அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது பரிவாரமும் எதிர்வரும் பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை புரியவிருக்கின்றனர். அவர்கள் வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.
முக்கியமாக 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இராணுவ ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்காக அமெரிக்க இராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திலிருந்து வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட விருக்கிறது.
மேலும், 1.86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஏவுகணை எதிர்ப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான பேரங்களும் நடைபெற்று வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளவாட தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் F-15EX ஈகிள் போர்விமானங்களை இந்திய விமானப்படைக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்திய விமானப்படைக்கு சுமார் 18 பில்லியன் மதிப்புள்ள 114 போர் விமானங்களை விற்பனை செய்வதற்காக அமெரிக்க ஆணையத்திடம் லைசன்ஸ் விண்ணப்பித்துள்ளது.
மேலும் 2.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள MH-60R சீஹாக் கடற்படை ஹெலிகாப்டர்களை விற்பனை செய்யும் ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் இருப்பதாக அரசாங்க மற்றும் அந்நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இந்த ஒப்பந்தங்களை அனுமதிக்கவிருக்கிறது.
இந்த வகை ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய கடந்த ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பழைய பிரிட்டிஷ் சீ கிங் ஹெலிகாப்டர்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த புதிய ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படையில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
படிக்க:
♦ காதலர் தினம் – ஏன் காதல் ? எது காதல் ? | வினவு கட்டுரைத் தொகுப்பு !
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !
டிரம்பின் வருகைக்கு முன்னதாக, 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வான் பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கான அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் இருதரப்பு ஆயுத வர்த்தகம் 18 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது.
டிரம்பின் வருகைக்குப் பின்னர் மேலும் ஆழமான இராணுவ ஒப்பந்தங்கள் குறித்து அறிவிப்பு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றனர். இரு தரப்பிலிருக்கும் தனியார் இராணுவ தளவாட நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்குமான முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.
மொத்தத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் மானியங்களை வெட்டி, கல்வி மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து அந்தப் பணத்தை அமெரிக்க கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்க்கிறது இந்திய அரசு. ஏற்கெனவே ஒவ்வொரு ஆண்டும் இராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சிக்கு என பல்லாயிரம் கோடி ஒதுக்கும் இந்திய அரசுக்கு, தற்போது வெளிநாடுகளில் இருந்து வாங்கியிருக்கும் இராணுவ தளவாடங்களில் ஒரு பாதியைக் கூடவா உள்நாட்டில் உருவாக்கி தயாரிக்க வக்கில்லை?
தமிழாக்கம் : நந்தன்
நன்றி : தி வயர்.