Wednesday, May 12, 2021
முகப்பு செய்தி இந்தியா கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

ஏற்கெனவே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 30%-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் சேர்க்கையை மேலும் குறைக்கும்.

-

தேசியக் கல்விக் கொள்கை (2020)-ல் பல்கலைக்கழகம் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு, தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான சரத்துகள் சேர்க்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருக்கிறார்.

“தேசிய கல்விக்கொள்கை குறித்த கருத்துக் கேட்பு நாடு முழுவதும் முடிந்ததை ஒட்டி சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுக் கருத்துக்களை பரிசீலித்து முழுமையான தேசிய கல்விக் கொள்கை (2020) – வரைவு விரைவில் தயாரிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார் பொக்ரியால்.

1-Ramesh-Pokhriyal-Nishank-Slider
மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

மேலும், “தேசிய கல்விக் கொள்கையை இறுதி செய்வதில் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை பெங்களூருவில் ஒரு அலுவலகம் அமைத்து பரிசீலித்து வருகிறோம். பள்ளிக் கல்வி குறித்த அறிக்கை சி.பி.எஸ்.ஈ தலைவர் அனிதா கர்வால் தலைமையிலான குழுவால் இறுதி செய்யப்பட்டு அளிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவை மையமாகக் கொண்ட கல்விக் கொள்கை குறித்து நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். பிரதமரிடம் ஒப்புதல் பெற்றபின்னர், இதனை அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.

அது என்ன “இந்தியாவை மையமாகக் கொண்ட” கல்விக் கொள்கை ? கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய பொக்ரியால், “புவியீர்ப்பு விசையை நியூட்டனுக்கு முன்னாலேயே வேதத்தில் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றனர். அணுக்களை கண்டுபிடித்தது ரிஷி பிரணவ் என்பவர்தான்” என்று கூறியிருந்தார். இதுதான் பொக்ரியாலின் இந்தியாவை மையமாகக் கொண்ட கல்விக் கொள்கை.

மேலும் உயர்கல்வி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ரமேஷ் பொக்ரியால், “உயர்கல்விக்குச் செல்பவர்கள் தற்போது பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிவு செய்து, பல்வேறு தேர்வுகள் எழுத வேண்டியது உள்ளது. அவர்களின் சுமையைக் குறைக்கவே அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்.

அதாவது ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற கொள்கை ஏற்கெனவே மருத்துவக் கல்விக்குக் கொண்டுவந்தது போல, இனி அறிவியல் மற்றும் கலைப் பிரிவு படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வின் மூலமாகத்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு வருவதற்கு முன்னரே அறிவித்துள்ளார்.

படிக்க:
நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !
♦ கீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் ! ஓசூர் அரங்கக் கூட்டம் !

நீட் தேர்வின் யோக்கியதை ஏற்கெனவே தற்போது நடந்துள்ள ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளால் சந்தி சிரித்துப் போயுள்ளது. நீட் தேர்வு திறமையுள்ளோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு என அன்று வக்காலத்து வாங்கியவர்கள் யாரும் இதுகுறித்து வாய்திறப்பதில்லை.

நீட் தேர்வு தமிழ்வழிக் கல்வி மூலம் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்துள்ளது என்பது கண்கூடாகத் தெரிகின்றது. சமீபத்தில் பெறப்பட்ட ஆர்.டி.ஐ. தகவலின் படி, நீட் தேர்வு முறை அமல்படுத்தப்படும் முன்பு, தமிழ்வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை 2015-ம் ஆண்டு சுமார் 456 பேரும், 2016-ம் ஆண்டு 438 பேரும் என்ற அளவில் இருந்தது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2017-ம் ஆண்டு தமிழ் வழி மாணவர்களின் சேர்க்கை 40-ஆகவும், 2018-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை 88-ஆக சரிந்தது.

ஏற்கெனவே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 30%-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், கலை அறிவியல்துறை கல்லூரி படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரும் முடிவு உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும்.

மனுநீதியையே அரசியல் சாசன சட்டமாகக் கொண்டுவரும் ஒரு முயற்சியே இது. முறியடிக்க ஒன்றிணைய வேண்டிய நேரம் இது !

வினவு செய்திப் பிரிவு
– நந்தன்
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க