நாளிதழ் ஒன்றில் வெளியான அந்த விளம்பரத்தை காண நேரிடும்போது நேரில் சென்று நான்கு அறை விடலாமா என்ற ஆத்திரம்தான் பிறந்தது. ”பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு” என்ற தலைப்பில் வெளியான விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ”பிராமின்ஸ் மட்டும்” என்ற வாசகம்தான் ஆத்திரத்திற்கான காரணம்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மேலூர் லட்சுமிநகர் பகுதியில் ஸ்ரீசக்தி ரெங்கா என்ற பெயரிலான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்டவிருக்கிறது, ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கட்டுமான நிறுவனம். வீட்டை கட்டுவதற்கு முன்பாகவே, அந்நிறுவனத்தின் சார்பில் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த விளம்பரம்தான்,  சுயமரியாதை உணர்வை சீண்டிப் பார்க்கிறது.

”ஸ்ரீரங்கம் தெய்வீகமான இடம். ஆச்சாரமான இடத்தில் அசைவம் புழங்கலாமா? அதனாலதான் அப்படி ஒரு ஏற்பாடு. இது எப்படி சாதி துவேஷமாகிவிடும்” என்று எதிர்கேள்வியெழுப்பும் அதிபுத்திசாலிகளுக்கெல்லாம் அரைநூற்றாண்டுக்கும் முன்னரே பதிலுரைத்துவிட்டார், தந்தைப் பெரியார்.

”ஒரு தெருவில், 4 வீடுகள் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டின் முன்பு, இது பதிவிரதை – பத்தினி வீடு” என்று பெயர்ப் பலகை தொங்கவிடப்பட்டால், மற்ற வீட்டாரைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்? அதுபோல, ஒருவன் பிராமணன்’ என்று தம்பட்டம் அடித்தால், மற்றவனை சூத்திரன்’ – கீழ் வர்ணத்தவன் என்று கூறுவதுதானே! … சூத்திரன்’ என்பதற்கு விபச்சாரி மகன் என்ற பொருள் உண்டே! (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415).” (விடுதலை, ஜூன்-15, 2018)

“‘ஆலயங்களில் நுழைய முடியாது! அபார்ட்மெண்டிலும் நுழைய முடியாது?… பிராமின்ஸ் மட்டும் என்று விளம்பரம் கொடுத்த சாதிப் பிரிவினைவாதிகளே, அந்த அபார்ட்மென்டில் கக்கூஸ் கழுவவும், அடைப்பு எடுக்கவும் பிராமின்களை மட்டுமே பயன்படுத்துவாயா?” என்று கேள்வியெழுப்பி நகர்முழுதும் சுவரொட்டி அடித்து ஒட்டி அம்பலப்படுத்தியுள்ளனர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர். மேலும், ஸ்ரீரங்கம் போலீசு நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகாரளித்துள்ளனர்.

இந்த விளம்பரம் என்றில்லை, தமிழகத்தின் பல இடங்களிலும் குறிப்பாக சென்னையில் அநேக இடங்களில் வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இவை போன்ற அறிவிப்புகள் ‘இயல்பாய்’ கடந்துபோகும் ஒன்றாய் மாறிவிட்டதென்று.

வீட்டுக்கு வெளியே காம்பவுண்ட் கேட்டிலேயே அட்டை ஒன்றில் எழுதி தொங்க விட்டிருப்பார்கள் ”சைவம் மட்டும்”, ”வெஜிடேரியன் மட்டும்” ”PURE VEG” என்று. அதிலும் கவனிக்க பச்சை கலர் ஸ்கெட்ச் பேனாவில்தான் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும். ரோட்டில் கிடக்கும் பசுஞ்சாணியை எடுத்து வீசியெறிந்துவிட்டு வரலாமா? என்றுதான் தோன்றும் அதைப் பார்க்கிற சுயமரியாதையுள்ள எவருக்கும்.

இப்படி ”பச்சை” யாக, ”பிராமினாள் மட்டும், சைவம் மட்டும்” என்று அட்டை கட்டி தொங்கவிட்டும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் அளவிற்கும் இவர்களுக்கு வந்துள்ள துணிச்சல்தான் இங்கே கவனிக்கத்தக்கது.

கடந்த 2012-ம் ஆண்டில் இதே ஸ்ரீரங்கம் பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு  “ஸ்ரீ கிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகப் போராடியதற்காக, திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 112 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது, ஸ்ரீரங்கம் போலீசு. இவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஜூன், 13 அன்று தீர்ப்பளித்த, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி திருவாளர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், ”கடைகளுக்குத் தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் 19(1) ஏ மற்றும் 19(1) ஜி உரிமை வழங்கியுள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.” (விடுதலை, ஜூன்-15, 2018)  என்று சட்ட பாயிண்டுகளை அள்ளிப்போட்டார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

அதோடு அவர் நிற்கவில்லை, ”இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு “ஸ்ரீ கிருஷ்ணய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே” எனப் பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால், இந்த ஓட்டலில் அவ்வாறு இல்லை. மதுரையில் கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை எனக் குறிப்பிட்ட சமூகங்கள், ஜாதிகளைக் குறிப்பிடும் வகையில் பல ஓட்டல்கள் உள்ளன. சாலை ஓரங்களில் பல்வேறு இடங்களில் அய்யங்கார் பேக்கரி என்ற பெயரில் பேக்கரி, காபி கடைகள் இருக்கின்றன. புதுச்சேரியில் ரெட்டியார் மெஸ் உள்ளது. இந்த மெஸ்சில் கல்லூரியில் பயிலும் காலங்களில் சாப்பிட்டுள்ளேன்.” (விடுதலை, ஜூன்-15, 2018) என்று நீட்டி முழக்கியவர், ஆனபடியால், “ஜாதிப் பெயர்களில் ஓட்டல்கள் இருப்பது தவறில்லை” என்று மனுநீதியை தீர்ப்பாகவே வழங்கினார் அவர்.

நால் வர்ண பேதத்தையும், பார்ப்பன உயர்சாதித் திமிரையும் ஒருங்கே குறிக்கும் வகையில் ”பிராமணாள் கபே” என்று பெயரிடுவது தவறில்லை என்று உயர்நீதிமன்றக்கிளையே தீர்ப்பளித்துவிட்டது என்ற தைரியத்தை தாண்டி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அதிகாரமிக்க உயர் பதவிகள் பலவற்றில் ”அவாள்” இருப்பதும்; சுப்ரமணியசுவாமி போன்ற அதிகாரத் தாழ்வாரங்களில் கோலோச்சுபவர்களாகவும் ”அவாள்” இருப்பதும்தான் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளிவந்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, அப்பட்டமான சாதிவெறிப் பேச்சுகளும், சாதித் தீண்டாமைக் கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன. அக்கணநேர சலனத்தைத் தாண்டி தமிழகத்தில் பெரியதாய் எதிர்வினை எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்ற யதார்த்தமும் அவர்களுக்கு அந்தத் துணிச்சலை வழங்கியிருக்கிறது, என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி சமயமற்ற பண்பட்ட நாகரிகத்தோடு தமிழ்ச்சமூகம் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகளை கீழடி அகழாய்வு வழங்கியிருப்பதாக பெருமை பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்தான், இந்த மானக்கேடும் இங்கே நிகழ்ந்திருக்கிறது.

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

1941-லேயே இரயில்வே உணவு விடுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பிராமணாள் – இதராள் என்று இருந்த பேதத்தை ஒழிப்பதில் தொடங்கி, 1956-ல் தமிழகமெங்கும்  ‘பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டத்தை இயக்கமாகவே முன்னெடுத்து சாதித்தும் காட்டியவர் தந்தை பெரியார். நீதிக்கட்சியும், பெரியாரும் களமாடிய காலத்திற்கு, தமிழ்ச்சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது, பார்ப்பன சாதித் திமிர். தமிழ்ச்சமூகத்தின் மனநிலையை சோதித்துப் பார்க்கும் வகையில் சாதிப் பெருமை பேசுவதும்; பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை பின்னொட்டாக போட்டுக்கொள்வதும்; பிராமினாள் கபே, பிராமின்ஸ் மட்டும் போர்டு மாட்டுவது என தலைதூக்கிவருகிறது. கருத்தியல் தளத்திலும் களத்திலும் எதிர்வினைக்காக காத்திருக்கிறது, தமிழகம்.

இளங்கதிர்.