உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 03

தெள்ளத் தெளிந்த ஆகஸ்டு மாத நண்பகல். அமைதி கொலுவீற்றிருந்தது. இயற்கையில் எல்லாம் மெருகேற்றப்பட்டுப் பளிச்சிட்டன. ஆயினும் இந்தத் தளதளப்பு வாடிவிடும் என்ற உள்ளார்ந்த துயரத்தை இன்னும் புலப்படாத எவையோ அறிகுறிகளால் வெதுவெதுப்பான காற்றில் இப்போதே உணர முடிந்தது. புதர்களுக்கு இடையே வளைந்து நெளிந்து சென்ற ஓடை போன்ற சிற்றாற்றின் சிறு மணற்கரையில் அந்த நண்பகலில் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள் சில விமானிகள்.

வெக்கையினால் சோர்ந்து அவர்கள் உறங்கி வழிந்தார்கள். களைப்பறியாத புர்நாஸியான்கூட, காயத்துக்குப் பின் சரியாகப் பொருந்தாத தனது ஊனமுற்ற காலைக் கதகதப்பான மணலில் புதைத்த வண்ணம் மெளனமாயிருந்தான். வெளியார் பார்வையில் படாமல் சாம்பல் நிறக் கொட்டை மர இலைகளின் மறைவில் அவர்கள் படுத்திருந்தார்கள். ஆனால் புல்லில் நீண்டு சென்றிருந்த ஒற்றையடிப் பாதை அவர்களுக்குத் தெரிந்தது. தனது காலுடன் சீராடிக் கொண்டிருந்த புர்நாஸின் தன்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு காட்சியை அந்தப் பாதையில் கண்ணுற்றான்.

ஆரோக்கிய நிலையத்துக்கு முந்திய நாள் வந்த இளைஞன் கோடிட்ட பைஜாமாக் காற்சட்டையும் பூட்சுகளும் அணிந்து சட்டை போடாமல் திறந்த மேனியாகச் சோலையிலிருந்து வெளிப்பட்டான். சுற்றும் முற்றும் கண்ணோட்டினான். எவரும் பார்வையில் படவில்லை. திடீரென அவன் முழங்கைகளை விலாக்களில் சேர்த்துப் பொருத்தியவாறு விந்தையாகத் துள்ளி ஓடத் தலைப்பட்டான். ஓர் இருநூறு மீட்டர்கள் ஓடிய பின், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்ட, நடக்கத் தொடங்கினான். சற்று இளைப்பாறிய பிறகு மறுபடி ஓடினான். ஓட ஓட விரட்டப்பட்ட குதிரையின் விலா போன்று அவனுடைய மேனி பளபளத்தது. புர்நாஸின் ஒன்றும் பேசாமல் தன் தோழர்களுக்கு ஓடுபவனைச் சுட்டிக் காட்டினான். புதர் மறைவிலிருந்து அவர்கள் அவனைக் கவனிக்கலாயினர். சிக்கலற்ற இந்த உடற்பயிற்சியால் புதியவனுக்கு மூச்சு திணறிற்று, அவன் முகம் வலியினால் சுளித்தது. சில வேளைகளில் அவன் முனகினான், எனினும் மேலும் மேலும் ஓடிய வண்ண மாயிருந்தான்.

“யார் இந்த சர்கஸ்காரன்? மூளை புரண்டவனா?” என்று விளங்காமல் வினவினான் புர்நாஸியான்.

தூக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்துக்கொண்ட மேஜர் ஸ்த்ருச்கோவ் விளக்கினான்:

“அவனுக்குக் கால்கள் இல்லை. பொய்க்கால்களில் பயிற்சி செய்கிறான். சண்டை விமானப்படைக்குத் திரும்ப விரும்புகிறான்.”

இதைக் கேட்டதும், சோர்ந்திருந்த அந்த ஆட்களுக்குக் குளிர் நீரை மேலே கொட்டியது போல் இருந்தது. அவர்கள் துள்ளி எழுந்தார்கள், ஏக காலத்தில் பேச ஆரம்பித்தார்கள். விந்தையான நடையைத் தவிர வேறு எதையும் தாங்கள் எவனிடம் காணவில்லையோ அந்த இளைஞன் கால்கள் இல்லாதவன் என்ற சேதி எல்லோரையும் பெரு வியப்பில் ஆழ்த்தியது. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தை ஓட்டுவது என்ற அவனது எண்ணம் அசட்டுத்தனமாக, நம்ப முடியாததாக, துடுக்கானதாகக்கூட அவர்களுக்குப் பட்டது. கை விரல்கள் இரண்டை இழந்ததற்காக, நரம்புக் கோளாறுக்காக, அல்லது தட்டைப் பாதங்களுக்காக, இவை போன்ற அற்ப விஷயங்களுக்காக ஆட்கள் விமானப்படையிலிருந்து விலக்கப்பட்ட நிகழ்ச்சிகளை அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள். விமானிகளின் உடல்நலம் எப்போதுமே, போர்க்களத்தில் கூடக் கடினமான நிபந்தனைகளின் படி பரிசோதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் மற்ற பிரிவினரிடம் கோரப்பட்ட நிபந்தனைகளுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதபடி கடினமாயிருந்தன. தவிர, சண்டை விமானம் போன்ற நுட்பமான, துல்லியமான இயந்திரத்தைப் பொய்க்கால்களைக் கொண்டு இயக்குவது சற்றும் இயலாததாகத் தோன்றியது.

மெரேஸ்யெவின் எண்ணம் ஈடேறாது என்பதில் எல்லோரும் ஒத்த கருத்து கொண்டிருந்தார்கள்.

“உன் நண்பன் ஒன்று கடைத்தேற வகையற்ற மூடன் அல்லது மாபெரும் மனிதன். நடுத்தர நிலை அவனுக்குக் கிடையாது” என்று விவாதத்தை முடித்தான் புர்நாஸியான்.

சண்டை விமானம் ஓட்டுவதற்கு ஆசைப்படும் கால்களற்ற மனிதன் ஒருவன் ஆரோக்கிய நிலையத்தில் தங்கியிருக்கும் செய்தி கணப்போதில் எல்லா அறைகளுக்கும் பரவிவிட்டது. மதியச் சாப்பாட்டு வேளைக்குள் அலெக்ஸேய் எல்லோருடைய கவனத்துக்கும் நடுநாயகமாக விளங்கினான். ஆனால் இந்த விஷயத்தை அவன் கவனிக்கவில்லை போலத் தோன்றியது. சாப்பாட்டு மேஜையில் அக்கம் பக்கத்தவர்களுடன் அவன் கலகலவென்று சிரித்துப் பேசினான், ஆர்வத்துடன் நிறையச் சாப்பிட்டான், வனப்பு வாய்ந்த பரிசாராகிகளுக்கு வழக்கப்படி கணக்காகப் பாராட்டுரைகள் பகர்ந்தான், தோழர்களுடன் பூங்காவில் உலாவினான், மரப்பந்து ஆடக் கற்றுக்கொண்டான், வாலிபால் கூட விளையாடினான். இவற்றை எல்லாம் கண்டு, கேட்டவர்கள் விரைவற்ற துள்ளுநடை தவிர வேறு எதுவும் அசாதாரணமானது அவனிடம் இருப்பதாக நினைக்கவில்லை. அவன் மிக மிகச் சாதாரணமான ஆள். ஜனங்கள் எடுத்த எடுப்பிலேயே அவனுக்குப் பழக்கமாகிவிட்டார்கள், அவன் மீது கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டார்கள்.

பொய்க்கால்களைத் தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான் அவன்.
புதிதாகக் கற்றுத் தேர்ந்த
ஒவ்வொரு ஜதிவரிசையும்
அவனுக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளித்தது.
ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று
அவனுக்குக் களிப்பூட்டியது.

ஆரோக்கிய நிலையத்துக்கு வந்த இரண்டாம் நாள் பிற்பகலில் அலெக்ஸேய், அலுவலகத்தில் ஸீனாவிடம் போனான். சடங்கு பாராட்டாமல் மேஜையருகே உட்கார்ந்து, அவள் தனது வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறாள் என்று கேட்டான்.

“எந்த வாக்குறுதி?” என்று விற் புருவங்களை உயர நிமிர்த்தி வினவினாள் ஸீனா.

“எனக்கு நடனமாடக் கற்றுத்தருவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள்.”

“ஆனால்…” என்று மறுதலிக்கப் பார்த்தாள் அவள்.

“நீங்கள் கற்பிப்பதில் பெருத்த திறமைசாலி என்று சொன்னார்கள். கால்கள் இல்லாதவர்கள் உங்களிடம் நடனம் ஆடுவார்களாம், மாறாக, சாதாரணமானவர்கள் கார்களை மட்டுமல்ல, இதயத்தையே பறிகொடுத்து விடுவார்களாம், பேத்யாவைப் போல. எப்போது தொடங்குவோம்? வீணாக நோத்தைக் கழிக்க வேண்டாம், சொல்லுங்கள்.”

இந்தப் புது ஆள் நிச்சயமாக அவளுக்குப் பிடித்து விட்டான். கால்கள் அற்றவன், நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான்! ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது?

ஸீனாவின் வாழ்க்கையில் நடனம் முக்கியமான பெரிய இடத்தைப் பெற்றிருந்தது. நடனத்தில் அவளுக்கு விருப்பம், நடனமாடுவதில் உண்மையான தேர்ச்சி பெற்றிருந்த அவள். விஷயத்தை வளர்ப்பானேன்? அவள் இசைந்து விட்டாள். இதற்கு அவள் கடுமையான நிபந்தனைகள் விதித்தாள்: அவன் கீழ்ப்படிவுடன் பாடுபட்டுக் கற்க வேண்டும்; அவள் மேல் காதல் கொண்டுவிடாமலிருக்க முயல வேண்டும். ஏனெனில் காதல் கற்பிப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும். முக்கியமானது என்னவென்றால், மற்ற இளைஞர்கள் அவளை நடனமாட அழைக்கும் போது அவன் பொறாமைப்படக் கூடாது, ஏனெனில் ஒருவனோடு மட்டுமே நடனமாடினால் விரைவிலேயே அவள் தகுதியற்றவளாகக் கருதப்பட்டு விடலாம், மொத்ததில் இது சலிப்பூட்டுவது.

மெரேஸ்யெவ் இந்த நிபந்தனைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டான். ஸீனா தனது தீக்கொழுந்துக் கூந்தலைச் சிலுப்பிச் சரிப்படுத்திக் கொண்டு, வடிவமைந்த சிறு கால்களை லாவகமாக அசைத்தவாறு அலுவலகத்திலேயே முதல் நடன அடிவைப்பை அவனுக்குக் காட்டினாள். ஒரு காலத்தில் மெரேஸ்யெவ் “ருஷ்ய” நடனத்தையும் பழைய நடனங்களையும் நன்றாக ஆடியதுண்டு. நெருப்பணைக்கும் பழைய வாத்தியக் குழு கமிஷின் நகரப் பூங்காவில் வாசிக்கும் இசைகளுக்கு ஏற்ப அவன் ஆடுவான். லயஞானம் அவனுக்கு இருந்தது. எனவே விரைவில் இந்தக் களிமிக்க கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டான். இப்போது அவனுக்கு ஏற்பட்ட சிரமம் எல்லாம், மீள் விசையும் துடிப்பும் கொண்ட உயிருள்ள கால்களால் அல்ல, வார்களால் முழங்கால்களுடன் அணைக்கப்பட்டிருந்த தோல் சாதனங்களின் உதவியால் லாவகமாகவும் பல திருப்பங்களுடனும் பயிற்சி செய்ய வெண்டியிருந்ததுதான். முழங்கால்களின் அசைவால், கனத்த, பாங்கற்ற பொய்க்கால்களை உயிர்த்து இயங்கச் செய்வதற்கு அமானுடப் பிரயாசையும் தசைகளின் இறுக்கமும் சித்தவுறுதியும் தேவைப்பட்டன.

பொய்க்கால்களைத் தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான் அவன். புதிதாகக் கற்றுத் தேர்ந்த ஒவ்வொரு ஜதிவரிசையும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று அவனுக்குக் களிப்பூட்டியது. அதைக் கற்றுத் தேர்ந்ததும் அவன் தன் ஆசிரியையைத் தூக்கித் தட்டாமாலை சுற்றத் தொடங்குவான். தன்மீதே தான் அடைந்த வெற்றிக்காக பெருமைபடுவான். சிக்கலான, வெவ்வேறு தன்மைகள் கொண்ட இந்தக் குதிப்புகள் அவனுக்கு எவ்வளவு வலி உண்டாக்கின, இந்தக் கலையைப் பயில்வதற்கு அவன் எத்தகைய விலை செலுத்த வேண்டியிருந்தது என்பதை யாருமே, முக்கியமாக அவனுடைய ஆசிரியை ஊகிக்கவே முடியவில்லை. சில வேளைகளில் அவன் முகத்து வியர்வையுடன் கட்டுக் கடங்காது மல்கிய கண்ணீரையும் அலட்சியமான கைவீச்சுடன் புன்னகை செய்தவாறு துடைத்துக் கொண்டதை ஒருவரும் கவனிக்கவில்லை.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

ஒரு தடவை அவன் ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து, அதே சமயம் குதூகலம் பொங்க அறைக்குள் தத்திக் குதித்து வந்தான். அங்கே மேஜர் ஸ்த்ருச்கோவ் ஜன்னல் அருகே ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்தவராக நின்று கொண்டிருந்தார். வெளியே கோடைப் பகல் மெதுவாக முடிந்து கொண்டிருந்தது. கதிரவனின் கடைசிக் கிரணங்கள் மரமுடிகளுள் ஊடாக மஞ்சள் பொறிகளைச் சிதறின.

“நடனமாடக் கற்றுக்கொள்கிறேன்!” என்று மேஜரிடம் வெற்றிக் குரலில் அறிவித்தான் மெரேஸ்யேவ். மேஜர் ஒன்றும் பேசவில்லை. மெரேஸ்யெவ் அப்பாடாவென்று பொய்க் கால்களைக் கழற்றி வைத்துவிட்டு, வார்களின் இறுக்கத்தால் இரத்தங்கட்டிப் போயிருந்த கால்களை நகங்களால் அழுத்திப் பறண்டியவாறே, “கற்றுத் தேர்ந்துவிடுவேன், கட்டாயமாக!” என்று பிடிவாதத்துடன் மொழிந்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க