தேதி : 29.7.2020
பு.மா.இ.மு கண்டன அறிக்கை!
பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க வருகிறது ’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக்கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும்!
நாடு முழுவதும் கடுமையாக எதிர்க்கப்பட்ட புதிய கல்விக்கொள்கைக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி தலைமையிலான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014 இல் இருந்தே கல்விக் கொள்கையை மாற்ற தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.
நாடு முழுவதும் கல்வியாளர்களாலும், மாணவர்கள் அமைப்புகளாலும் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்ததால் அவ்வப்போது பின்வாங்கி வந்தவர்கள் இப்போது கொரோனா – ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறைகளால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு புதிய கல்விக்கொள்கையை நாட்டின் மீது திணிக்கிறார்கள்.
இது கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி! பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இதுவரை இருந்து வந்த பள்ளிக்கல்வி அமைப்பு முறையை 5+3+3+4 என மாற்றியமைக்கப்படுகிறது. 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு. பள்ளிக்கல்விக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வகுக்கப்படுமாம். அனைத்துவிதமான உயர்கல்விக்கும், அதாவது கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வு, கல்லூரிகளே இனி பட்டம் வழங்கும் என உயர்கல்வி நிறுவனங்களை தன்னாட்சி பெற்றதாக மாற்றுவது, எம்.ஃபில் படிப்பை ஒழித்துக் கட்டுவது, கல்வித் துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து அனைத்தையும் மையப்படுத்துவது ஆகியவற்றை இப்புதியக் கல்விக்கொள்கை செய்யப் போகிறது.
ஏற்கனவே கல்வித்துறையில் தனியார்மயத்தை புகுத்தியதன் விளைவாக மாணவர்கள் கல்வி பெறுவதில் ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த வரைமுறையும் இன்றி பகற்கொள்ளையடிக்கிறார்கள், கல்விக் கட்டணம் கட்டமுடியாத பெற்றோர்களும், மாணவர்களும் அநியாயமாக தூக்கியெறியப்படுகிறார்கள். இதை எதையும் தடுக்க முடியாதபடி அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், அதிகாரிகளும், நீதிமன்றங்களும் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு துணையாக நிற்பது நாடறிந்த உண்மை. இந்நிலையில் கல்வித்துறையை முழுக்க தனியார்மயப் படுத்துவதென்றால் இனி ஏழைகளுக்கு கல்வி இல்லை என்பது நிச்சயம்.
படிக்க:
♦ நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
தரத்தின் பெயரில் பணக்காரர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மட்டும் உயர்க் கல்வி, ஏழைகளுக்கு 10-ம் வகுப்புக்கு மேல் தொழிற்பயிற்சி. “சூத்திரர்களுக்கு கல்வி இல்லை. அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் இந்த புதிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் உயிர்ப்பெறப்போகிறது. மும்மொழி திட்டத்தின் பெயரில் இந்தி – சமஸ்கிருதம் திணிக்கப்படபோகிறது.
பாடப்புத்தகங்களில் பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும் ஒழிக்கப்படும். இந்திய வரலாற்றை இந்துத்துவ வரலாறாக திரிப்பது, சமஸ்கிருத பண்பாட்டை புகுத்துவது, தொன்மை – பாரம்பரியம் – பண்பாடு எனும் பெயரில் அறிவியலுக்கு புறம்பான வேதம் – புராணம் – இதிகாசம் போன்ற மூட நம்பிக்கைகளை, ஆபாசக் குப்பைகளை பாடத்திட்டமாக்குவதுதான் இவர்களின் நோக்கம். சமுதாய ஒப்படைப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவார்கள். உயர்க் கல்வியை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர்க் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள்.
மொத்தத்தில், இந்திய கல்வியை சர்வதேசியமயமாக்குவது. கெயின், மூக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை மாணவர்களுக்கு வரவைப்பது. அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கி சொந்த நாட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை பறிப்பது. இதுதான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் களத்தில் இறங்குவோம். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாணவர் நலனுக்கும் எதிராக உள்ள மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
தோழமையுடன்
த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
சென்னை ஐஐடியில் புரொஃபசர் பெரியசாமி தங்கவேலு அவர்கள் பதிவு
இப்பொழுது ஒரு கூட்டம் _நாங்கள் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் படித்துள்ளோம்.._ எங்களுக்குத்தான் GER Ratio அதிகமாக உள்ளது, நாங்கள் இந்தியாவை விட மேல் என்றெல்லாம் கம்பு சுற்றி வருகிறார்கள்.
இந்த 18 வருடங்களாகத் தமிழ்நாட்டு கல்வியைப் பார்த்து வருகிறேன். நான் பார்த்த வரையில் நம் தமிழ்நாட்டின் தேர்வுமுறை உண்மையான அறிவைச் சோதிக்கும் தேர்வு முறை அல்ல. மாணவர்களின் அறிவை வளர்ப்பதை விட்டு அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க மற்றும் மதிப்பெண் வாங்க வைக்க மட்டுமே உதவும் தேர்வு முறையாக உள்ளது.
இந்தத் தேர்வு முறையில் மிக அதிகமாக மாணவர்களைப் பட்டம் வாங்க வைக்க மட்டும் தான் முடியும். சொல்லப் போனால் இது ஒரு ஏட்டுச் சுரைக்காய்தான்! நமக்கு இருந்த தேர்வு முறையைப் பற்றிச் சிறிது விளக்கமாகக் கூற விரும்புகிறேன்
1. நம் தேர்வுமுறை Blue Print எனப்படும் முறையை பின்பற்றி இருந்தது
2. Bule print என்றால் எந்தப் பாடத்தில் எந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும், எவ்வளவு கேள்வி கேட்க வேண்டும், இந்த நம்பர் கேள்வி இந்த பாடத்தில் இருந்து, இந்த பிரிவில் இருந்து மட்டுமே கேட்க வேண்டும் என்பதாகும். அதுவும் பாடப் புத்தககத்தில் உள்ள கேள்வி ஒரு எழுத்து மாறாமல் கேட்க வேண்டும் என்ற rule புக் ஆகும்.
3. மாணவனுக்கு ஒரு குறிப்பிட்டக் கேள்வி எண்ணில் எந்தக் கேள்வி வரும் என்று தேர்விற்கு முன்னரே தெரியும்
4. இது ஒரு விதத்தில் கேள்வித் தாளை மாணவனுக்கு முன்கூட்டியே கொடுப்பதற்குச் சமம்!
5. கேள்வித்தாளை முழுமையாகப் படித்ததே இல்லை. தேர்வில் கேள்வியின் முதல் வார்த்தையைப் பார்த்தவுடன் பதில் எழுத ஆரம்பித்து விடுவான்.
6. கணக்குப் பாடத்தைக் கூட மனப்பாடம் செய்து எழுதிய அவலம் இங்குதான் நடந்தது
7. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூற விரும்புகிறேன். ஒரு _பிரபல பள்ளியில்_ படித்த மாணவன் என்னிடம் ஆலோசனை பெற வந்திருந்தான். அவன் +2 கணித பாடத்தில் 199/200 மதிப்பெண் பெற்றிருந்தான். என் மேசையில் ஒரு கணித Question Bank இருந்தது. அதில் ஒரு கேள்வி _Find the Rank of the matrix_ என்பதாகும். அதைப் பார்த்தவுடன், “சார் இதற்குப் பதில் மூன்று” என்றான். எப்படித் தம்பி கூறுகிறாய்? இதற்க்கு நிறைய calculation செய்ய வேண்டுமே என்றேன்.
“சார், இது எங்கள் book back கேள்விதான் சார்.. _Diagonal element-ல் மூன்று lambda வந்தால்_ பதில் மூன்று சார்!” என்றான். “நாங்கள் அனைவரும் அப்படித்தானே படித்தோம்” என்றான்.
நான் அவனிடம், “off digagonal element எண்களை மாற்றினால் பதில் மாறிவிடுமே?” என்றேன்.
அதற்கு அவன், “சார், அப்படி மாறினால் அதை _out of syllabus_ என்று எங்கள் ஆசிரியர்களே மதிப்பெண் வாங்கி கொடுத்து விடுவார்கள். Rank of the matrix என்று கேள்வி வந்தாலே நாங்கள் மூன்று என்றுதான் பதில் எழுதவேண்டும்” என்றான். இதுதான் நம் கல்வியின் நிலைமை.
8. இன்று போட்டித் தேர்வுகளுக்குப் போகும் நம் மாணவர்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, _கேள்வியே தெரிவதில்லை_ என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. இதற்கு மேற்கூறிய தேர்வுமுறையே காரணம்.
9. இந்தத் தேர்வுமுறையை வைத்துக் கொண்டு நாங்கள் இவ்வளவு சதவிகிதம் பாஸ், எங்கள் GER Ratio இவ்வளவு என்று பீத்திக்கொள்வது எப்படி முறையாகும்?
10. இந்த தேர்வுமுறை அடிமைகளை உருவாக்குவதற்குத்தான் பயன்பட்டது. சுய சிந்தனை என்பது இல்லாமலேயே போய் விட்டது. இந்த பெருமை பேசும் அனைத்து போராளிகளின் குழந்தைகளும் CBSE பாடத்திட்டத்தில் படிப்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
11. பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில்தான். பாடத்திட்டத்தின் தரத்திற்காக போராட்டம் நடத்தப்பட்டதே இல்லை. அதனால் தான் 14 வருடங்களாக பாடத்திட்டம் மாறாமலேயே இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அவர்கள் எழுதிய தேர்வு சார்ந்து இல்லாமல், அரசியல் சார்ந்தும் இருந்தது தான் கொடுமையிலும் மிகப்பெரிய கொடுமை.
12. அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கி அவர்களை தேர்ச்சி பெறவைத்து GER Ratio அதிகம் என்று பீத்திக்கொள்வது எப்படி உண்மையான சாதனையாக இருக்க்க முடியும்.
நான் சில கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன்:-
1. GER Ratio அதிகம் உள்ளதை வைத்து நாம் என்ன சாதித்திருக்கிறோம்?
2. எத்தனை கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறோம்?
3. நம் நாட்டிற்கு அதன் மூலம் எவ்வளவு பயனீட்டிக் கொடுத்திருக்கிறோம்?
4. எவ்வளவு Patent வாங்கியிருக்கிறோம்?
5. மென்பொருள் துறையில் கூட 30 வருடங்களாக அடிமை வேலைதானே செய்து கொண்டிருக்கிறோம்! அடிமை வேலை செய்வதற்காகத்தான் நம் கல்வி முறை மக்களை உருவாக்குகிறதா?
6. அகில இந்திய அளவில் நடக்கும் வேலை போட்டியில் எவ்வளவு வென்றிருக்கிறோம்?
7. விளையாட்டுத் துறையில் எவ்வளவு சாதித்து இருக்கிறோம்?? கேட்டால் இந்தி பேசுபவர்களின் சதி என்பார்கள். இந்தி பேசாத ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் வெல்கிறார்களே, அது எப்படி??? எடுத்துக்காட்டாக, நாட்டில் உள்ள IITக்களில் 60% மாணவர்கள் ஆந்திராவில் இருந்து மட்டும். அதே போல் தேசிய வேலைவாய்ப்புகளில் அவர்கள் மிக அதிகமாகவே உள்ளார்கள்அது எப்படி??
எனவே வெறும் பெருமை பேசாமல் #NEP 2020 உள்ள _குறைகள் எதாவது இருந்தால் அரசுக்கு எழுதுங்கள்._ இந்திய அரசாங்கம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததிக்கும் சேர்த்தே இந்தக் கல்விக்கொள்கையை 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவந்துள்ளார்கள். முதல்முறையாக *6% அரசு வருமானம் கல்விக்கு* செலவிடப்பட உள்ளது. கடந்த _பல வருடங்களாக கருத்து கேட்டு கிட்டத்தட்ட 2 லட்சம்_ கருத்துக்களை உள்வாங்கி இதை வடிவமைத்துள்ளார்கள். அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமலே இப்பொழுது சில நடிகர்களின் சொல்லை வேதவாக்காக கருதிக்கொண்டு பேசுவது நம்மையெல்லாம் பெரும் குழிக்குள் தள்ளிவிடும்.
கடந்த 30 வருடங்களாக நடிகர்களின் பேச்சை கேட்டு முட்டாள்களாகவே மாறி அவர்களை அரசாள அனுமதித்திருக்கிறோம். மீண்டும் அது தொடர்ந்தால், ஓட்டிற்குக் காசு வாங்கும் ஈனப் பிழைப்பைத் தொடருவதை தவிர வேறு வழியில்லை.
ஐஐடியிலும் ஒரு பெரியஸ்வாமியா..! 😲
மெத்த படித்த மேதாவிகளான பெரியசங்… மன்னிக்கவும் பெரியஸ்வாமிகளுக்கு GER (Gross Enrolment Ratio) என்றால் என்னவென்று தெரிந்தும் அதை பாடத்திட்டத்துடன் இணைத்து சங்கி வேலை செய்கிறார்கள். என்ன செய்வது.. நம் ஆசான் பெரியார் இவர்களை விட நமக்கு அறிவை வளர்தெடுத்து விட்டாரே..! புதிய கல்வி கொள்கையின் உருட்டலில் ஒன்று GERஐ உயர்த்துவது. GER என்றால் பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களின் விகிதம். இந்தியாவில் சராசரியாக 26% மாணவர்கள் பள்ளி முடித்து கல்லூரியில் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் நாம் இதை 49% சாதித்திருக்கிறோம். கிட்டத்தட்ட இருமடங்கு சாதித்த நமக்கு புதிய கல்வி கொள்கை என்ன புடுங்கிவிடப் போகிறது?
கல்லூரியில் படிக்கும் எனது மகள் இரண்டு பாடதிட்டங்களிலும் படித்திருக்கிறார். அதுபற்றி அவரது கருத்தை படித்துவிட்டு மேற்செல்வோம்.
//Both state board and cbse have almost similar portions. But, the way of teaching and exams vary . In Metric people are made to memorize becz the same question repeats year after year even without changing in a word. In CBSE the questions are always new and it is of no use memorizing very rare questions repeat so the wat the teacher teaches is based on concepts
But in area like Theni district both cbse and metric are taught the same way…. Even though Bharathi vidhyala Chennai was a small school compared to city schools its way of teaching is far better than school in our Theni district.//
CBSE பாடத்திட்டத்திற்கும் சமச்சீர் கல்விக்கும் பெரிய வித்தியாசமில்லை. கற்பிக்கும் முறையை சீரமைக்க புதிய கல்வி கொள்கையை கொண்டு வருவது வயிற்று வலிக்கு அரளி விதையை அரைத்து கொடுப்பது போன்றது. இந்த கல்விமுறையில் படித்த மருத்துவர்கள்தான் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோலோச்சுகிறார்கள்.
ஆந்திராவை பொருத்தவரை உயர்சாதிகளில் வரதட்சணை அதிகம். உயர் வரதட்சணை பெற்று தத்தம் போலி சாதிப் பெருமையை காப்பாற்ற பையன்களை பலவித நுழைவு தேர்வுகளுக்கு தயார் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது சமூக சீர்கேடே அன்றி முன்னேற்றம் அல்ல.
மிகச்சிறந்த பாடதிட்டம் மற்றும் பயிற்று முறையில் படித்து வந்ததாக வைத்துக்கொண்டாலும் நுழைவு தேர்விற்கென்றே உள்ள பயிலகங்களில் பயிலாமல் எந்த நுழைவுத்தேர்விலும் தேறமுடியாது. புதிய கல்வி முறையில் படித்தாலும் நுழைவுத் தேர்வுகளில் ஒரு ம….ம் sorry ஒரு மண்ணும் அள்ள முடியாது.
புதிய கல்வி கொள்கையை ஒழித்துக்கட்டுவோம்..!