காஷ்மீரில் தேர்தல் புறக்கணிப்பு முழக்கங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் காஷ்மீர் மக்களை தேர்தலில் ஓட்டுப் போடக் கூறி அறைகூவல் விடுத்தவரும், காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவருமான நசீர் அகமது ரொங்காவைக் கடந்த ஆகஸ்ட் 4 அன்று கைது செய்த காஷ்மீர் போலீசு, இன்றுவரை அவரை வெளியே விடவில்லை.
காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக நீடித்து வரும் அரசு ஒடுக்குமுறையின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவில்லை. ஆங்காங்கே பல்வேறு இடங்களில் போராட்டங்களும் மக்கள் எழுச்சியும் நடந்து வருகின்றன. அனைத்துப் பகுதிகளும் முடங்கியிருக்கின்றன. அரசு ஒடுக்குமுறை தீவிரமடைந்து வருகிறது. இவற்றை எல்லாம் இங்கிருக்கும் ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவும் இல்லை. அது குறித்த செய்திகளை வெளியிடவும் இல்லை.
அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு காஷ்மீரில் இளைஞர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களைக் கைது செய்தது காஷ்மீர் போலீசு. அந்த வகையில் வழக்கறிஞர் ரொங்காவையும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்திருக்கிறது. ஒரு நபரை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தால் அவரை ஆறுமாதம் வரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படாமல் சிறையில் அடைத்து வைக்கலாம்.
அவரது கைதுக்கு அரசுத் தரப்பு முன்வைத்துள்ள காரணங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. கைதுக்கான காரணம் குறித்து கொடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீர் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு மக்களால் பின்பற்றப்படுகையில், ரொங்கா மக்களை தேர்தலில் பங்கேற்குமாறு பரப்புரை செய்து பலரையும் ஓட்டுப் போடச் செய்ததைக் குறிப்பிட்டு, “இந்த விவகாரத்தில் இருந்தே, மக்களை அணிதிரட்டக் கூடிய உங்களது திறன் நன்றாகத் தெரிகிறது.” என்று கூறுகிறது அந்த அறிக்கை.
மேலும் “கடந்த 2008, 2010, 2018 ஆண்டுகளில், காஷ்மீரில் பல்வேறு போராட்டங்களை இதற்கு முன்னர் நடத்தி, அதனடிப்படையில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் அமைதியை சீர்குலைத்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டு, அவரை ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் ஆதரவாளர் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது போலீசு.
காஷ்மீரைப் பொறுத்தவரையில் வழக்கறிஞர்கள் கூட எதுகுறித்தும் பேச முடியாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சமயத்திலும் கூட அவர்கள் மவுனம் காக்கின்றனர். கொத்துக் கொத்தாக மக்கள் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மிரண்டுபோயிருக்கின்றனர் வழக்கறிஞர்கள்.
படிக்க :
♦ காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
♦ காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் பார் கவுன்சில் வெறிச்சோடிக்கிடக்கிறது. அங்கு இருக்கும் ஒருசில இளம் வழக்கறிஞர்களுக்கும்கூட எத்தனை வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ரொங்கா மட்டுமல்ல, தற்போதைய வழக்கறிஞர் சங்கத் தலைவரான மியான் அப்துல் கய்யாமும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட போது, அப்துல் கய்யாம், சிறுநீரகப் பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் நீரிழிவு நோயாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டு உத்திரப் பிரதேசத்துக்கு இட்டுச் செல்லப்பட்ட கய்யாமை அவரது மகள் சந்திப்பதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. கய்யாம் மீது அரசால் வைக்கப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டு, ”பிரிவினைவாதக் கருத்தியலை உறுதியாகப் பற்றி நிற்கிற வழக்கறிஞர்களுல் ஒருவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2008-ம் ஆண்டு வனத்துறை நிலத்தை அமர்நாத் கோவில் வாரியத்தின் பெயரில் மாற்றியதற்கு எதிராக, போராட்டத்திற்கு அப்துல் கய்யாம் அறைகூவல் விடுத்ததை சுட்டிக் காட்டியிருக்கிறது அரசு.
“இவர்கள் இருவரும் ஒரு கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்ததுதான் இவர்களின் கைதுக்குக் காரணம்.” என்கின்றனர் சக வழக்கறிஞர்கள்.
இந்திய அரசிற்கு எதிராக காஷ்மீர் மக்கள் முன்னெடுத்த தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடக் கூறி அம்மக்களை ஓட்டுப் போட அழைத்துச் சென்ற வழக்கறிஞர் ரொங்கா-வைக் கைது செய்திருப்பதன் மூலம் ரொங்காவைப் போன்று அரசின் சமரசப் பாதையில் மக்களை வழிநடத்துவோருக்கும் நல்ல பாடத்தைப் புகட்டியிருக்கிறது பாஜக அரசு. எனில், ஓட்டுப் போட பிரச்சாரம் செய்தவர் ஜனநாயகத்தின் மீது வைத்த நம்பிக்கை தவறா ? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம். போலி ஜனநாயகத்தின் மீது ?
இதற்கு முன்னர், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மொத்தக் காஷ்மீரும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சமயத்தில் வாக்கு செலுத்திவிட்டு வந்த அரசு அலுவலர் ஒருவரைக் கேடயமாக இராணுவ வாகனத்தின் பேனட்டில் கட்டி அமரவைத்து இராணுவம் ஊர்வலம் சென்றது நினைவில் இருக்கிறதா?
பாம்புக்கு பால் வார்த்தால் மட்டும் என்ன, அது முத்தமா கொடுத்துவிட்டுப் போகும்?
நந்தன்
நன்றி : தி வயர்