சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆதரவாக டிசம்பர் 3-ம் தேதி கடும் பனியையும் பொருட்படுத்தாது கனடாவில் உள்ள சமூக நீதி ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்
இடுப்புக்குக் கீழே தொண்ணூறு சதவீதம் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 19 விதமான நோய்கள் காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பன்மைத்துவ இந்தியாவுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் (IAPI) என்ற அமைப்பினர் கனடாவில் உள்ள சர்ரேயின் ஹாலண்ட் பூங்காவில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் சாய்பாபாவை மனிதாபிமான மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் உடனடியாக விடுவிக்குமாறு ஒருமனதாகக் கோரினர்.
தற்போதைய வலதுசாரி இந்து தேசியவாதிவாத பாஜக அரசாங்கம் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் பரப்பும் இந்து தீவிரவாதிகளை வெளிப்படையாகக் காப்பாற்றுகிறது; அதே நேரத்தில் மனித உரிமைகளுக்காக பேசியதற்காக சாய்பாபா போன்ற அறிஞர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், குறிப்பாக ஆதிவாசிகள், பழங்குடி மக்கள், வளர்ச்சியின் பெயரில் இந்திய அரசால் தங்கள் பாரம்பரிய நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். 2014-ல் பாஜக அசுரத்தனமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
சாய்பாபா மீது மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டு, தண்டனை தரப்பட்டது. மாவோயிஸ்டுகள் பழங்குடிப் பகுதியில் ஒரு வர்க்கப் போரை நடத்தி வருவதால், சாய்பாபா மட்டுமல்லாமல் அவரைப் போன்ற மற்றவர்களையும் தீவிர இடதுசாரிகள் என்று முத்திரை குத்தி, எதிர்ப்பின் குரல்களை ஒடுக்குவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசினர்.
சீக்கிய ஆர்வலர்கள் தங்கள் ஆதரவைக் காட்ட அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். பண்டா சிங் பகதூர் சொசைட்டி உறுப்பினர்கள், ரஞ்சித் சிங் கல்சா மற்றும் இந்தர்ஜித் சிங் பெய்ன்ஸ், மற்றும் குரு நானக் சீக்கிய கோயில் சர்ரே-டெல்டா உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். சாய்பாபாவை விடுவிப்பதில் கனடிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரி ஒரு மனுவை வான்கூவரில் உள்ள சீக்கிய சமூகம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
♦ தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க.. ?
இந்நிகழ்ச்சியில் பேசியவர்களில் இனவெறி எதிர்ப்பு கல்வியாளர் அன்னி ஓஹானா, வறுமை எதிர்ப்பு ஆர்வலர் டேவ் டிவர்ட், சுயாதீன சீக்கிய ஆர்வலர் குர்முக் சிங் தியோல், சீக்கிய தேச தன்னார்வலர் சுனில் குமார், IAPI உறுப்பினர்கள் ராகேஷ் குமார் மற்றும் குர்பிரீத் சிங் ஆகியோரும் அடங்குவர்.
சமீபத்தில் காலமான மற்றொரு கல்வியாளரும் செயல்பாட்டாளருமான எஸ்.ஏ.ஆர். கிலானிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு பேரணி தொடங்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் கற்பித்த கிலானி, சாய்பாபாவுடன் நெருக்கமாக இருந்தார், மேலும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று அயராது பிரச்சாரம் செய்து வந்தார். 2001-ல் இந்திய நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவரை பொய்க் குற்றச் சாட்டில் சிறையில் தள்ளியது இந்திய அரசு. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் அரசியல் கைதிகளுக்காக வாதிடத் தொடங்கினார்.
பங்கேற்பாளர்கள் சாய்பாபாவை விடுவிக்கக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். சாய்பாபாவை மிக மோசமாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சர்வதேச சமூகத்தை புறக்கணிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் தலைமை பதவிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
அனிதா
நன்றி : கவுன்ட்டர் கரண்ட்ஸ்.