10.05.2021
ம.க.இ.க-வின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும், மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா-வின் தந்தையுமான தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்களின் தந்தையுமான தோழர் சம்புகன் இன்று காலை உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தொடக்க காலம் முதல் இறப்பு வரை அந்த அமைப்பிலேயே இருந்து அதன் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தவர்.
அவர் தங்கியிருக்கக் கூடிய சூலூர் ஆதிக்க சாதிவெறியர்களின் மதவெறியர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவர்.
கோவை குண்டுவெடிப்பின் போது போலீசால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானவர். மக்கள் பிரச்சினைகளுக்காக ஓயாது போராடி பலமுறை சிறை சென்றவர்.
ஒண்டிப்புதூர் பகுதியில் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் தலைவராக விளங்கியவர்.
தொழிற்சங்கப் பணியில் தொழிலாளர்களுக்காக சமரசமின்றிப் போராடியதால் முதலாளிகளால் பலமுறை தாக்குதலுக்கு ஆளானவர்.
மக்கள் அதிகாரம் நடத்திய முதல் மாநாடான மூடு டாஸ்மாக்கை முதல் எல்லா இயக்கங்களிலும் மாணவர்கள், இளைஞர்களோடு ஒருங்கிணைந்து அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயக்க வேலை செய்தவர்.
மறைந்த தோழர் மணிவண்ணனும், தோழர் சம்பூகனும் நக்சல்பாரி இயக்கத்தின் அடையாளமாக கோவையிலும் ஒளிர்ந்தார்கள்.
இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் பார்ப்பன பாசிச சக்திகள் மேலோங்கி வந்த சூழலில் கோவையில் மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாட்டினை நடத்திய தோழர்களில் அவரும் ஒருவர்.
தாராளவாதம், கலைப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இறுதிவரைப் போராடி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புதிய மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாகப் பாடுபட்டவர்.
கடந்த வருடம் ஒரு விபத்தில் நடக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் அமைப்பு வேலைகளை திறம்பட கொண்டு சென்றவர்.
தன்னுடைய மகளை அரசியல் ரீதியாக வளர்த்தும் சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்தும் ஆண் பெண் வேறுபாடின்றி தவறைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற உணர்வோடு வளர்த்தவர்.
இறுதியாக, கடந்த ஏப்ரல் 24 லெனின் பிறந்த நாளை ஒட்டி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட தோழர் சம்பூகன் இன்று உயிரிழந்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் குடும்பத்தையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !
கோவை மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்களுக்கும் தோழர் சம்பூகனுடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அனைத்து தோழர்களுக்கும் மக்கள் அதிகாரம் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தோழமையுடன்,
தலைமைக்குழு,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321