privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !

கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !

டில்லியில் முழுக்க முழுக்க பெண்களே பங்குபெற்று நடத்தும் ஷாகின்பார்க் போராட்டத்தைப் போல கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பெண்கள் 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்துகின்றனர்.

-

கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பெண்களால் நடத்தப்பட்டு வரும் சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்து தொடர் போராட்டமாக நடைபெற்று வருகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து சில பத்து பெண்களால் கடந்த ஜனவரி 7-ம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த போராட்டம் இன்று பல நூறு பெண்கள் பங்குபெறும் மிகப்பெரும் போராட்டமாக வளர்ந்திருக்கிறது.

இந்த போராட்டத்தைத் துவக்குகையில் இப்போராட்டம் சில நாட்களைத் தாண்டி தொடரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார், 50 வயதான நூர் ஜஹான் பேகம். போராட்டத்தின் முதல் நாளில் இருந்து களத்தில் நிற்கும் இவர், “எங்களில் யாரும் இதற்கு முன்னர் ஒரு போராட்டத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறியதில்லை” என்கிறார்.

போராட்டம் துவங்கிய முதல் நாளில் இருந்து பங்கேற்றுவரும் நூர்ஜகான் பேகம், ஷஃபீக் ஹசான் மற்றும் அம்ரின் பேஹம்.

கடந்த ஜனவரி 22-ம் தேதி உச்சநீதிமன்றம் கொடுக்கப்போகும் தீர்ப்பை எதிர்நோக்கியிருந்த போராட்டக் குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார அவகாசம் அளித்து உத்தரவிட்டதோடு, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அரசாங்கம் அமல்படுத்துவதற்குத் தடைவிதிக்க முடியாது என்றும் தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

“உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாங்கள் சிந்திக்கும் போக்கை மாற்றியது. இந்தப் போராட்டத்தை முடிக்க குறுக்குவழி எதுவும் கிடையாது என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஒரு நீண்ட பயணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”, என்கிறார் 27 வயதான அம்ரின்.

அம்ரினுக்கு 5 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். காலையில் எழுந்து அவர்களுக்கு சமைத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு பார்க் சர்க்கஸ் மைதானத்தில் போராட்டத்திற்கு வந்துவிடுகிறார்.

போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் அம்சத் ஜாஸ்மின். (நின்று கொண்டிருப்பவர்)

குழந்தைகள் பள்ளி முடித்து வந்ததும், அவரது மாமியார் அக்குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார். இரவு அம்ரின் வீட்டிற்குத் திரும்பியதும் அவரது மாமியார் இரவு நேரப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்தப் போராட்டம் முசுலீம் அல்லாதவர்களின் துணையின்றி இவ்வளவு தூரம் வந்திருக்க வாய்ப்பில்லை என்று போராட்டத்தில் பங்கு பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் கூறுகின்றனர். உணவு, குடிநீர் என அவர்களுக்குத் தேவையானவற்றை பிற மதத்தவர்கள் வழங்கி வருகின்றனர்.

“பெண்களும் மாணவர்களும் தேசம் முழுவதும் போராட்டங்களைக் கட்டியமைத்திருப்பது நம் ஒவ்வொருவருக்குமான பாடம்” என்கிறார் இப்போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் ப்ரபாதி ப்ராமனிக்.

ப்ரபாதி சேரிப் பகுதியில் வாழும் மாணவர்களுக்கான இலவச கல்வி பயிற்சி மையம் ஒன்றை நடத்திவருகிறார். தனது கல்வி பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு இங்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சமத்துவத்தையும் மத ஒற்றுமையையும் வலியுறுத்தும் பாடல்களைப் பாடவும், போராட்டக் குழுவினருடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறார்.

படிக்க:
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !

கடந்த பிப்ரவரி 5, அன்று நடந்த கூட்டத்தில் கடத்தல் தடுப்பு செயற்பாட்டாளர் ருச்சிரா குப்தா பங்கேற்று உரையாற்றினார். முன்னாள் பத்திரிகையாளரான ருச்சிரா குப்தா தனது உரையில், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது இருந்த மதரீதியான இறுக்கமான நிலைமையைப் பற்றி பேசினார்.

அத்வானியின் ரத யாத்திரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஆகியவற்றை ஒரு பத்திரிகையாளராக பதிவு செய்தவர் ருச்சிரா குப்தா.

கையில் மலருடன் போராட்டத்தில் கடத்தல் தடுப்பு செயற்பாட்டாளர் ருச்சிரா குப்தா.

அந்த மோசமான நாளில் (டிசம்பர் 6, 1992) மசூதிக்குள் சிரமப்பட்டு நுழைந்துவிட்டார் ருச்சிரா. அவரது தலையில் சிறு துணியைக் கட்டியிருந்தார். மசூதியை வீழ்த்திய சங்க பரிவாரக் குண்டர்கள், அவரை முசுலீம் என நினைத்துக் கொண்டனர்.

“ உள்ளே இருந்த கரசேவகர்கள் என்னை பாலியல்ரீதியாக மோசமாக நடத்தினர். கிட்டத்தட்ட என்னை அடித்துக் கொல்லப்பார்த்தனர். அங்கு ஒருவன், “இவளை வெளியே எடுத்துச் சென்று கொல்வோம்” என்றான். அச்சமயத்தில் நான் ஏற்கெனவே பேட்டியெடுத்திருந்த ஒரு பீகாரி கரசேவக் – இவரிடம் நான் இந்து என ஏற்கெனவே தெரிவித்திருந்தேன் – என்னைக் காப்பாற்றினார்.” என்று தனது பழைய நினைவுகளைக் குறிப்பிட்டார் ருச்சிரா குப்தா.

இச்சம்பவத்திற்குப் பின் உடனடியாக அத்வானியிடம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் ருச்சிரா. அங்கு உள்ளே நடந்த சம்பவம் குறித்து அத்வானியிடம் புகாரளித்த ருச்சிராவிடம், இனிப்புகளை நீட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில் நடந்ததை மறந்துவிடுமாறு கூறியிருக்கிறார் அத்வானி.

படிக்க:
♦ CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !
♦ 10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

ஆனால் ருச்சிரா குப்தா விடவில்லை; பல்வேறு தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு மத்தியில் பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிசன், பஹாரி ஆணையம் மற்றும் இந்திய ப்ரெஸ் கவுன்சில் ஆகியவற்றின் முன்னர் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “மதவாத சக்திகளுக்கு அடிபணிய மறுப்பதன் மூலம் அதே போர்க்குணத்தை நீங்கள் காட்டுகிறீர்கள்” என்று போராடும் பெண்களைப் பார்த்துக் கூறினார். இதனை அந்தப் பெண்கள் பெரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.

தமிழாக்கம் : நந்தன்
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க