லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 3

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும்

வி.இ.லெனின்

டால்ஸ்டாய் ஆளும் வர்க்கங்கள் பற்றிய கண்டனத்தை பிரம்மாண்ட வலுவுடன் நேர்மையுடன் தொடுத்தார். முழுமையான தெளிவுடன் நவீன சமூக அமைப்பு நிலைபெற்று வருகிற சமயபீடம், நீதிமன்றங்கள், ராணுவம் “சட்டபூர்வ” திருமணம், பூர்ஷூவா விஞ்ஞானம் போன்ற அமைப்புகளின் உள்போலித் தனத்தை அம்பலப்படுத்தினார்.

ஆனால், அவரது சித்தாந்தம் நவீன சமுதாய அமைப்பிற்குப் புதைக்குழி தோண்டும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை, பணி, போராட்டம் இவற்றுக்கு முற்றிலும் முரண்பாடாக இருந்தது.

அப்படியானால் லியோ டால்ஸ்டாயின் போதனைகள் யாருடைய கருத்துகளைப் பிரதிபலித்தன?

நவீன வாழ்வின் எஜமானர்களை ஏற்கெனவே வெறுக்கிற ஆனால் அவர்களை எதிர்த்துப் புத்திபூர்வமான முரணற்ற முழுமையான தவிர்க்க முடியாத போராட்டத்திற்கு இன்னும் முன்னேறியிராத ரஷ்யாவின் லட்சோப லட்ச வெகுஜனங்கள் அவரது குரலில் பேசினார்கள்.

மகத்தான ரஷ்யப் புரட்சியின் வரலாறும் விளைவும் வர்க்க போதமுள்ள சோஷலிசத் தொழிலாளி வர்க்கத்திற்கும், பழைய ஆட்சியின் பூரணமான ஆதரவாளர்களுக்கும் இடையே வெகுஜனங்கள் இருத்தலைக் காட்டியது. பிரதானமாயும் விவசாயிகளைக் கொண்ட இந்த வெகுஜனப் பகுதி, பழமையின்பால் தமக்குள்ள மிகப் பெரிய பகைமை எத்துணை என்பதையும், நவீன ஆட்சியின் கொடுமைகளை எத்துணைக் கடுமையாக அனுபவித்தன என்பதையும், அவற்றை ஒழித்துக் கட்டி, மேலும் சிறப்பான வாழ்க்கையினை நாடவும் அவர்களிடை இயல்பாகவே உள்ள ஆர்வம் எத்துணைப் பெரிதாக இருக்கிறது என்பதையும் புரட்சியில் காட்டியது.

எனினும், அதே சமயம் புரட்சியில் இந்த வெகுஜனப் பகுதி தனது பகைமை விஷயத்தில் போதிய அளவு அரசியல் போதம் பெற்றிருக்கவில்லை, போராட்டத்தில் முரணற்றதாக விளங்கவில்லை. மேலும் சிறப்பான வாழ்வு பற்றிய அதன் தேட்டம் குறுகிய எல்லைகளுக்குள் கட்டுப்பட்டதாக இருந்தது என்பதையும் காட்டியது.

இந்த மாபெரும் மனிதக் கடல் தனது அடியாழம் வரையில் கிளர்ச்சியுற்றிருந்தது. அதன் பலவீனங்களும் திண்மையான அம்சங்களும் எதுவாக இருப்பினும் அவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் பிரதிபலித்தன.

டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும். ஆனால், டால்ஸ்டாயின் சித்தாந்தத்தைப் பரிசீலிக்கும்போது ரஷ்ய மக்கள் அனைவரும் தமது சொந்த பலவீனம், தமது விடுதலை லட்சியத்தை முடிவுவரையில் நிறைவேற்ற அனுமதிக்காத பலவீனம், எங்கே கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். முன்னேறிச் செல்வதற்கு இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

டால்ஸ்டாயை ஓர் “உலக மனச்சாட்சி’’ என்றும் “வாழ்க்கையின் போதகர்” என்றும் பிரகடனம் செய்வோர்களால் இந்த முன்னேற்றம் தடைப்படுகிறது. டால்ஸ்டாய் சிந்தாந்தத்தின் புரட்சி எதிர்ப்பு அம்சங்களைப் பயன்படுத்தும் விருப்பத்தால் மிதவாதிகள் திட்டமிட்டுப் பரப்புகிற பொய் இதுவாகும். டால்ஸ்டாயினை “ஒரு வாழ்க்கையின் போதகர்” எனப்படும் பொய்யினை மிதவாதிகளைத் தொடர்ந்து ஒருசில முன்னாள் சமூக ஜனநாயகவாதிகளும் திரும்பக் கூறுகிறார்கள்.

படிக்க:
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !

ஒரு மேம்பட்ட வாழ்க்கையினை வென்று பெறுவது டால்ஸ்டாயிடமிருந்ததன்று –  மாறாக, டால்ஸ்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கத்திடமிருந்தே பெற முடியும். அதன் முக்கியத்துவத்தை டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை. அந்த வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும்.

– லெனின்
டிசம்பர் 1, 1910-ல் எழுதியது
தொகுப்பு நூல்கள் பாகம் 16, பக்கம் 353 – 54

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

முந்தைய பாகம் :

பாகம் 1 : லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
பாகம் 2 : விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க