அளவிடற்கரிய துன்ப துயரங்களிலிருந்து விடுதலையைக் கொண்டு வரும் ஆற்றல் உடைய சக்திகள் யாவை, அவை எப்படி, செயல்படும் என்பதையும் பார்ப்பதில்லை; பார்க்க முடியாது.

1862-1904 காலகட்டம் ரஷ்யாவில் அத்தகைய எழுச்சிகளைக் கண்ட கட்டமாகும். இந்தக் கட்டத்தில் அனைவரின் கண் முன்னும் பழைய அமைப்பு இனி என்றுமே மீள முடியாத வகையில் சரிந்தழிந்தது. புதிய அமைப்பு இப்போதுதான் உருவாகி வரத் தொடங்கியது. 1905-ல்தான் பல்வேறு துறைகளில் விரிவான நாடு தழுவிய அளவில் வெகுஜனப் பொதுப் போராட்டமாக இந்தப் புதிய அமைப்பினை உருவாக்கும் சமுதாயச் சக்திகள் முதன் முதலாக வெளிப்பட்டன.

1905-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அந்தக் “கீழ்த்திசை”‘யிலேயே 1862-ல் டால்ஸ்டாய் குறிப்பிட்ட அமைதியின் பிரகாரம் பல நாடுகளின் அதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1905-ம் ஆண்டு “கீழ்த்திசை” அமைதியின் முடிவின் துவக்கத்தைக் குறித்தது. குறிப்பாக இந்தக் காரணத்துடனே அவ்வாண்டு டால்ஸ்டாயிசத்தின் வரலாற்று முடிவினை, டால்ஸ்டாய் போதனைகளைப் பிறப்பித்த சகாப்தத்தின் முடிவினைக் குறித்தது. இவை ஏதோ தனிப்பட்ட நபரின் மனம்போன போக்கு, பற்று வெறி என்ற நிலையில் அன்றி, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் லட்சோப லட்சம் மக்கள் எதார்த்தத்தில் வாழ்வு நடத்திய நிலைமைகளின் சித்தாந்தம் என்ற வகையில் இது தவிர்க்க முடியாததாகக் காட்சியளித்தது.

டால்ஸ்டாயின் சித்தாந்தம் நிச்சயமாயும் கற்பனாவாதமாகும். அதன் உள்ளடக்கம் பிற்போக்கானது என்பதை மிகவும் துல்லியமாயும் ஆழ்ந்த பொருளிலும் காணலாம். ஆனால் இந்தச் சித்தாந்தம் சோஷலிசத் தன்மைக் கொண்டதல்ல  என்றோ, முன்னேற்றமடைந்த வர்க்கங்களுக்கு விழிப்பூட்டுவதற்கான பயனுள்ள கருத்துகளை அளிக்கும் ஆற்றலுடைய விமர்சனக் கூறுகளை உள்ளடக்கியிருக்கவில்லை என்றோ பொருளல்ல.

பல்வேறு வகையான சோஷலிசம் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவும் எல்லா  நாடுகளிலும் பூர்ஷுவா வர்க்கத்தை அகற்றி அதனிடத்தில் வரவிருக்கும் வர்க்கத்தின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் சோஷலிசம் உள்ளது. நிலப் பிரபுத்துவ சோஷலிசம் பிந்திய வடிவிலான சோஷலிசத்திற்கு உதாரணம். இந்த சோஷலிசத்தின் தன்மை நெடு நாள்களுக்கு முன்னால் அறுபதாண்டுகளுக்கு முன்பாகவே மார்க்சினால், இதர வடிவிலான சோஷலிசத்தை (56) மதிப்பீடு செய்த அதே சமயத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும், டால்ஸ்டாயின் கற்பனைவாத சித்தாந்தத்தில் உள்ளார்ந்து கிடக்கும் விமர்சனக் கூறுகளும் பல கற்பன அமைப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் விமர்சனக் கூறுகள் போலவே காணக் கிடக்கின்றன, கற்பனா சோஷலிசத்திலுள்ள விமர்சனக் கூறுகளின் மதிப்பு  “வரலாற்று வளர்ச்சிக்கு எதிரான உறவுகளைக் கொண்டிருக்கின்றது” என்ற மார்க்சின் அறிவார்ந்த கருத்தை நாம் மறந்து விடக்கூடாது. புதிய ரஷ்யாவை உருவாக்கி, இன்றைய சமூகத் தீமைகளிலிருந்து விடுதலை கொண்டு வரும் சமுதாய சக்திகளின் செயல்பாடுகள் மேலதிகமாக வளர்ச்சியடைந்து திட்டவட்டமான தன்மையினைப் பெறும் அளவுக்கு “விமரிசனரீதி – கற்பனா சோஷலிசம் அனைத்து நடைமுறை மதிப்பினையும், தத்துவார்த்த நியாயத்தையும் இழந்துவிடும்” (57)

படிக்க:
சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

கால் நாற்றாண்டுக்கு முன்பாக, டால்ஸ்டாய் சித்தாந்தத்தின் விமரிசனக் கூறுகள், பிற்போக்கு கற்பனை அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் மக்கள் தொகையின் சில பகுதிகளுக்குச் சில சமயங்களில் நடைமுறை பயனுடையனவாக விளங்கின. இது கடந்த பத்தாண்டில் நடந்திருக்க முடியாது. காரணம் வரலாற்று வளர்ச்சி 1880 -ஐ ஒட்டிய ஆண்டுகளுக்கும் கடந்த நூற்றாண்டின் இறுதியாண்டுகளுக்கும் இடையே கணிசமான முன்னேற்றத்தினை அடைந்திருந்தது. நமது காலத்தில் மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சித் தொடர்கள் நமது காலத்தில் கீழ்த்திசை அமைதிக்கு முடிவுகட்டிவிட்டன. வெக்கிகளின் (குறுகிய வர்க்க சுயநல வர்க்கப் பிற்போக்காளர்) உணர்வுபூர்வமான பிற்போக்குக் கருத்துகள் மிதவாத பூர்ஷ்வாக்களிடையில் மிகப்பெருமளவில் பரவின.

ஏறத்தாழ மார்க்சியவாதிகளானவர்களில் ஒரு பகுதியினரைக் கூட இந்தக் கருத்துகள் பீடித்தன. ஒரு குலைவுப் போக்கினை (58)ச் சிருஷ்டித்தன. இந்த நிலையில் டால்ஸ்டாயின் சித்தாந்தத்தை லட்சியவாதமாகச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அவரது  “எதிர்த்துப் போராடாமை” கோட்பாட்டினை நியாயப்படுத்தல் மன்னித்தல் செய்வதும், ஆன்மிக சக்திக்கு வேண்டுகோள் விடுத்தலும், “ஒழுக்கமுறை சுய நிறைவு”க்கான அவரது “வேண்டுகோள்களும்” “அவரது மனச்சாட்சி”, உலக  “அன்பு” என்ற கோட்பாடும், துறவறம் அமைதிவாதம் போன்றவற்றைப் பற்றிய அவரது பிரச்சாரமும் நமது காலத்தில் மிகவும் நேரடியான மிகவும் ஆழமான பாதகத்தை விளைக்கும்.

– லெனின், (ஜனவரி 22, 1911-ல் எழுதியது)(ஸ்வெஸ்தா, நெ.6, ஜனவரி 22, 1911, ஒப்பம் : வி.இ. லெனின்)
(தொகுப்பு நூல்கள், பாகம் 17, பக்கம் 49-53)

அடிக்குறிப்புகள்:

55: நரோத்னிக்குகள் – நரோதிசத்தின் ஆதரவாளர்கள்; 19-ம் நாற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் ரஷ்யாவில் தோன்றிய ஓர் அரசியல் போக்கு. அவர்களுடைய உலகக் கண்ணோட்டத்தில் பிரதான அம்சங்கள் புரட்சிகர இயக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை மறுப்பதும், சிறு உடைமையாளர்களும் விவசாயிகளும் சோஷலிசப் புரட்சியை நடத்த முடியும் என்பதும் ஆகும். சமுதாயத்தின் மெய்யான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிராததாலும், வெறும் நேர்த்தியான சொற்கள், கற்பனைகள், உன்னதமான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததாலும், நரோத்நிக்குகளின் சோஷலிசம் கற்பனைவாதமாயிருந்தது.
எண்பதாம் ஆண்டுகளிலும், தொண்ணூறாம் ஆண்டுகளிலும் நரோத்னிக்குகள் ஜாரிசத்துடன் சமரசம் செய்து கொள்வதற்குத் தயாராய் இருந்தனர். குலக்குகளின் நலன்களைப் பிரதிபலித்து மார்க்சியத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி வந்தனர்.

56: கே. மார்க்ஸ், எப். எங்கல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை அத்தியாயம் III பற்றிய குறிப்பு இது.

57: கே. மார்க்ஸ், எப். எங்கல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை (மார்க்ஸ், எங்கல்சின் தொகுப்பு நூல்கள், பாகம்.1, மாஸ்கோ, 1962, பக்.63ஐப் பார்க்கவும்)

58: குலைவு வாதம் – 1905-07 புரட்சியின் தோல்விக்குப் பிறகு மென்ஷிவிக் – சமூக ஜனநாயகவாதிகளிடையே தோன்றிய ஒரு சந்தர்ப்பவாத போக்கு அதன் ஆதரவாளர்கள் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர சட்டவிரோதக் கட்சியின் கலைப்பையும் அதற்குப் பதிலாக ஜார் உத்தவின் பேரில் சட்ட பூர்வமாகச் செயல்படும் சந்தர்ப்பவாதக் கட்சி நிறுவப்படுவதையும் கோரினர். புரட்சியின் லட்சியத்தைக் காட்டிக் கொடுத்த குலைவு வாதிகளை லெனினும், இதர போல்ஷிவிக்குகளும் இடைவிடாது அம்பலப்படுத்தினர். இந்தக் குலைவு வாதிகள் தொழிலாளிகளின் ”ஆதரவைப் பெறத் தவறினர். இவர்கள் 1911 ஜனவரியில் ர.ச.இ.தொ. கட்சியின் பிராக் மாநாட்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க