Monday, July 26, 2021
முகப்பு செய்தி இந்தியா ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !

ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !

காஷ்மீரில் இதுவரை 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையே உறுதிபடுத்துகிறது. ஆனால் பாஜக அடிபொடிகள் அமைதி திரும்பியதாக கூறுகின்றனர்

-

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதிலிருந்து இதுவரை 4000 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் விவரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதாகக் கூறி மோடி அரசாங்கம் செய்திருக்கும் ஒடுக்குமுறையை இந்த கைதுகள் எடுத்துக் கூறுகின்றன.

இந்திய ஊடகங்களில் காஷ்மீரில் எந்தவித போராட்டங்களும் நடைபெறவில்லை என சொல்லிக்கொண்டாலும் பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீரிகளுக்கும் மோதல் இருந்துகொண்டே உள்ளது.

j&k-prison-sliderபோராட்டங்களை தடுக்கும் வகையில் 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையை மேற்கோள் காட்டி செப்டம்பர் 6-ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். இதில் சுமார் 2600 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. இந்தத் தகவல் குறித்து அரசாங்க தரப்பிலிருந்து மறுப்போ, ஒப்புதலோ வரவில்லை.

தடுப்பு கைதுகள் நடந்திருப்பதை முதன்முதலாக இந்த அறிக்கையே உறுதிபடுத்துகிறது. அதோடு, யார் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்கிற விவரத்தையும் இது அளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட 200 அரசியல்வாதிகள், 100-க்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள், பிரிவினை கோரும் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 3000-க்கும் மேற்பட்டோர், கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதர குற்றங்களில் ஈடுபடுவர்கள் எனவும், இதில் 85 பேர் ஆக்ராவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் போலீசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் நடந்தேறிவரும் சமீபத்திய தனித்துவமான கைதுகள், பரவலான பயத்தையும் அந்நியப்படுத்தலையும் ஏற்படுத்தியிருப்பதாக அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது.

படிக்க:
இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை
♦ உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் !

“தகவல் தொடர்பு துண்டிப்பு, கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு, அரசியல்வாதிகளின் கைதுகள் இந்த பிராந்தியத்தை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டன” என்கிறார் அம்னெஸ்டி இந்தியாவின் தலைவர் ஆகர் பட்டேல்.

‘வன்முறைகளை தடுக்கும் நோக்கத்துடன்’ இந்தக் கைது நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசாங்க தரப்பு கூறிக்கொள்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 13 காவல் மாவட்டங்களில் நடந்த இந்த கைதுகளில், ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்ரீநகர் பகுதிகளில் கைதாகியிருக்கிறார்கள். முன்பு, ஊரகப் பகுதிகளில்தான் அமைதியின்மை இருக்கும்.

கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளில் 80 பேர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள், 70 பேர் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள், 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரும் உள்ளனர்.

Kashmir-Life-Siege 2கிளர்ச்சி குழுக்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி 150-க்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசு கூறுகிறது. 1200-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறைகளிலேயே உள்ளனர். ஒவ்வொரு நாளும் டசனுக்கும் மேற்பட்டோர் கைதாவதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது.

இந்த அறிக்கையில் முறைசாரா வீட்டுக் காவல் கைது குறித்து தகவல் ஏதும் சொல்லப்படவில்லை. அதுபோல, சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கைதானவர்கள் குறித்த விவரமும் இதில் இல்லை. முன்னதாக, பிரிவினை கோரும் முக்கியமான தலைவர் ஒருவர், 250-க்கும் மேற்பட்ட கிளர்ச்சி இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு முன்பே கைதானதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சரும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவின் கைது குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பொய் சொன்னவர்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரை பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டுள்ளது அரசாங்கம்.

முன்னாள் முதலமைச்சரைப் பற்றிய தகவலில்கூட உண்மைத் தன்மையில்லாமல் நடந்துகொள்ளும் இந்த அரசாங்கம், பொதுமக்களில் எத்தனை பேர் கைதானார்கள் என்பது பற்றிய விவரங்களைக்கூட சொல்ல மறுக்கிறது.

காஷ்மீரில் 72 ஆண்டுகள் இந்தியாவின் ஒடுக்குமுறையைக் காட்டிலும் தாங்கள் புதிய ஒடுக்குமுறை உச்சத்தை தொட்டுவிட வேண்டும் என, மோடி அமித் ஷா கூட்டணி முனைப்பாக உள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

வினவு செய்திப் பிரிவு
கலைமதி
நன்றி
: டெலிகிராப் இந்தியா.

Leave a Reply to K.Bhalasundharam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க