முகப்புசெய்திஇந்தியாஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

-

டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஹானிபாபுவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனை செய்திருக்கும் புனே போலீசைக் கண்டித்து டில்லி பல்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

கடந்த புதன்கிழமை (11-09-2019) அன்று டில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஹனிபாபு பணிபுரியும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் எட்டுபேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

துறைத்தலைவர் ராஜ்குமார், ரிம்லி பட்டாச்சாரியா, தப்பன் பாசு, பிரசந்தா சக்ரவர்த்தி, சுபர்னோ சாட்டர்ஜி, ப்ரியா குமார், ஐரா ராஜா, ஹாரிச் கதீர் ஆகிய எட்டுபேர் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்:

Hany-Babu-du-protest
டில்லி பல்கலைக் கழக பேராசிரியர் ஹானி பாபு வீட்டில் அத்துமீறி புனே போலீசு சோதனையிட்டதை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம்.

”விளக்கமளிக்கப்படாமலும், திடீரென்றும் நடத்தப்பட்ட இந்த சோதனையால் அதிர்ச்சியுற்றிருப்பதாகத்” தெரிவித்தனர். மேலும் ஹனிபாபு, அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகிய மூவரையும் சோதனை நடத்தும்போது வெளிநபர்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில், “எந்த ஒரு சட்டரீதியான ஆவணமும் இல்லாமல் ஒரு தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தின் அந்தரங்க உரிமையின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரது மதிக்கத்தக்க ஆய்வு விவரங்களையும் அவரது வீட்டில் இருந்து பறித்துச் சென்றுள்ளனர். இத்தகைய செயல் எந்தவொரு ஜனநாயக – சட்டரீதியான சமூகத்துக்கும் புறம்பான நடவடிக்கையாகும்.” என்று தெரிவித்திருக்கின்றனர்.

இந்தப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு ஹனிபாபுவின் மாணவர்களும் பிற கல்லூரிகளில் பயிலும் அவரது ஆதரவாளர்களும் வந்து கலந்து கொண்டனர்.

படிக்க:
செயற்பாட்டாளர் கைது : பா.ஜ.க.வின் வண்டு முருகனாய் வாதாடும் புனே போலீசு !
♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

போராட்டத்தில் கலந்து கொண்ட இறுதியாண்டு முதுகலை ஆங்கிலம் பயிலும் இக்ரா ரசா என்ற மாணவர் ஹனிபாபுவின் கைது குறித்துக் கூறுகையில், “அவர் நல்ல ஆசிரியர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. அவர் எங்களுக்கு மொழியியல் பாடம் எடுக்கிறார். அவரது வகுப்பில் அவர் சமத்துவத்தின் அவசியம் குறித்து எப்போதும் வலியுறுத்துவார்” என்றார்.

அவரது மற்றொரு மாணவரான சிவம் வர்மா, இதுகுறித்துக் கூறுகையில், “ஒரு ஆசிரியரின் வாழ்வில் அவரது பணிகள் அனைத்தும் அவர்களது படைப்புகளில், ஆராய்ச்சித் தாள்களில்தான் இருக்கும். அவர்களுடையது மட்டுமல்லாமல் வருடக்கணக்கில் பல்வேறு மாணவர்களின் ஆய்வு வேலைகளும் அதில் இருக்கும். அவரது புத்தகங்களை எடுத்த பிறகும் அவரது கணினியை அவர்கள் எடுத்துச் சென்றிருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களாகிய நாங்களும் கூடத்தான் நிறைய நூல்களை வைத்திருக்கிறோம். நாங்களும் குற்றவாளியா ?” என்று வினவினார்.

Hany-Babu-du-protest
நூல்களைப் படிப்பது குற்றமா என கேள்வி எழுப்பும் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

ஒவ்வொருவரையும் நகர்ப்புற நக்சல்கள் என முத்திரை குத்துவது இப்போது பிரபலமாகி வருகிறது என்கிறார், புனித ஸ்டீபன் கல்லூரியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியை கரென் கேப்ரியல். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் “இனி வரவிருக்கும் மோசமான நிலைமைக்கு நம்மைத் தயாரித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. விளிம்புநிலை மனிதர்களுக்காக குரல்கொடுக்கும் அறிவு ஜீவிகளுக்கு எதிரான போக்கு வளர்ந்துவருகிறது. ஹனிபாபுவின் வீட்டில் அவர்கள் புத்தகங்களைக் கண்டெடுக்கவில்லை என்றாலும்கூட, அது மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டிருக்கும். நாம் என்ன நினைக்கிறோம் மற்றும் என்ன செய்கிறோம் என்பது குறித்து நாம் வருத்தங்கொள்ளத் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். நாம் பேசுவதற்கும், சிந்திப்பதற்குமான உரிமைக்கான பிரச்சாரத்தில் நம்மை மீண்டும் உட்படுத்திக் கொள்ளவேண்டும்.” என்றார்

ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியையான ஐரா ராஜா இது குறித்து கூறுகையில் “பேராசிரியர்களின் நூலகங்கள் குறிவைக்கப்படுவது வினோதமானதாக இருக்கிறது” என்றார். மேலும், “தற்போது புத்தகங்களைப் படிப்பதே பிராச்சினைக்குரியதாகிறது. நீங்கள் என்ன வகையான நூல்களைப் படிக்கிறீர்களோ அதுவே உங்களைக் குற்றவாளி ஆக்குகிறது” என்று கூறியுள்ளார்.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஹனிபாபுவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சங்க பரிவாரங்களின் ஆட்சியில், இனி புராணங்களைத் தவிர்த்து வேறு எந்த நூல்களைப் படித்தாலும் நாமும் நகர்ப்புற நக்சல்கள்தாம். ஏனெனில் ‘அனைவருக்குமான அறிவு’ என்பது பார்ப்பனியத்தின் நேரெதிரான கருத்தியல் அல்லவா?


தமிழாக்கம் :
நந்தன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க