Thursday, December 5, 2024
முகப்புசெய்திஇந்தியா10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

“9, 10 வயது குழந்தை பேசுவதெல்லாம், தேச துரோகம் என சொல்கிறார்கள். இது எப்படி தேச துரோகம் ஆகும் என எனக்குப் புரியவில்லை?” என்கிறார் ஒரு பெற்றோர்.

-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடகம் போட்டதற்காக கர்நாடக மாநிலம் பிதாரியில் பள்ளி ஆசிரியர் மற்றும் நாடகத்தில் நடித்த மாணவரின் தாய் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைதாகியிருக்கும் நிலையில், நான்காவது முறையாக பள்ளி குழந்தைகளிடம் விசாரணை நடத்தியிருக்கிறது கர்நாடக போலீசு.

சீருடை அணியாத போலீசு, குழந்தைகள் நல ஆணையத்தைச் சேர்ந்தவர்களுடன் திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் நாடகத்தில் நடித்த குழந்தைகளுடன் கேள்வி கேட்கத் தொடங்கிய நிலையில், 12.30 மணியளவில் போலீசு அதிகாரி பசவேஸ்வரா ஹிரா அந்த ‘விசாரணையில்’ இணைந்திருக்கிறார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக குழந்தைகளிடம் கேள்வி கேட்கத் தொடங்கிய அவர்கள், இந்த நாடகத்தை எழுதியது யார், நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார், இந்த வரிகளை எழுதியது யார் என தொடர்ந்து கேட்டுள்ளனர்.

படிக்க :
♦ CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !
♦ கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !

“9 வயது முதல் 12 வயதிலான குழந்தைகளை ஏன் போலீசு இப்படி உளவியல் சித்ரவதை செய்கிறது என தெரியவில்லை. இந்த துன்புறுத்தல் அவர்களை நீண்ட நாளைக்கு வாட்டும்” என்கிறார் பிதாரில் உள்ள அந்தப் பள்ளியின் முதன்மை செயல் அதிகாரி தாவுசீப் மடிகேரி.

“மாணவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். போலீசு விசாரிக்கும்போது, பெரியவர்கள் உடன் இருக்க அனுமதிக்கவில்லை” என பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி உதவித்தொகை மூலம் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.

6-ம் வகுப்பு பெண் மாணவர் இந்த நாடகத்தை எழுதியதாகக் கூறிய நிலையில் அவருடைய தாய் நஜுமுனிசா-ஐ கைது செய்திருக்கிறது போலீசு. ஒற்றை பெற்றோராக உள்ள அவர், வீட்டு வேலை செய்பவர். அவர் கைதான நிலையில், குழந்தையை வீட்டின் உரிமையாளர்தான் பார்த்துக்கொள்கிறார்.

விசாரிக்கும் போலீசு

’செருப்பால் அடிக்க வேண்டும்’ என ஆட்சேபணைக்குரிய வரிகள் இடம்பெற்றது மோடியை அவமதிப்பதாகக் கூறி நீலேஷ் ரக்சாலா என்ற காவிக் குண்டர் கொடுத்த புகாரின் பெயரில், ஆட்சியில் இருக்கும் காவி அரசு, துரிதமாக இத்தகைய கைது மிரட்டல் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

“9, 10 வயது குழந்தை பேசுவதெல்லாம், தேச துரோகம் என சொல்கிறார்கள். இது எப்படி தேச துரோகம் ஆகும் என எனக்குப் புரியவில்லை?” என்கிறார் ஒரு பெற்றோர்.

பத்து வயது குழந்தைகளை துருவித்துருவி விசாரிக்கிறது கர்நாடக போலீசு. ஜாமியா பல்கலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது டெல்லி போலீசு ஒரு வழக்குக்கூட பதியவில்லை. போராடுகிறவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 17 வயது ‘சிறார்’ ‘சிறப்பு’ செய்யப்படுகிறார். அரசுக்கு எதிராகப் போராடும் 10 வயது சிறுவர்களை அயர்ந்து தூங்கினாலும் விடாமல் எழுப்பி கேள்விகளால் குடைகிறது காவி போலீசு.


அனிதா
செய்தி ஆதாரம்:
தி வயர்