நாள்: 04-07-2022

பத்திரிகை செய்தி:

வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக
பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய
சில குறிப்புகள்

அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தமிழ்நாடு என்ற எமது அமைப்பில் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக செயலர் பொறுப்பிலிருந்தவரும் 74 வயதான முன்னாள் செயலருமான கணேசன் என்கிற அன்பழகன் 28-06-2022 அன்று பிற்பகலில் மரணமடைந்துள்ளார்.

அன்பழகன் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர், நக்சல்பாரி புரட்சிகர அரசியலை ஏற்று 1970-களின் தொடக்கத்தில் நாட்டையும் மக்களையும் விடுதலை செய்யும் இலட்சியத்தோடு முழுநேர ஊழியராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அன்று, இடது சந்தர்ப்பவாத வழிமுறையாலும் அரசின் கொடூர அடக்குமுறையாலும் இ.பொ.க. (மா-லெ) பிளவுபட்டிருந்த சூழலில், மாற்று வழியை – மக்கள்திரள் வழியை முன்வைத்து 1977-இல் மாநில அமைப்புக் கமிட்டி உதித்தெழுந்தபோது, மா.அ.க.வின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவரும் குறிப்படத்தக்க பங்காற்றினார். பின்னர் 1981-இல் நடந்த மா.அ.க.வின் மூன்றாவது பிளீனத்தில் அவர் எமது அமைப்பின் நான்காவது செயலராகப் பொறுப்பேற்றார்.

2021-இல் நடந்த எமது அமைப்பின் பத்தாவது பிளீனத்தில் அவரது அரசியல் – சித்தாந்த – அமைப்புத்துறை தவறுகளின் காரணமாக அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். எமது அமைப்பில் முழுநேர ஊழியராகச் செயல்பட்டு வந்த அவர், தனது பொறுப்பும் அதிகாரமும் பறிக்கப்பட்டதை ஏற்க முடியாமல், வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத சித்தாந்தத்தில் மூழ்கி, சீர்குலைவு நடவடிக்கையிலும் கோஷ்டிவாதத்திலும் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக அவர் அமைப்பைப் பிளவுபடுத்தி, கடந்த 2022 மே மாத இறுதியில் எமது அமைப்பிலிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களுடன் தனியொரு குழுவாகச் செயல்பட்டார். அவரது பிளவுவாத கோஷ்டிவாத சீர்குலைவு நடவடிக்கைகள் அம்பலப்பட்ட நிலையில், அவரையும் அவரது கோஷ்டிவாத பிளவுவாத நடவடிக்கைகளுக்குத் துணைநின்றவர்களையும் எமது அமைப்பிலிருந்து மா.அ.க. அதிகாரபூர்வமாக வெளியேற்றியது.

இதையொட்டி, 13-06-2022 தேதியிட்டு, “அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது! ஐக்கியமும் புத்தார்வமும் அமைப்பில் கரைபுரண்டோடுகிறது!” என்ற தலைப்பிட்ட அறிக்கையை மா.அ.க.வின் சார்பில் வெளியிட்டிருந்தோம்.

சந்தர்ப்பவாதிகளின் அஞ்சலிகள்

ஏற்கெனவே முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த முன்னாள் செயலர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 28-06-2022 அன்று மரணமடைந்துவிட்டார்.

இந்நிலையில்,

“2010 வரை எளிய மக்களுடன் வாழ்ந்து வந்த தோழர், அமைப்பு வேலைகளின் காரணமாக நகர்ப்புறங்களிலும் குட்டி முதலாளித்துவ வாழ்க்கைமுறை கொண்ட தோழர்களின் குடும்பங்களிலும் தங்கி வேலை செய்யத் துவங்கியதன் விளைவாக சிந்தனைமுறையிலும் அவரிடம் பாட்டாளி வர்க்க விரோத பண்புகள் குடிகொள்ளத் துவங்கியது.

பிறரிடம் சரியான கம்யூனிச வாழ்க்கைக்காக கறாராக போராடிய தோழர், தன்னையும் தனக்கு நெருக்கமான சில தோழர்களையும் தாராளமாக பரிசீலிப்பது என்ற இரட்டை அணுகுமுறையை கையாண்டு இறுதி காலத்தில் அணிகளிடம் தனிமைப்பட்டு கடும் விமர்சனத்திற்கும், கட்சியை பிளவுபடுத்திய பழிக்கும் ஆளாகி இருந்தார் என்பது எதிர்மறை அனுபவமாக பரிசீலிக்கப்பட வேண்டும்

தனது இறுதி காலத்தில் பாட்டாளி வர்க்க விரோதப் பண்புகளுக்கு ஆளானது மட்டுமின்றி அதிகாரத்துவ நபராகவும், ஜனநாயக மறுப்பு, சீர்குலைவு போன்ற மார்க்சிய-லெனினிய விரோத பண்புகளுக்கு ஆளானார். இது போன்ற பாரிய தவறுகள் இருந்தபோதிலும், தன் வாழ்நாள் முழுவதும் இறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார் என்று மதிப்பீடு செய்வதற்கு தடையாக உள்ளது. எனினும், ஒரு மனிதரை பரிசீலிக்கின்றபோது, கடந்த காலத்தில் அவர் செய்த வேலைகள், அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றையும் நடைமுறையில் தற்போது அவர்கள் செய்து கொண்டிருக்கும் சரி-தவறுகளையும் பரிசீலித்து எதிர்காலத்தில் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று அணுகும் இயங்கியல் அணுகுமுறைதான் ஆசான்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது என்ற வகையில் தோழர்.கணேசனிடம் நாம் கற்றுக்கொண்ட சிறந்த பண்புகளை எடுத்துக் கொள்வோம்!”

என்று நமது அமைப்பிலிருந்து வெளியேறிச் சென்றுள்ள சீர்குலைவுவாத – நவீன கலைப்புவாத கும்பல் மா.அ.க. என்ற பெயரில் 29-06-2022 தேதியிட்டு “மாநில அமைப்பு கமிட்டியின் முன்னாள் செயலர் தோழர்.கணேசன் மறைந்தார்! மறைந்த தோழர் கணேசனுக்கு எமது அஞ்சலி!” என்ற தலைப்பில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

“முதலில் ஓடிப்போன கலைப்புவாத கும்பலையும், பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று கட்சியையே அழித்துக் கொண்டிருக்கும் அரசியலற்ற, சித்தாந்தமற்ற, பண்பாடற்ற கோஷ்டிகளையும் எதிர்த்துப் போராடி, இறுதிவரை கட்சியின் மா-லெ அடிப்படையைப் பாதுகாக்க நெருப்பாக எரிந்த செஞ்சுடர் இன்று அணைந்து போனது.

அவரது இழப்பு எமது அமைப்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கும், இந்தியப் புரட்சிக்கும் ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும் அவரது செங்குருதியால் சிவந்த பாதையில் பயணித்து கலைப்புவாதிகளையும், அரசியலற்ற சித்தாந்தமற்ற, பண்பாடற்ற கோஷ்டிகளையும், துரோகிகளையும், சதிகாரர்களையும் முறியடிப்போம்!

கட்சியின் நக்சல்பாரிப் பாரம்பரியத்தையும், போர்த்தந்திர, செயல்தந்திரத்தை மையப்படுத்திய நமது மக்கள் திரள் வழியையும் உயர்த்திப் பிடிப்போம்!”

என்று முன்னாள் செயலரின் ஆதரவாளர்கள், தங்களை ‘மாநில அமைப்புக் கமிட்டி’ என்று திடீரென அறிவித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இவை தவிர, எமது அமைப்பிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றபட்ட தனிநபர்கள், முன்னாள் நக்சல்பாரிகள், முகநூலில் புரட்சிகர அரட்டை அடிப்பவர்கள் – எனப் பலரும் முன்னாள் செயலருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இன்னும் சிலர் இரங்கற்பா எழுதுகின்றனர்.

ஆனால், எமது அமைப்பு, முன்னாள் செயலரின் மரணத்தையொட்டி எந்த அறிக்கையும் எந்தச் செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. இது குறித்து,

“இப்படி எந்த அறிக்கையும் வெளியிடாமல் முடங்கியிருப்பது தவறு. இது கம்யூனிசப் பண்பாடல்ல, வறட்டுத்தனமானது, நிலப்பிரபுத்துவ கௌரவம் பார்க்கும் வக்கிரக் குணம் கொண்டது” என்றெல்லாம் அமைப்புக்கு வெளியிலுள்ள சிலர் எமது அமைப்பின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். தற்போதை மா.அ.க.வின் தலைமையில் உள்ளவர்கள் கற்றுக்குட்டிகள், எந்த புரட்சிகர அனுபவமும் இல்லாத வெத்துவேட்டுகள் என்று கீழ்த்தரமாக அவதூறு செய்து எள்ளி நகையாடுகின்றனர். “எத்தகைய முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து மரணமடைந்த நக்சல்பாரி தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்” என்ற கருத்து இன்று செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய மைய நீரோட்டத்தில் நீங்கள் இணையாவிட்டால், தனிமைப்பட்டு விடுவீர்கள் என்று நம்மை அச்சுறுத்துகின்றனர்.

“ஆயிரம்தான் அரசியல் – சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும், அவர் ஏறத்தாழ 45 ஆண்டுக்காலம் முழுநேர ஊழியராக இயங்கிவர். ஏறத்தாழ 40 ஆண்டுக்காலம் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிகாட்டியவர். தனது வாழ்வை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். அப்படிப்பட்டவரை இந்நேரத்தில் நினைவுகூர்ந்து அவரது குறை-நிறைகளை மதிப்பீடு செய்து படிப்பினைகளைப் பெறும் வகையில் ஒரு இரங்கல் செய்தி வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். பல்வேறு இயக்கங்களின் தலைவர்களின் மரணத்தின்போது அவர்களிடமிருந்து நேர்மறை – எதிர்மறை அனுபங்களைத் தொகுத்துப் பார்ப்பது போல இதையும் செய்ய வேண்டும்.”

“முன்னாள் செயலரின் மரணம் குறித்து முகநூலில் (Facebook) இது முக்கியமானதொரு விவாதப் பொருளாக மாறியிருக்கும் தற்போதைய சூழலில் உங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்” என்று சிலர் கூறுகின்றனர். இப்படித்தான் சீர்குலைவுவாத – நவீன கலைப்புவாத கும்பல் செய்துள்ளது என்று நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால், கட்சி அமைப்பிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அல்லது வீரவணக்கம் செலுத்துவதென்பது அனைத்துலக புரட்சிகர கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் இல்லை. எமது அமைப்பின் வரலாற்றிலும் இல்லை.

இந்திய, சர்வதேச
புரட்சிகர கம்யூனிச இயக்கத்திலிருந்து
சில உண்மைகள்

இரண்டாவது கம்யூனிச அகிலத்தில் முக்கியமான மார்க்சிஸ்டாக விளங்கிய பிளக்கானவ், 1863-இல் “தொழிலாளர் விடுதலைக் குழு” என்ற பெயரில் ரஷ்யாவில் முதலாவது மார்க்சிஸ்ட் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பானது, ரஷ்யாவில் மார்க்சியம் பரவுவதற்கு முக்கிய பங்காறியது. ரஷ்யாவில் சமூக ஜனநாயக தொழிலாளர் இயக்கத்தின் நிறுவனராக பிளக்கானவ் திகழ்ந்தார். “ரஷ்ய மார்க்சியத்தின் தந்தை” என்று போற்றப்பட்டார். அவர் ரஷ்யாவில் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியை உருவாக்குவதற்கான வேலைத் திட்டத்தை முன்வைத்தார். அன்றைய ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராட பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டு, ரஷ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தைத் திசைதிருப்பியதோடு, தொழிலாளர்கள் – விவசாயிகளின் கட்சியை உருவாக்கி மக்களை அமைப்பு ரீதியாக அணிதிரட்டும் மிக முக்கியமான கடமையை நிராகரிதத நரோட்னிக்குகளை சித்தாந்த ரீதியாக எதிர்த்துப் போராடி நரோட்னிசத்தை பிளக்கானவ் முறியடித்தார்.

பின்னாளில் மென்ஷ்விக்குகளுடன் பிளக்கானவ் சேர்ந்துகொண்டு லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளை எதிர்த்தார். சித்தாந்த ரீதியாகச் சீரழிந்துபோனார். பிளக்கானவ் மறைந்தபோது ரஷ்ய போல்ஷ்விக் கட்சி அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை.

டிராட்ஸ்கி, ரஷ்ய சோசலிசப் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர். சோவியத் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக (கமிசாராக) இருந்தவர். 1918 முதல் 1925 வரை அன்றைய சோவியத் சோசலிச அரசாங்கத்தின் ராணுவத்துறை அமைச்சராக (கமிசாராக) இருந்தார்.

பின்னாளில் அவர் அரசியல் – சித்தாந்த ரீதியாகச் சீரழிந்து, பாட்டாளி வர்க்கத் துரோகியாக மாறி, சோவியத் அரசாங்கத்தை எதிர்த்து சதி வேலைகளில் இறங்கினார். இது அம்பலப்பட்ட நிலையில், 1929-இல் அவர் அன்றைய போல்ஷ்விக் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அவர் வெளிநாடுகளில் தங்கியிருந்துகொண்டு தோழர் ஸ்டாலினையும் சோவியத் சோசலிச அரசாங்கத்தையும் எதிர்த்து வந்தார். தோழர்கள் லெனினும் ஸ்டாலினும் கட்டிக்காத்த மூன்றாவது கம்யூனிச அகிலத்துக்கு எதிராக 1938-இல் நான்காவது அகிலத்தை உருவாக்கினார். 1940-இல் மெக்சிகோ நகரில் கொல்லப்பட்டார். அவர் மறைந்தபோது, அன்று சோவியத் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசு நிலவியது. இருப்பினும், அந்த அரசும் கட்சியும் அவருக்கு எந்த அஞ்சலியையும் செலுத்தவில்லை.

சென் டூ ஷியூ என்பவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகவும் கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் செயல்பட்டவர். குயிங் முடியாட்சியை தூக்கியெறிந்த புரட்சியிலும் மே-4 இயக்கத்திலும் முக்கிய பாத்திரமாற்றியவர். ஆனால், அவரது வலது சந்தர்ப்பவாத வழிமுறையின் காரணமாக அவர் 1929-இல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், சிறிது காலம் டிராட்ஸ்கிய இயக்கத்தின் தலைவராகச் செயல்பட்டார். வலது சந்தர்ப்பவாதியாக மாறிப்போய் புரட்சிக்குத் துரோகமிழைத்தார். 1942-இல் அவர் மரணமடைந்த அவரது மறைவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தவில்லை

லியூ ஷோ சி என்பவர் சீனப் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர். சீனப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து சீன மக்கள் காங்கிரசின் தலைவராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராகவும் செயல்பட்டவர். தோழர் மாவோவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று சித்தரிக்கப்பட்டவர். “சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி?” என்ற கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சி நூலை எழுதியவர். இருப்பினும், பின்னாளில் அவர் முதலாளித்துவச் சித்தாந்தத்துக்குப் பலியாகி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கான கீழ்த்தரமான சதிகளில் இறங்கினார்.

முதலாளித்துவப் பாதையாளராகச் சீரழிந்து போன அவர் 1966-இல் தோழர் மாவோவால் தொடங்கிவைக்கப்பட்ட கலாச்சாரப் புரட்சியின்போது அம்பலப்பட்டுப் போனார். அவரை “முதலாளித்துவத் தலைமையகம்” என்று கலாச்சாரப் புரட்சி வரையறுத்தது. 1969-இல் அவர் மறைந்தபோது அவருக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தவில்லை.

எம்.என்.ராய் என்பவர், இந்தியாவில் முதன்முதலாக கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்குவதற்கான ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டவர். தாஷ்கண்ட் நகரில் 1921-இலேயே ஒரு கம்யூனிஸ்ட் குழுவைக் கட்டியமைத்து, பலரை கம்யூனிஸ்டுகளாக வளர்த்தெடுத்தவர். லெனினுடன் மூன்றாவது அகிலத்தில் இணைந்து செயல்பட்டவர்களில் எம்.என்.ராயும் முக்கியமானவர். அவர் கம்யூனிச அகிலத்தின் தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்டதோடு, சீனாவின் புரட்சிக்கு வழிகாட்டுவதற்கும் நியமிக்கப்பட்டார்.

பின்னர், அவரது தவறான சித்தாந்தம் மற்றும் தவறான வழிகாட்டுதல்களின் காரணமாக அவர் அகிலத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பின்னாளில், அவர் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தைக் கைவிட்டு, முதலாளித்துவ மனிதநேய சித்தாந்தத்துக்குப் பலியானார். இந்தியாவில் கம்யூளிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடித்தளம் போட்டவர் என்பதற்காக அவர் மரணமடைந்தபோது எந்த கம்யூனிஸ்ட் கட்சியும், ஏன் வலது, இடது போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட அஞ்சலி செலுத்தவில்லை.

நக்சல்பாரி எழுச்சியைத் தொடந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உருவாகி, பின்னர் இடது சந்தர்ப்பவாத வழிமுறையாலும் அரசின் அடக்குமுறையாலும் பிளவுபட்டு பின்னடையவுக்குள்ளான போது, நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு அங்கமாக ஆந்திராவில் அன்றைய சி.ஓ.சி. அமைப்பிலிருந்து பிரிந்து, தனியாக மக்கள் யுத்தக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, மக்கள் யுத்தக் குழுவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கொண்டப்பள்ளி சீதாராமையா. ஆனால், அவர் உருவாக்கிய மக்கள் யுத்தக் குழுவிலிருந்து 1991-இல் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஒரு தனிக்குழுவாக இயங்கினார். 1993-இல் அவர் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்.

சில ஆண்டுகளில் முதுமை காரணமாக அவர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். தனது பேத்திகளின் பராமரிப்பில் இருந்துவந்த அவர் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அன்றைய மக்கள் யுத்தக் குழுவாகிய இன்றைய மாவோயிஸ்டு கட்சி எந்த அஞ்சலியும் செலுத்தவில்லை.

வினோத் மிஸ்ரா என்பவர், நக்சல்பாரி புரட்சிகர பாரம்பரியத்தையும் இ.பொ.க. (மா-லெ)யின் அடிப்படை நிலைப்பாடுகளையும் உதறியெறிந்துவிட்டு, நவீன திரிபுவாத சி.பி.எம். கட்சியைப்  போலவே இன்னுமொரு அதிநவீன திரிபுவாத ஓட்டுக்கட்சியாக அக்குழுவைச் சீரழித்தவர். இதனாலேயே லிபரேஷன் குழு என்ற மா-லெ குழுவின் நிறுவனரான வினோத் மிஸ்ரா மரணமடைந்தபோது, எமது அமைப்பு உட்பட எந்த புரட்சிகர மா-லெ குழுவும் அஞ்சலி செலுத்தவில்லை.

தமிழகத்தில் மா.அ.க. உருவாவதற்கு முன்பு அன்றைய ஒன்றுபட்ட இ.பொ.க. (மா-லெ) கட்சியின் தமிழகத்தின் செயலராக இருந்த தோழர் அப்பு தியாகியான பிறகு, அன்றைய மத்தியக் கமிட்டி உறுப்பினரான ஏ.எம்.கே. செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் கைதான பின்னர், இடது சந்தர்ப்பவாத வழிமுறையால் ஏற்பட்ட பிரச்சினைகளாலும், அரசின் கொடிய அடக்குமுறையாலும் கட்சி செயலிழந்து பிளவுபட்டு பின்னடைவுக்குள்ளானது.

இந்நிலையில், இடது சந்தர்ப்பவாத வழிமுறைக்கு எதிராக மேற்கு பிராந்தியக் குழுவின் அறிக்கை வெளியாகி, அதைத் தொடர்ந்து புரட்சியாளர்களை ஐக்கியப்படுத்திய தற்காலிக அமைப்புக் கமிட்டி உருவாக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக மா.அ.க. என்ற எமது அமைப்பு கட்டியமைக்கப்பட்டது. 1976 டிசம்பர் 31 – 1977 ஜனவரி 01 நாட்களில் நடந்த மா.அ.க.வின் முதலாவது பிளீனத்தில் கனி என்பவர் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் கனி என்பவர், நவீன திரிபுவாத சித்தாந்தை உயர்த்திப் பிடித்து 1979-இல் அமைப்பைப் பிளவுபடுத்திய ஓடுகாலிகளுடன் சேர்ந்து வெளியேறினார். டி.என்.ஓ.சி. என்ற பெயரில் இயங்கிய இந்த கும்பலுடன் குறிப்பிட்ட காலம் செயல்பட்டுவிட்டு, பின்னர் அவர்களால் வெளியேற்றப்பட்டு சொந்த வாழ்க்கையில் மூழ்கி, அவ்வப்போது தனக்குத் தெரிந்தவர்களிடம் புரட்சிகர அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். முதுமை காரணமாக பின்னர் அவர் மரணமடைந்தார். மா.அ.க.வின் முதலாவது செயலாளரான அவரது மறைவுக்கு எமது அமைப்பு அஞ்சலி செலுத்தவில்லை. டி.என்.ஓ.சி.யும் அஞ்சலி செலுத்தவில்லை.

அதேபோல, மா.அ.க.வின் இரண்டாவது செயலாளராக இருந்த கருணா மனோகரன் என்பவர், பின்னாளில் அரசியல் சித்தாந்த ரீதியாகச் சீரழிந்து, ஓடுகாலிகளுடன் சேர்ந்து அமைப்பைப் பிளவுபடுத்தியதோடு, சிறிது காலம் அவர்களுடன் சேர்ந்து குப்பைகொட்டிவிட்டு, அதன் பிறகு மார்க்சிய – பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அவர் இரண்டாவது செயலர் என்பதற்காக அவர் மரணமடைந்தபோது, அவருக்கு எமது அமைப்பு எந்த அஞ்சலியும் செலுத்தவில்லை. டி.என்.ஓ.சி.யும் அஞ்சலி செலுத்தவில்லை.

தமிழகத்தின் ஒன்றுபட்ட மா-லெ இயக்கத்தின் இரண்டாவது செயலாளராக இருந்த, கலைப்புவாத அரசியலை உயர்த்திப்பிடித்த ஏம்.எம்.கே., கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாளில் முதுமை காரணமாக மரணமடைந்தார். அத்தருணத்தில், இப்போது மரணமடைந்துள்ள கணேசன்தான் மா.அ.க.வின் செயலாளராக இருந்தார். ஆனால், அவர் தலைமையிலான மா.அ.க.வானது ஏ.எம்.கே.வுக்கு அஞ்சலி செலுத்துவதையோ, அறிக்கை வெளியிடுவதையோ செய்யவில்லை. எமது அமைப்பில் முழுநேர ஊழியராகச் செயல்பட்டு, பின்னர் அரசியல் – சித்தாந்தக் காரணங்களை முன்வைத்து எமது அமைப்பிலிருந்து வெளியேறிச் சென்று, கடந்த 2022 ஜனவரியில் மரணமடைந்த அருணாச்சலம் என்பவருக்கும் இதேபோல அஞ்சலி செலுத்துவதையோ, அறிக்கை வெளியிடுவதையோ செய்யவில்லை.

இதனடிப்படையிலேயே எமது அமைப்பானது, முன்னாள் செயலரின் மறைவுக்கு அஞ்சலி, வீரவணக்கம் செலுத்தவதையோ, அறிக்கை வெளியிடுவதையோ செய்யவில்லை. அப்படிச் செய்வது, அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.

சித்தாந்தச் சீரழிவின் வெளிப்பாடுகள்

நேற்றுவரை முன்னாள் செயலரை அதிகாரத்துவப் பேர்வழி என்றும், வலது சந்தர்ப்பவாத – அராஜகவாத சித்தாந்தத்தைக் கொண்டவர் என்றும் சாடிவிட்டு இப்போது அவருக்கு அஞ்சலி செலுத்துவதென்பது பச்சோந்தித்தனமாகும்.

கட்சிக்குள் கோஷ்டிகளைக் கட்டிக் கொண்டு, சதிகளில் இறங்கி, அமைப்பைப் பிளவுபடுத்தி தனியொரு குழுவாகப் பிரிந்து சென்றவரை, கம்யூனிசப் புரட்சியாளராக அங்கீகரித்து, எமது அமைப்பின் தோழரைப் போலக் கருதி அஞ்சலி செலுத்துவதென்பது, சித்தாந்த சீரழிவின் வெளிப்பாடாகும்.

சித்தாந்தப் போராட்டம் என்பது ஏதோ மேல்மட்டத்தில் அறிவுபூர்வமான விவாதத்தில் மட்டுமே நடப்பதில்லை. அது, அமைப்பின் அன்றாட வாழ்வில், அன்றாட நடைமுறையில் வெளிப்படுகிறது. பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தைக் கைவிட்டு வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத சித்தாந்தத்தில் சீரழிந்த நபரை, கோஷ்டிவாதத்தில் இறங்கி, அமைப்பைப் பிளவுபடுத்திய நபரை – இவரும் ஒரு புரட்சியாளர்தான் என்று கருதுவது தவறாகும். அது சித்தாந்த பலவீனத்தின் வெளிப்பாடாகும்.

இத்தவறான சித்தாந்தத்துக்கும் ஊசலாட்டத்துக்கும் எதிராகப் போராடுவதுதான் எமது அமைப்பின் 10-வது பிளீனத்திலும், அதன் பிறகு 2022 ஏப்ரலில் நடந்த சிறப்புக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்ட, வலது சந்தர்ப்பவாதத்துக்கும் நவீன அராஜகவாதத்துக்கும் எதிரான உண்மையான சித்தாந்தப் போராட்டமாகும்.

ஆனால், எல்லா வண்ணத் திரிபுவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் முதலாளித்துவ தாராளவாதிகளும் கட்சிக் கலைப்புவாதிகளும் இத்தகைய பாட்டாளி வர்க்க விரோத சித்தாந்தங்களையும் கலாச்சாரங்களையும் பாட்டாளி வர்க்கக் கட்சிக்குள் கடத்திவர தீவிரமாக முயற்சிக்கிறார்கள். இ.பொ.க. (மா-லெ) என்ற புரட்சிகர பாரம்பரியமிக்க கட்சியை இன்னுமொரு ஓட்டுக்கட்சியாக, பிழைப்புவாத, சந்தர்ப்பவாதக் கட்சியாக மாற்றியமைக்கத் துடிக்கிறார்கள்.

அதனடிப்படையில், எந்த ஓட்டுக்கட்சித் தலைவர் மறைந்தாலும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அஞ்சலி செலுத்துவது என்ற கலாச்சாரத்தைப் பின்பற்றுவதைப் போல, நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்திலும் எந்தத் தலைவர் மறைந்தாலும் அஞ்சலி செலுத்த வேண்டுமென்கிறார்கள். அதன் ஒரு அங்கமாக கட்சியிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட கழிவுப் பொருட்களை உச்சிமுகர்ந்து, இத்தகையோரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்கிறார்கள்.

அப்படிச் செய்யவில்லை என்றால், இது வறட்டுவாதம் என்று சாடுகிறார்கள். பாசிஸ்டுகளுக்கே உரித்தான வக்கிரக் குணம் என்று நம்மீது முத்திரை குத்துகிறார்கள். மக்களிடமிருந்து தனிமைப்பட்ட குறுங்குழுவாதிகள் என்கிறார்கள். முன்னாள் செயலர் மரணமடைந்ததைப் போல, எமது அமைப்பைப் பிளவுபடுத்தி வெளியேறிய சீர்குலைவுவாத – நவீன கலைப்புவாத கும்பலில் யாராவது ஒரு தலைவர் மரணமடைந்தால், இதேபோல நாமும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் உணர்த்துகிறார்கள். இதுதான் பச்சையிலும் பச்சையான சந்தர்ப்பவாதமாகும்.

ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாத சித்தாந்தமும்
சந்தர்ப்பவாதிகள் பரப்பிவரும் “இது நம்ம ஆளு!” கலாச்சாரமும்

காங்கிரசுக் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்திய போலி கம்யூனிஸ்டுகள், 1975-இல் அவசரநிலை பாசிசத்தை ஏவி, கம்யூனிசப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்ததோடு, ஏன், எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சித் தலைவர்களையும்கூட சிறையிலிட்டு ஒடுக்கிய காங்கிரசுத் தலைவி இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் துடிதுடித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது படத்திறப்புடன் நினைவஞ்சலிக் கூட்டங்களை நடத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எனப்படும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் மறைவுக்கு அப்போதைய அரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மார்க்சிஸ்ட், காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு, ஆம் ஆத்மி முதலான கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அதன் பிறகு, முன்னாள் அரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி காலமானபோது போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட சர்வகட்சித் தலைவர்கள்  அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த தா.பாண்டியன், எத்தகையதொரு சந்தர்ப்பவாதி என்பதும், பாசிச ஜெயாவின் பாதந்தாங்கி என்பதும் ஊரறிந்த விசயமாகும். ஆனால், அவர் மறைவெய்தியவுடன், “அய்யகோ! புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் மறைந்தாரே” என்று ஒப்பாரிவைத்து அஞ்சலி செலுத்துகிறார், மு.க.ஸ்டாலின்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா – என இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

மறுபுறம், போலி கம்யூனிஸ்டுகள் எல்லா ஓட்டுக்கட்சித் தலைவர்களின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். இது இன்னும் தீவிரமடைந்து இயக்குநர் சிகரம் என்று சித்தரிக்கப்பட்ட கே. பாலச்சந்தர் மறைவுக்குக் கூட போலி கம்யூனிஸ்டுகள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கேரளத்தில் போலி கம்யூனிஸ்டு கூட்டணி முதன்முதலாக ஆட்சியைக் கைப்பற்றியபோது, கே.ஆர். கௌரி என்பவர் முதல் பெண் அமைச்சராக இருந்தார் பின்னாளில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து 1994-இல் நீக்கப்பட்டார். அதன் பிறகு, “ஜனாதிபத்ய சம்ரக்ஷண சமிதி” என்னும் கட்சியை தொடங்கிய கௌரி, அடுத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். காங்கிரஸ் முதல்வர்களான ஏ.கே.அந்தோனி, உம்மன் சாண்டி இருவரின் அமைச்சரவைகளிலும் கௌரியம்மா பதவி வகித்தார்.

அவர் காலமானபோது, அப்போதைய கேரள ஆளுநர் அரிப் முகம்மது கான் உள்ளிட்டு, கேரள முதல்வர் பினாரயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா என அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். “தோழர் கௌரியம்மா, தைரியமான போராளி, சுரண்டலுக்கு எதிராக வாழ்வை அர்ப்பணித்தவர், கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தூணாக இருந்தவர்” என்றெல்லாம் புகழாரம் சூட்டி செவ்வணக்கம் செலுத்தி இரங்கல் செய்தியை வெளியிட்டார், மார்க்சிஸ்டு முதல்வரான பினாரயி விஜயன்.

‘- இதுதான் ஓட்டுக்கட்சிக் கலாச்சாரம்.

ஒரு ஒட்டுக்கட்சித் தலைவர் மரணமடைந்தால், அரசியல் – சித்தாந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற மரபை இவர்கள் நிலைநாட்டத் துடிக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட கலாச்சார மரபைச் சாடும் கம்யூனிசப் புரட்சியாளர்களை வறட்டுவாதிகள், வக்கிர குணம் கொண்டவர்கள், நாட்டு மக்களின் இயல்பான மனநிலையைப் புரிந்துகொள்ளாதவர்கள், மக்களிடமிருந்து தனிமைப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

இத்தகைய முறையில் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் மரணமடையும்போது ஆளும் வர்க்கங்களும் ஆளும் வர்க்க கட்சிகளும் அவர்களை ஏற்றிப் போற்றி துதிபாடி அஞ்சலி செலுத்துகின்றன. ஏனெனில், இத்தகைய போலி கம்யூனிஸ்டுகள் நிலவுகின்ற அரசியல் கட்டமைப்பைத் தாக்கித் தகர்க்கும் புரட்சிகரக் கடமையைக் கைவிட்டு, நிலவுகின்ற அரசியல் கட்டமைப்பைக் கட்டிக்காக்கும் வகையில் நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிமுறையை ஏற்றிப் போற்றி, தேர்தல்களில் பங்கேற்கின்றனர். ஆளும் வர்க்கங்களின் சுரண்டலையும் கொள்ளையையும் மூடிமறைத்து நாடகமாடுவதற்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை ஏற்றிப்போற்றி, அதனைக் கட்டிக் காப்பதில் உறுதியாக நிற்கின்றனர்.

போலி கம்யூனிஸ்டுகளுடன் சட்டமன்ற – நாடாளுமன்ற நாய்ச்சண்டையில் ஈடுபடும் முதலாளித்துவக் கட்சிகள், போலி கம்யூனிசத் தலைவர்களில் ஒருவர் மரணமடைந்தால் அவர்களைப் புனிதர்களாகச் சித்தரிக்கின்றன. “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்று தமது பிழைப்புவாதக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்கின்றன. இப்படித்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் மரணமடைந்தவுடன், அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதை ஒரு மரபாக, ஓட்டுக் கட்சி கலாச்சாரமாக மாற்றியுள்ளன.

நக்சல்பாரி புரட்சிகர அமைப்பிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் ஓட்டுக் கட்சிகளின் இத்தகைய பிழைப்புவாத சித்தாந்தத்தைத் தனியாகவோ, குழுவாகவோ நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்திற்குள் கடத்திவரத் துடிக்கிறார்கள்.

ஆனால், நக்சல்பாரி கம்யூனிசப் புரட்சியாளர்கள் இயற்கையாகவோ அல்லது சுட்டுக் கொல்லப்பட்டோ மரணமடைந்தால் எந்த ஓட்டுக் கட்சித் தலைவர்களும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லையே அது, ஏன்? ஏனென்றால், அவர்கள் ஆளும் வர்க்கங்களின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் கலாச்சாரத்தை எதிர்த்து நாட்டையும் மக்களையும் விடுவிக்கப் போராடுபவர்கள். பாட்டாளி வர்க்க அரசியலையும் சித்தாந்தத்தையும் ஏற்று நடைமுறையில் செயல்படுத்தி வருபவர்கள். எனவேதான், ஆளும் வர்க்கங்களும் அவற்றுக்குச் சேவை செய்யும் ஓட்டுக் கட்சிகளும் நக்சல்பாரி புரட்சியாளர்களை எதிரிகளாக, தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி இழிவுபடுத்துகின்றன.

எண்ணற்ற நக்சல்பாரி இயக்கத் தலைவர்கள் மரணமடைந்தபோது எந்த போலி கம்யூனிஸ்ட் கட்சியும் அஞ்சலி செலுத்தவில்லையே, அது ஏன்? ஏனெனில் இப்போலி கம்யூனிஸ்டுகள், பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தைக் கைவிட்டு திரிபுவாத சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள்.

ஆனால், கம்யூனிசப் புரட்சியாளர்கள் தற்போது நிலவுகின்ற ஆளும் வர்க்க அரசியல் – பொருளாதார – சமூக – கலாச்சாரக் கட்டமைப்பைத் தூக்கியெறிந்து மக்களுக்கான புதியதொரு அரசியல் கட்டமைப்பை நிறுவுவதற்கான புரட்சியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

நாங்கள் ஓட்டுக் கட்சிகளின் முதலாளித்துவ தாராளவாத சித்தாந்தத்தையும், அவற்றின் பிழைப்புவாத – சந்தர்ப்பவாத சித்தாந்தங்களுக்கு எதிராக நின்று, பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். எனவே, எமக்கு எந்தப் பிரமையும் இல்லை.

“சந்தர்ப்பவாதி எந்தவொரு சூத்திரத்தையும் ஆதரிக்கவும் தயாராக இருப்பான். அதைக் கைவிடவும் தயாராக இருப்பான். ஏனென்றால், சந்தர்ப்பவாதம் என்றால், திட்டவட்டமான கோட்பாடுகள் இல்லாமை என்பதே பொருள்” (லெனின், என்ன செய்ய வேண்டும், பக்கம் 284) என்று தோழர் லெனின் போதிக்கும் உண்மையை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாட்டாளி வர்க்க விரோத சித்தாந்தத்துக்குப் பலியாகிவிட்டவர்களும், அல்லது ஊசலாட்டம் கொண்டவர்களும் தங்களை சித்தாந்த ரீதியாக மறுவார்ப்பு செய்து கொள்வது அவசியமாகும். தோழர் சௌ என் லாய் எழுதியுள்ள, “கட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கமற்ற சித்தாந்தத்தை உறுதியாக ஒழித்துக் கட்டுவது பற்றி” என்ற கட்டுரையைப் படித்து விவாதித்து, சுயபரிசீலனையின் மூலம் தமது குறைகளைக் களைந்து கொள்வது அவசியமாகும்.

பாட்டாளி வர்க்க பண்பாட்டு நெறிமுறை

நாம் பணியாற்றும் இடத்தில் சக தொழிலாளி ஒருவர் மரணமடைந்தால், அவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருடன் துயரத்தைப் பகிர்ந்துகொண்டு ஆறுதல் கூறுகிறோம்.

சமுதாய மாற்றத்துக்கான போராட்டத்தில் உள்ளவர்கள், பகுத்தறிவாளர்கள், பாசிச எதிர்ப்புப் போராளிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு – நாட்டுப்பற்றாளர்கள், சமரசமற்ற வர்க்கப் போராட்ட வீரர்கள், சர்வதேசிய உணர்வுடன் ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் முதலானோருக்கு பாட்டாளி வர்க்கக் கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

அதேசமயம் அவர்கள் ஆளும் வர்க்க அல்லது சீர்திருத்த – சமரசவாத – போலி கம்யூனிச சித்தாந்தங்களைக் கொண்டவர்களாக இருந்தால், அஞ்சலி செலுத்தும்போது அவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவும் நாம் தயங்குவதில்லை. அந்தவகையில் அவர்களைப் பற்றிய எமது மதிப்பீடுகளை வெளியிடுகிறோம்.

கம்யூனிச இயக்கத்தில் திரிபுவாத – நவீன திரிபுவாத சித்தாந்தங்களைக் கொண்டவர் மரணமடையும்போது – அவர்கள் எத்தகைய முன்னுதாரணமிக்க தலைவராக இருந்தபோதிலும் – நாம் அஞ்சலி செலுத்துவதில்லை. இரங்கல் தெரிவிப்பதுமில்லை. மாறாக, எதிர்மறை அனுபவத்தை நாங்கள் எமது அணிகளுக்கும் அரசியல் உணர்வுள்ள உழைக்கும் மக்களுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறோம்.

இது, எமது அமைப்பில் மட்டுமின்றி, அனைத்து நாடுகளின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகளும் இயக்கங்களும் பின்பற்றும் நடைமுறை. அனைத்துலகப் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தில் இதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன.

அதேசமயம், கம்யூனிஸ்டு அல்லாத முற்போக்கு சிந்தனையாளர்கள், நாட்டுப்பற்றாளர்கள், சர்வதேசியவாதிகள் ஆகியோருக்கு கம்யூனிஸ்டு கட்சி அஞ்சலி செலுத்தி, அவர்களது தியாகத்தைப் போற்றுகிறது. சான்றாக, சீனப் புரட்சியின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடிக்கொண்டிருந்த சூழலில், கனடாவைச் சேர்ந்த மருத்துவர் நார்மன் பெத்தூன், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் கோட்னிஸ் ஆகியோர் காயமடைந்த செம்படையினருக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே மரணமடைந்தனர். அவர்களின் மறைவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி வீரவணக்கம் செலுத்தி அவர்களின் உயரிய சர்வதேசிய உணர்வைப் போற்றியது. புரட்சிக்குப் பின்னர் உருவான சீன மக்கள் ஜனநாயக குடியரசானது, இச்சர்வதேசியவாதிகளின் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டு, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொண்ட நினைவரங்கத்தையும் கட்டியமைத்துள்ளது.

இந்தியாவில் அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தின் கொடூரங்களை வெளிக்கொணர்ந்தவரும் நக்சல்பாரி தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையிடப்பட்டவருமான பிரிட்டிஷ் பள்ளி ஆசிரியையுமான மேரி டெய்லரின் சர்வதேசிய உணர்வை மதித்து, அவர் இந்தியச் சிறையிலிருந்து விடுதலையானபோது அவருக்கு எமது அமைப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தது. (பார்க்க: புரட்சிப்புயல், ஆண்டு:3, இதழ் எண்:14, மே-ஜூன் 1977)

தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவின் போது, எமது அமைப்பின் சார்பில் “தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதி” என்று தலைப்பிட்டு, எமது அமைப்பின் உட்கட்சி இதழான “புரட்சிப்புயல்” இதழில் அவரை மதிப்பீடு செய்து கட்டுரை வெளியிட்டோம். (பார்க்க: புரட்சிப்புயல், ஆண்டு:4, இதழ் எண்:19, அக்-நவம் 1978)

இத்தகைய அணுகுமுறையுடன் நாம் அனைவரையும் மதிப்பீடு செய்வதுதான் சரியானதாகும்.

இந்த வழிமுறைக்கு மாறாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தபொழுது, அவரைப் பற்றி மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக, எமது மக்கள் திரள் அமைப்பின் சார்பாக அஞ்சலி செலுத்தியது என்பது எமது அமைப்பில் நிலவிய அரசியல் – சித்தாந்த திசைவிலகலின் (வலது திசைவிலகலின்) வெளிப்பாடாகும்.

நக்சல்பாரி இயக்கத்தின் பாரம்பரியம்

நக்சல்பாரி இயக்கத்தில் எத்தனை ஆயிரம் தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எத்தகைய அஞ்சலியையும் மரியாதையையும் எதிர்பார்த்து புரட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. சில தோழர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல் எரிக்கப்பட்டு சாம்பல் மட்டுமே அவர்களது குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. இரகசிய கட்சி என்பதால், எமது தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தமுடியாத வேதனைகளும் எமக்கு ஏற்பட்டுள்ளன.

எமது அமைப்பில் 1980-களில் முழுநேரப் புரட்சியாளராகச் செயல்பட்ட தோழர் பச்சையப்பன், 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானார். தலைமறைவுக் கட்சி என்பதாலும், அரசின் அடக்குமுறையும் கண்காணிப்பும் நிலவியதாலும் அவரது மறைவுக்கு எம்மால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தக்கூட முடியவில்லை.

ஆனால், அத்தோழர் எம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்குப் பின்னர் எமது கட்சி அமைப்புகள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, அவரது நினைவுகளைப் பகிர்ந்து தோழர்கள் எழுதிய குறிப்புகளையும் நினைவஞ்சலிக் கவிதைகளையும் எமது உட்கட்சி இதழான “புரட்சிப்புயல்” இதழில் (ஆண்டு:8, இதழ்:12 மற்றும் ஆண்டு:9, இதழ் எண்:11-12) வெளியிட்டோம். தோழர் பச்சையப்பனுடைய வர்க்க உணர்வையும் போர்க்குணத்தையும் நம்முடையதாக்கிக் கொள்ள நாங்கள் உறுதியேற்கிறோம்.

பாட்டாளி வர்க்கத்தின் சிறப்பியல்பு என்பது கூட்டுத்துவ செயல்பாடாகும். ஒரு அரசியல் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்தை நடத்தும்போது, அதை விளக்கி துண்டுப் பிரசுரம் எழுதிய தோழர் தொடங்கி, அதை உழைக்கும் மக்களிடன் விநியோகித்து பிரச்சாரம் செய்தவர், சுவரொட்டி – சுவரெழுத்துப் பணிகளில் ஈடுபட்டவர், நன்கொடை திரட்டியவர், போராட்டத்துக்கு அணிதிரட்டியவர், தலைமை தாங்கியவர் – என எல்லா தோழர்களும் அவரவர்க்குரிய பங்கைச் செலுத்துகின்றனர். தோழர்களின் ஆற்றலில் குறைபாடு இருக்கலாம், செயல்பாட்டின் அளவில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், கூட்டுத்துவ உழைப்புதான் இவையனைத்தையும் சாதிக்கிறது.

தொழிலாளிகள் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலைகளைப் பாருங்கள். இந்த சோப்பை, இந்த வாகனத்தை, இந்தக் கணினியை நான்தான் படைத்தேன், இது என்னுடைய சாதனை என்று அவர்கள் கூறுவதில்லை. அத்தகைய எண்ணமும் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இதை நாம் புரட்சிகரப் போராட்டங்களில் பார்க்க முடியும். புரட்சிக்குப் பிந்தைய சோசலிசக் கட்டுமானத்திலும் நாம் பார்க்க முடியும்.

கட்சி அமைப்பு என்ற இந்த கூட்டுத்துவ இயக்கத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு தோழருக்கும் உள்ள சிறப்பியல்பையும் பங்களிப்பையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அவற்றை நாம் ஒவ்வொருவரும் நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும்.

எல்லா மனிதர்களிடமும் நல்ல பண்புகளும் தவறான பண்புகளும் இருக்கின்றன. ஒருவரிடமுள்ள நல்ல பண்புகளை உட்செறித்துக் கொண்டுதான் மனித சமுதாயம் தனது அறவியலை மேம்படுத்திக் கொண்டு முன்னேறுகிறது. இது இயல்பானது. இதன்படி, நாம் எந்தத் தலைவராக இருந்தாலும், கடைநிலை மனிதராக இருந்தாலும், அவர்களிடமுள்ள உயர்ந்த பண்புகளை உட்செறித்துக் கொள்கிறோம்.

அந்த வகையில், அனைத்து நக்சல்பாரி இயக்கத்தின் தலைவர்கள், போராளிகள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் – என அனைவரிடமும் உள்ள சிறந்த கம்யூனிசப் பண்புகளை நாம் உட்செறித்துக் கொள்கிறோம்.

இறந்தவர்களையெல்லாம் எவ்வித விமர்சனமுமின்றி தெய்வமாக்கும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தையும், ஒருவர் இறந்துவிட்டால் அவரிடம் குறைகள் இருந்தாலும் அவரது நற்பண்புகளைக் கூறி போற்ற வேண்டும் என்கிற முதலாளித்துவ தாராளவாதக் கலாச்சாரத்தையும் நாங்கள் புறக்கணிக்கிறோம்.

பாட்டாளி வர்க்க விரோத சித்தாந்தம் – கலாச்சாரங்களுக்கு நாங்கள் உடந்தையாக இருக்கவோ, பலியாகவோ மறுப்பதால்தான் எம்மை வறட்டுவாதிகள், குறுங்குழுவாதிகள் என்று பலரும் அவதூறு செய்கின்றனர். நாங்கள் அக்கறை கொண்டிருப்பது உண்மையான பாட்டாளி வர்க்கப் போல்ஷ்விக்மயமான கட்சியும் நடைமுறையும் தானேயன்றி, சந்தர்ப்பவாதச் சாகசங்கள் அல்ல. ஆகவே, இத்தகைய அதிமேதாவிகளின், ஞானபண்டிதர்களின் அவதூறுகளைக் கண்டு அஞ்சி ஒருபோதும் பின்வாங்கிவிட மாட்டோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்
கம்யூனிஸ்டுகள் தலைமையிலான
புரட்சிகர வர்க்கங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடும்

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புதிய ஜனநாயக அரசு அல்லது சோசலிச அரசு அமையும்போது, அந்த அரசாங்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளை அச்சு பிறழாமல் அப்படியே பின்பற்றிச் செயல்படுமா? நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தத்தைக் கொண்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான புரட்சிகர வர்க்கங்களின் அரசாங்கமானது அத்தகையது அல்ல. ஏனெனில், அந்த அரசாங்கமானது, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகர வர்க்கங்களின் கூட்டணி அரசாகும். எனவே, பாட்டாளி வர்க்கம் மட்டுமின்றி, விவசாயிகள், குட்டி முதலாளிகள் முதலான வர்க்கங்களும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக இருக்கும். அது ஒரு மக்கள்திரள் அமைப்பைப் போன்றது.

மக்கள்திரள் அரங்குகளுக்கு கட்சி தனது திசைவழியையும் முடிவையும் முன்வைக்குமே அன்றி, அதை நூற்றுக்கு நூறு அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட முடியாது. அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு எதிரானதாகும். இதனால்தான் கட்சி ஒருவரை திரிபுவாதி, சந்தர்ப்பவாதி என்று அரசியல் – சித்தாந்த ரீதியாக முடிவு செய்திருந்தாலும், அத்தகைய நபர் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும், நாட்டின் விடுதலைக்கும் மக்களின் நலனுக்கும் ஆற்றியுள்ள கடந்தகாலச் சேவைகளைக் கணக்கில் கொண்டு, அத்தகையோருக்கு இத்தகைய புரட்சிகர மக்கள் அரசாங்கங்கள், அல்லது சோவியத் அரசாங்கங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. அத்தகையதோரின் படைப்புகளை வெளியிடுகின்றன. சிலருக்கு சிலை வைத்து மரியாதை செலுத்துகின்றன. அத்தகையோரின் பெயரால் அரசுத்துறை நிறுவனங்கள் அல்லது கல்விக் கழகங்களுக்குப் பெயரிடுகின்றன. புரட்சிகர வர்க்கங்களின் உணர்வை பாட்டாளி வர்க்கக் கட்சியும் மதித்து அங்கீகரிக்கிறது.

இப்படித்தான் ரஷ்யாவில் முதன்முதலாக மார்க்சியத்தை அறிமுகப்படுத்தியவர், நரோட்னிசத்தை எதிர்த்துப் போராடிவர், சிறந்த மார்க்சிய சித்தாந்தவாதி என்ற முறையில் பிளக்கானேவ் பெயரை சோவியத் பொருளாதாரக் கல்விக் கழகத்துக்கும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அரசு சுரங்கத்துறை கல்விக் கழகத்துக்கும் சூட்டி அன்றைய சோவியத் அரசாங்கம் கௌரவித்தது.

இதேபோலத்தான் இத்தகைய மக்கள் அரசாங்கங்கள், நட்புறவு கொண்டுள்ள நாட்டின் தலைவர்கள் மறைந்தால் அஞ்சலி செலுத்துகின்றன. நட்புறவு இல்லாத பகையான ஏகாதிபத்திய நாடுகளின், பிற்போக்கும் அடக்குமுறையும் கொண்ட நாடுகளின் தலைவர்களுக்கு புரட்சிகர மக்கள் அரசாங்கங்கள் அஞ்சலி செலுத்துவதோ, அல்லது இரங்கல் செய்தி வெளியிடுவதோ கிடையாது. இவற்றை அன்றைய சோவியத் சோசலிச ரஷ்ய அரசாங்கம் மற்றும் சீன மக்கள் ஜனநாயகக் குடியரசின் நடவடிக்கைகளிலிருந்து நாம் அறிய முடியும்.

✼ ★ ✼