ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!

டந்த டிசம்பர் 15 தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி  ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும், இப்படியோர் எதிர்வினையைக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிசம்பர் அன்றே, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் கூடித் தொடங்கிய போராட்டம் 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில் சாதி  மதத்திற்கு அப்பாற்பட்டு பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் தினமும் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய இந்துத்துவ திரிசூலத்திற்கு எதிராகக் கண்டனங்களை முழங்குகின்றனர்.

ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு ஜார்க்கண்டின் வசேபூர், இராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் அலகாபாத், கான்பூர், எட்டாவா மற்றும் லக்னோ, பீகாரில் பாட்னா மற்றும் கயா, மும்பையின் ஆசாத் மைதானம், கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானம் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் கூடித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பீகாரின் கிஷன்கஞ்ச், கோபால்கஞ்ச், பகதூர்கஞ்ச் போன்ற இதுவரை அறியப்படாத சிறுநகரங்களிலும், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவிலும் பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யைக் கைவிடு!”

ஷாஹீன் பாக்கில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தச்சர், வெல்டர், வாட்ச்மேன், பெயிண்டர், டிரைவர் வேலைகளில் ஈடுபடும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வியாபாரிகள் உள்ளிட்ட பிற வர்க்கத்தினரும் சேர்ந்து பங்களிப்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

மும்பையிலோ நான்கில் மூன்று பங்கு பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்ற, வசதியான குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், தொழில் வல்லுநர்கள், மேலாண்மைப் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள், சுயதொழில் செய்வோர், பன்னாட்டு நிறுவன நிதி ஆலோசகர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் சாதி, மதம் வர்க்கங்களைத் தாண்டி, ஆண் வித்தியாசங்களைக் கடந்து இந்திய மக்களை ஒன்றிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டக் களங்கள் கட்டியம் கூறுகின்றன.

பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்து எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டபோதுகூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களது குடியுரிமையைப் பறிப்பதை எப்படிப் பொறுக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஒரு பெண்மணி. மோடி  அமித் ஷா கும்பல் கடந்த ஆறாண்டுகளாக உருவாக்கி வரும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும், மாட்டுக் கறி தடை, பசுப் பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் முஸ்லிம்களின் மீது ஏவிவிட்டுவரும் வன்முறையையும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பொருளாதாரரீதியான தாக்குதல்களையும் கண்டு மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் மூலமாக வெடித்திருக்கிறார்கள்.

ஜாமியா மிலியா மாணவர்கள் மீதான தாக்குதலைத் தமது சொந்தக் குழந்தைகள் மீதான தாக்குதலாகவே, தமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே உணர்ந்திருக்கிறார்கள் ஷாஹீன் பாக்கில் போராடும் தாய்மார்கள். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, பிழைப்பு தேடி வந்த இக்குடும்பங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் இடமாகவும், கனவுக் கல்வி நிறுவனமாகவும் இருக்கிறது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். இவர்களோடு ஏதாவொரு வகையில் தொடர்புடையதாக, இவர்களது பிள்ளைகளோ, உறவினர் பிள்ளைகளோ படிக்கும் இடமாக ஜாமியா பல்கலை இருந்து வருகிறது. இம்மாணவர்கள் மீதான தாக்குதல் அனைவரையும் உலுக்க, எந்தவொரு முறையான அணிதிரட்டலும் இல்லாமலேயே, அக்கம் பக்கத்தாரை அழைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். என் குழந்தைகள் சிறியவர்கள், ஆனால், அவர்கள் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஒருநாள் செல்வார்கள். எதிர்காலத்தில் இது போன்று ஏதாவது நடக்கும் நாளைப் பற்றி சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது” எனத் தனது உணர்வை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.

படிக்க :
தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

தமது புத்தகப்பைகளுடன் வரும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பப் பெண்கள் என ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றன போராட்டக் களங்கள். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்களுக்கு இதுதான் முதல் போராட்டம். முதலில் முழக்கம் போடுவது, தேசிய கீதம் பாடுவது என ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கவிதை படித்தல், பாடல்கள் பாடுதல், வீதி நாடகங்கள் நடித்தல், ஷயாரி (கஸல்) பாடல்கள் இசைத்தல், ஓவியங்கள் வரைதல் மற்றும் பொது சமையலில் ஈடுபடல் எனப் படைப்பூக்கம் கொண்டதாகப் போராட்டத்தை மாற்றியிருக்கின்றனர். போராட்டம், எங்களுக்குத் திருவிழா போல இருக்கிறது என்கிறார் மும்பை போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு பெண்மணி.

பொதுவாக, முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், அரசியல் பேசமாட்டார்கள் என்ற பின்தங்கிய நிலையை இப்போராட்டங்கள் உடைத்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக அரசியல்ரீதியாக மாபெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே காட்டுகின்றன.

இங்கு நாங்கள் 38 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் என்றால் என்னவென்றே இதற்கு முன்னர் வரை எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனும் நஸ்ரின் பேகம், இப்போராட்டத்தால் நாங்கள் படைவீரர்களைப் போன்று உணர்கிறோம்” என்கிறார் உற்சாகம் ததும்ப. அரசியல் நம்மை பாதிக்காது என்று நினைத்து, குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசியலை விட்டுவிட்டோம். நான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே என் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்ற அச்சம், இன்று செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட அரசியலைப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்துள்ளது” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகரான நாசியா.

இந்த எதிர்ப்பு முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளும் முஸ்லிமல்லாதவர்களுடனும் ஒன்றிணைய உதவியுள்ளது” என்கிறார், நாக்பாடாவில் உள்ள பத்லுபுராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜூவேரியா கான். மேலும், ஷாஹீன் பாக் போராட்டம் தொடங்கிய பின்னர், உள்துறை அமைச்சர் மற்றும் மோடியின் உரைகளை நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மோடி ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை? நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை? என்று கேள்வியெழுப்புகிறார்.

தன்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றால், இந்தத் தேர்வுகளால் என்ன பயன்?” என்று நெஞ்சைத் துளைக்கும் பார்வையுடன் கேட்கிறார் 16 வயது மாணவி அல்வீனா ஆஃப்ரீன்.

நாங்கள் கல்வி, வேலைகள், சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைத் தான் விரும்புகிறோம். சி.ஏ.ஏ. அல்ல” என்கிறார் கொல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கிய திருமதி ஜமீல். மேலும், இப்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ள போராட்டத்தைத் தனிநபராக எப்படித் தொடங்கினார், அதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜமீல், ஜே.என்.யு. நடத்தப்பட்ட தாக்குதல், நாடு ஆபத்தில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தைரியத்தைத் தந்தது. சுமார் 60 பெண்களை ஒன்றாக இணைத்தேன், எங்களுடன் பல்வேறு கல்லூரி  பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் இணைந்தார்கள், நாங்கள் இங்கே அமர்ந்தோம்” என்கிறார்.

லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் போராட்ட முன்னணியாளர்கள் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது, போலீசு. எந்த நேரத்திலும் போலீசால் தாங்கள் தாக்கப்படலாம் என்பதை போராட்டக் களத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மனவுறுதியுடன் தங்கள் போராட்டத்தைத்  தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சி.ஏ.ஏ. ஓர் இன்ச்கூடப் பின்வாங்க முடியாது என்று சொன்ன அமித்ஷாவிற்குப் பதிலடியாய், சி.ஏ.ஏ. திரும்பப்பெற வைக்காமல், இங்கிருந்து ஒரு மில்லி மீட்டர்கூட நகரமாட்டோம்” என்கிறார் ஷாஹீன் பாக் போராளி.

இஸ்லாமியப் பெண்களின் இத்தகைய உணர்வும், காவி கும்பல்களின் மிரட்டலுக்கு எதிரான போராட்ட உறுதியும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை வென்றெடுத்துள்ளது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள், 9 பேருந்துகளில் உணவுப் பொருட்களை எடுத்துவந்து, சமூக சமையல் கூடத்தை நிறுவி, ஷாஹீன்பாக்கில் போராடும் பெண்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகின்றனர்.

எந்தவித அரசியல் கட்சிகளின் தலைமையுமின்றி இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக இந்தியாவெங்கும் பரவி வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, கோலப் போராட்டமாக வடிவம் பெற்றது. பொது மக்களின் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டுதான் காவி கும்பலும் அஞ்சுகிறது. அதனால்தான் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாளில் போராட்டத்தை ஒடுக்கிவிடுவோம் என்றும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தில் ஊடுருவி பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டுப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது, காவி கும்பல்.

ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பௌதீக சக்தியாக மாறும் என்ற மார்க்சின் வார்த்தைக்குச் சான்றாக அமைந்துள்ளன நாடெங்கும் சி.ஏ.ஏ. எதிரான போராட்டங்கள்!

வசந்தன்

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க