முகப்புசெய்திதமிழ்நாடுசென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !

சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !

மாநிலத்தின் நிதியாதாரத்தை ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசின் காலில் சமர்ப்பித்துவிட்டு, மாநில நிதி நெருக்கடியை ஈடுகட்ட டாஸ்மாக்கை திறந்து மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டது எடப்பாடி அரசு.

-

ந்தியாவின் 74வது ‘சுதந்திர’ தினம் கொண்டாடப்பட்ட மறுநாளில் (16-08-2020) திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சவரத் தொழிலாளி தனது மனைவியுடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் தமது கடையை நான்கு மாதங்களாக திறக்க முடியாத சூழலில் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த முதியவர் தர்மராஜ் ஊரடங்கு காரணமாக தொழில் செய்ய முடியாத சூழலில் கடன் மற்றும் அருகில் வசிப்பவர்கள் தரும் உணவுப் பொருட்களைக் கொண்டு தனது மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். 4 மாதங்களாக நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் தனது மனைவியுடன் கடந்த 16.08.2020 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கிறார்.

அதே நாளில்தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 5 மாதங்களாக மூடிக் கிடந்த டாஸ்மாக்கை 18.08.2020 அன்று முதல் திறக்க உத்தரவிட்டிருகிறார். மாநிலத்தின் நிதியாதாரத்தை ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசின் காலில் சமர்ப்பித்துவிட்டு, மாநில நிதி நெருக்கடியை ஈடுகட்ட டாஸ்மாக்கை திறந்து மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டது எடப்பாடி அரசு.

ஏற்கெனவே மே 7-ம் தேதி சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சுமார் 3700 கடைகளை திறக்க உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 45 நாட்கள் ஊரடங்கிற்குப் பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதோடு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அச்சமயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

படிக்க:
மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !
குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

சும்மா விடுமா எடப்பாடி அரசு ! கையில் இல்லாத காசை தாய்மார்களின் தாலியறுத்தாவது ஈட்ட வேண்டும் என்ற ‘கடமையுணர்ச்சியோடு’ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தது தமிழக அரசு. உச்சநீதிமன்றமும் கடந்த மே 16-ம் தேதி முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதி வழங்கியது.

கொரோனா ஊரடங்கில் தொழிலின்றி முடங்கிக் கிடந்த ஏழைகளின் வயிற்றில் அடித்து டாஸ்மாக் கல்லா நிரப்பப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறந்தால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கடைகள் திறக்கபடவில்லை. ஆனாலும் ‘பிளாக்கில்’ ‘சரக்கு’ வியாபாரம் நடந்து கொண்டுதான் இருந்தது.

இந்நிலையில், சென்னையில் மட்டும் கொரோனா அதிகமாக இருந்த நிலை மாறி தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியது. ஒப்பீட்டளவில் சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 1100 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுவரும் சூழலில், சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. இதனையொட்டி இன்று முதல் காலை 10 – இரவு 7 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 500 டோக்கன்களுக்குத் தான் சரக்கு வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த சென்னை போன்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதும், அதிலும் குறைவான டோக்கன் தான் வழங்கப்படும் என்று அறிவிப்பதும், கூட்ட நெரிசலை அதிகரிக்கும். இது தன்னியல்பாகவே கொரோனா தொற்றை அதிகரிக்க உதவும்.

கொரோனா தொற்று ஒருபுறமென்றால், மறுபுறம் கொரோனாவை விடக் கொடுமையான தொழில்நசிவு, வேலையின்மை, வருவாய் இழப்பு ஆகியவை பல காளிதாஸ்களை அன்றாடம் தற்கொலையை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன. தற்போது டாஸ்மாக் கொள்ளையும் இணைந்து பசி பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்யக் காத்திருக்கிறது !


நந்தன்
நன்றி: தினகரன். (17-08-2020)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க