கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, பள்ளி மாணவர்களின் பாடச்சுமைகளை 30% அளவிற்குக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாநிலப் பாடத்திட்ட (State board) புத்தகங்களில் திப்புசுல்தானின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளை கடந்த ஜூலை 27-ம் தேதி நீக்கியுள்ளது கர்நாடக அரசு.
எதிர்வரும் செப் 1-லிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், 2020-21-க்கான பாடப்புத்தகங்களில் இந்த நீக்கத்தைச் செய்துள்ளது எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு.

7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த, மன்னர்கள் திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோரின் ஆட்சி மற்றும் மைசூர் வரலாற்றுத் தளங்களைப் பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றிருந்த, ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர், திப்பு நடத்திய கிளர்ச்சிகள், ஹலகலி பெடாஸ் கிளர்ச்சி மற்றும் கிட்டூர் சென்னம்மா – ரயன்னா கிளர்ச்சி ஆகிய பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல, 7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த, அரசியல் சாசன வரைவு கமிட்டியைப் பற்றிய பாடப்பகுதிகள், அரசியல் சாசனத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகிய பகுதிகளையும் நீக்கியிருக்கிறது கர்நாடக அரசு. இது குறித்து விளக்கமளிக்கையில், இதே பாடத்தை 9-ம் வகுப்பில் படிப்பதால் இது தேவையில்லை என்று கூறியிருக்கிறது. இதே காரணத்தைக் கூறி ஏசு மற்றும் முகமது ஆகியோரைப் பற்றிய பாடங்களை 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது.
காலனியாதிக்கவாதிகளின் சிம்ம சொப்பனமாய் விளங்கிய திப்புசுல்தான் மீது நீண்ட காலமாக சங்கிகள் வெறுப்பையே கக்கி வந்தனர். பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை, திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதை இரத்து செய்து உத்தரவிட்டது எடியூரப்பா அரசு. அதேபோல, திப்புவின் வரலாற்றை பாடத்திலிருந்து நீக்கவும் முற்பட்டது.
படிக்க:
♦ ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
♦ சி.பி.எஸ்.ஈ பாடத்திட்ட மாற்றம் : ஜனநாயகத்தை கல்வியிலிருந்தே ஒழித்துக்கட்டும் சதி !
ஆனால், அதே ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்ட பாடத்திட்டக்குழு “திப்புசுல்தானின் வரலாற்றைக் கூறாமல் மைசூரின் வரலாற்றைக் கூறமுடியாது” என்று அறிக்கையளித்ததைத் தொடர்ந்து இதைச் செய்ய முடியாமல் பின்வாங்கியது. இப்போது கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, பாடச் சுமைகளைக் குறைப்பது என்ற பெயரில் தங்கள் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர் பாசிஸ்டுகள்.
இதேபோல, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து அரசியலமைப்பு குறித்த முக்கியப் பகுதிகளையும் திருக்குறள், பெரியார் சிந்தனை போன்றவற்றையும் சில வாரங்களுக்கு முன்பு மத்திய மோடி அரசு நீக்கியது நினைவிருக்கலாம்.
கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி 12 மணிநேர வேலை நேரம், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவது, பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவது, சுற்றுச்சூழல் விதிகளைத் திருத்துவது உள்ளிட்ட நீண்ட கால கார்ப்பரேட் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. அதே போல, சங்கபரிவாரத்தின் நீண்டகாலத் திட்டமாகிய பாடப் புத்தகங்களை காவிமயமாக்குவது என்பதையும் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
– தீரன்
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால்.