Friday, October 7, 2022
முகப்பு செய்தி இந்தியா கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!

கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!

ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.

-

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சாதாரண உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்வு மொத்தமும் ஒரு ஆழ்ந்த உறை நிலைக்குச் சென்றுள்ளது. அன்றாட உணவுத் தேவைகளைச் சந்திப்பதே பெரும் சவாலாகி விட்ட நிலையில் பொது விநியோக முறையின் கீழ் (Public Distribution System – PDS) இந்திய மக்கள் தொகையில் சுமார் 67 சதவீதம் பேருக்கு ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு உதவிகள் சென்றடையும் என்கிறது மத்திய அரசு.

ஆனால், இந்த 67 சதவீத மக்கள் தொகைக்கு வெளியே ஏராளமானோர் அத்தியாவசிய தேவைகளைச் சந்திக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என்பதே உண்மை. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி, பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரேஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்றோர் பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக விரிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரசு தலைவர் சோனியா காந்தியும் இதை வலியுறுத்தி உள்ளார்.

வயர் இணையதளம் அரசின் புள்ளிவிவரங்களைக் கொண்டே பொது வினியோக முறை அனைவருக்குமானதாக விரிவு படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளது.

இந்தியாவின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act -NFSA) இந்திய மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் பொதுவிநியோக முறையின் கீழ் வருதாக குறிப்பிடுகிறது. இதில் ஊரகப் பகுதியைச் சேர்ந்த 75% பேரும் நகர்புறங்களைச் சேர்ந்த 50% பேரும் அடக்கம். எனினும், பொருளாதார நிபுணார் ஜீன் ட்ரேஸ் எதார்த்தத்தில் சுமார் 60 சதவீதம் பேர் தான் பொது விநியோக முறையின் கீழ் வருவதாக குறிப்பிடுகிறார்.

ஏனெனில், அரசு சொல்லும் கணக்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது. அதன் பின் கடந்த ஒன்பதாண்டுகளில் மொத்த மக்கள் தொகை சுமார் 16 கோடியாக அதிகரித்துள்ளது. புதிதாக சேர்ந்துள்ள மக்களை தே.உ.பா சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதே போல் பொது விநியோக முறையின் கீழ் வராத 33 சதவீத மக்களின் தற்போதைய பொருளாதார நிலையும் ஒன்பதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் இல்லை. ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு போன்ற சர்ஜிக்கல் தாக்குதல்களின் விளைவாய் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியால் பலருடைய வாங்கும் சக்தி வீழ்ந்துள்ளது.

படிக்க:
♦ ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு !
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

அஸீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் 2018ம் ஆண்டு வெளியிட்ட ”உழைக்கும் இந்தியாவின் நிலை” என்கிற அறிக்கையின் படி சுமார் 51 சதவீத உழைக்கும் இந்தியர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 167 ரூபாய்களே வருவாய் ஈட்டுகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அன்றாடங் காய்ச்சி நிலையில் இருந்து, பொது விநியோக முறைக்கு வெளியிலும் இருந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் தற்போது உணவுத் தட்டுப்பட்டை எதிர் நோக்கி உள்ளன.

அடுத்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு மறு நாள் – அதாவது மார்ச் 27ம் தேதி – சுவான் என்கிற அமைப்பு (Stranded Workers Action Network – SWAN) இடம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் நடத்திய கள ஆய்வின் படி சுமார் 89 சதவீதம் பேருக்கு கூலி கிடைக்கவில்லை; 96 சதவீதம் பேருக்கு அரசு ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கவில்லை; சுமார் 50 சதவீதம் பேரிடம் ஒரே ஒரு நாளுக்குப் போதுமான மளிகைப் பொருகளே இருந்தன.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy’s – CMIE) என்கிற மற்றொரு அமைப்பு நடத்திய கள ஆய்வின் படி மார்ச் 15ம் தேதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 11 சதவீத குடும்பங்கள் வருமான இழப்பை சந்தித்ததாக தெரிவித்தனர். இதே அமைப்பு ஏப்ரல் 12ம் தேதி நடத்திய ஆய்வில் சுமார் 45 சதவீத குடும்பங்கள் வருவாய் இழப்பை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். இதே காலப்பகுதியில் (மார்ச் 15 – ஏப்ரல் 12) வருமான அதிகரிப்பு உள்ளதாக சொன்ன குடும்பங்களின் சதவீதம் 28-ல் இருந்து பத்தாக சரிந்துள்ளது.

ஜி.என். தேஜேஷ், கனிகா ஷர்மா மற்றும் அமான் போன்ற பொருளாதார ஆய்வாளர்கள் ஏற்கனவே பட்டினிச் சாவுகள் நிகழத் துவங்கி விட்டதாக தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகின்றனர். ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. மார்ச் மாத நிலவரப்படி இந்திய உணவுக் கழகத்திடம் சுமார் 7.7 கோடி டன் உணவு தானியங்கள் கையிறுப்பில் இருந்தது. மேலும், எதிர்வரும் ராபி பருவ அறுவடையை ஒட்டி சுமார் 4 கோடி டன் உணவு தானியத்தை கொள்முதல் செய்வுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த கையிருப்பு தேவைக்கு மிஞ்சிய உபரியை விட மூன்று மடங்கு அதிமாகும். அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார் 110 கோடி மக்களுக்கு மாதம் 10 கிலோ தானியங்களை வழங்குவதாக வைத்துக் கொண்டாலும் 6.6 கோடி டன் தானியங்களே போதுமானதாகும்.

எனவே பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக விரிவு படுத்த வேண்டும் என்று தங்களது கட்டுரையில் கோரிய அமர்த்திய சென், அபிஜித் பானர்ஜி மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர், “தேவைப்படாதவர்களையும் சேர்த்துக் கொள்வதற்கு கொடுக்கப்படும் விலையை விட, தேவைப்படுவோரை தவிர்ப்பதால் நாம் கொடுக்கப் போகும் சமூக விலை அதிகமானது” என குறிப்பிடுகின்றனர்.


– தமிழண்ணல்
செய்தி ஆதாரம் :  த வயர். 

  1. உலகமயமாக்கப்பட்ட பொது விநியோக முறையை மாநிலங்கள் கடைப்பிடித்து தேவையான எல்லோருக்கும் அரிசி, பருப்பு வழங்கலாம் என மத்திய அரசு கைகழுவிக் கொண்டது. டில்லியில் கெஜ்ரிவால் அரசாங்கம் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் தமது ஆண்ட்ராய்ட் கைபேசி மூலம் பதிவு செய்து டோக்கன் வாங்கி பயனடையலாம் என கோமாளித்தனமான நடவடிக்கையை அறிவித்துள்ளது. முதலில் எல்லோரிடமும் ஆண்ட்ராய்ட் கைபேசி இருக்க வேண்டும். எழுதப்படிக்கத் தெரியாத அந்த ஏழை மக்கள் எப்படி அது இருந்தாலும் அதை இயக்கி டோக்கன் பெற முடியும்? உண்மையில் இந்தத் திட்டம் மக்களைச் சென்றடையாது. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல குடும்பத்திற்கு பத்து கிலோ 80% மக்களுக்கு வழங்கினால் கூட 6.6 கோடி டன் தானியம் போதும். கையிருப்பே 7.7 கோடி டன் உள்ளது. தவிர இந்த ராபி அறுவடையிலிருந்து மேலும் நாலு கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யலாம். மக்கள் நல அரசுகள் என்றால் செய்யும். இது மக்கள் நல அரசா?

Leave a Reply to இரா மை யா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க