கொற்றலை ஆற்று கழிமுகம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எதிர்த்த எண்ணூர் மீனவர்கள் போராட்டத்திற்கு துணை நிற்போம் !

19.07.2021

பத்திரிகைச் செய்தி

நிலமும் நீரும் மக்களின் சொத்து – கொற்றலை (கொசஸ்தலை) ஆற்றின் மீது TANGEDCO-வின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எண்ணூர் மீனவர்களின் நீர்வழிப் போராட்டம் வெல்லட்டும்.  TANGEDCO-வும் L&T-யும் இணைந்து ஆற்றை அழிக்கும் இந்த வேலை கண்டனத்துக்கு உரியது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

“எந்த ஊருக்கும் போய் வேலைக்கொடு என்று நாங்கள் கேட்டது கிடையாது வந்த வேலையை கூட தள்ளிவிட்டு விடுவோம். எங்களுக்கு ஆறு இருக்கிறது சோறு போட” – என்கிறார்கள் எண்ணூர் மீனவப் பெண்கள். அந்த அளவிற்கு கொற்றலை ஆறு அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

மூன்று மாதம் முன்பு வரை ஆறாக இருந்த இடத்தில் இன்று, ஆற்றின் ஒரு பகுதியில் L&T-யும் TANGEDCO-வும் சேர்ந்து மணலைக் கொட்டி, எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்துடன் (SEZ) இணைந்து அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்வதற்கான கன்வேயர் கட்டுமானத்தை ஆற்றை ஆக்கிரமித்து கட்டுகின்றன.

மணல் கொட்டியதால் இறந்து போகும் இறால்கள்

இதனால் அங்குள்ள மீன்வளம் அழிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆற்றுக்கு பின்புறத்தில் அலையாத்தி காடுகள் இருக்கின்றன. எண்ணூர் கடைமடை பகுதிகளிலேயே மிச்சம் இருக்கக் கூடிய முக்கியமான அடர்த்தியாக ஆரோக்கியமாக உள்ள அலையாத்தி காடுகள். இங்கு ஐந்து வகையான இறால், பல வகையான நண்டுகள், மடவை போன்ற உயிரினங்கள் கிடைக்கும் இயற்கை வளமுள்ள பகுதியாக உள்ளது.

இந்த பகுதி ஊர் மக்கள் தொழில் செய்யும் இடமாக இந்த ஆறு இருக்கிறது. அலையாத்தி காடுகள் இருப்பதால், உயிர் சூழல் அதிகமாக உள்ளது. மீன்கள் இங்கு தான் அதிகம் உற்பத்தியாகிறது. இங்கு மணலை கொட்டுவதால் இங்குள்ள இறால்கள் உற்பத்தி தடைபடுவதோடு அவை அழிகின்றன.  இப்படி மணல் கொட்டுவதால் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் எந்த உயிரும் உற்பத்தியாகாது என்கின்றனர் மீனவ மக்கள்.

இப்போது கன்வேயர் போடும் இடம் அனுமதி பெற்ற இடம் கிடையாது. ஆற்றிற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில்தான் வழி போகிறது என்று அனுமதி வாங்கி விட்டு, ஆற்றின் குறுக்கே ஆக்கிரமித்து கன்வேயர் போடுகிறார்கள். இதனால் மீனவப் பெண்கள், குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்த 2500 பேரின் வாழ்வாதாரம் இந்த அலையாத்தி காடுகளை நம்பித் தான் இருக்கிறது. அவர்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். சுற்றியுள்ள மீனவ கிராமங்களின் பொருளாதாரமும் இதை நம்பியிருக்கிறது. இந்த சட்டவிரோதமான செயலை அரசு அதிகாரிகள் தடுக்காத நிலையில், மீனவ மக்கள் ஆற்றையும் வளத்தையும் காக்கப் போராடுகிறார்கள்.

ஆற்றில் TANGEDCO-வும் L&T-யும் சேர்ந்து மணலைக் கொட்டி, 2017-ம் ஆண்டிலேயே முடிந்துபோன வழித்தட வேலைக்காக, அனுமதியை புதிதாக புதுப்பிக்காமல் இந்த வேலையை சட்டவிரோதமாக செய்து வருகின்றனர்.

TANGEDCO- L&T-யின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக இதை கண்டிக்கின்றோம். இதை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எண்ணூர் மக்களின் நியாயமான போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் துணை நிற்போம்.

தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
91768 01656.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க