செப்டம்பர் 17 அன்று, தந்தைப் பெரியாரின் 142 -வது பிறந்தநாளை “பாசிச எதிர்ப்பு நாளாக” முன்னிறுத்தி திருவாரூரை சேர்ந்த மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ், மாற்றத்திற்கான மக்கள் களம், அனைத்து மக்கள் நீதிக்கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, மே 17 இயக்கம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய “ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு” சார்பாக இருசக்கரப் பேரணி நடத்தப்பட்டது.

பெரியார் முதலில் கடவுள் மறுப்பு இயக்கத்தை தொடங்கிய ஊரான கண்கொடுத்தவனிதம் என்ற கிராமத்தில் இருந்து பேரணி தொடங்கியது. அப்பகுதியில் திராவிட கழகம் சார்பாக பெரியார் பிறந்தநாளுக்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வேண்டுமென்ற  திமிர்த்தனமாக மறைத்து ‘மோடியின் பிறந்த நாள்’ சுவரொட்டியை ஒட்டியிருந்தனர்.

இதை கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் மற்றும் தி.க-வினருடன், பாஜக தவிர்த்த அனைத்து ஓட்டுக் கட்சியினரும் பொதுமக்களும் என நூற்றுக்கணக்கில் திரண்டனர். பா.ஜ.க.-வின் ஒன்றிய துணை செயலாளரை வரவழைத்து மக்கள் முன்னால் மோடியின் சுவரொட்டியை தன் கையாலேயே கிழிக்க வைத்து, “இனிமேல் இப்படி தவறு செய்ய மாட்டோம்” என்று மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார். பேரணி குளிக்கரை, தேவர்கண்ட நல்லூர், வேலங்குடி, புலிவலம், கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், திருவாரூர் நகரம், பவித்தர மாணிக்கம், காட்டூர், நன்னிலம், சன்னாநல்லூர் வழியாக முடிகொண்டான் ஊரில் முடிவுற்றது.

தந்தை பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு பெரியாருக்கு மரியாதை செலுத்தி முழக்கமிடப்பட்டது. பாசிச கும்பலின் வெறியாட்டத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்றிணைந்தால் முறியடிக்க முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியதாக இந்த நிகழ்வு அமைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம், திருவாரூர்.
தொடர்புக்கு : 8220716242.