ள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் கவுண்டர் சாதி வெறியர்களுக்கு சொந்தமானவையாக உள்ளன. கல்லக்குறிச்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சக்தி கல்வி தனியார்மயத்தின் அடையாளமாக மட்டும் இல்லை. அப்பகுதியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறி ஆதிக்கத்தின் ஒரு அங்கமாகவும் இருக்கிறது.

அப்பள்ளியின் தாளாளர் சக்திவேல், கவுண்டர் சாதிவெறி அமைப்பான தீரன் சின்னமலைப் பேரவையின் நிர்வாகி. எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார். மேலும் அப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகள், ஷாகாக்கள் ஆகியவை நடைபெறுகின்றன.

அவ்வூரில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கடை வைத்து நடத்துவதற்கு கூட கவுண்டர் சாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பீஃப் (மாட்டுக்கறி) சில்லி கடை வைக்க முயன்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், கவுண்டர் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டார். கனியாமூர் என்பது கவுண்டர் சாதி வெறியர்களின் கோட்டையாக விளங்குவதை இதன்மூலம் அறியமுடியும்.

மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மட்டுமல்ல, இதுவரை ஏழு மாணவர்கள் சக்தி மெட்ரிக் பள்ளியில் இறந்து போனதாக சொல்கிறார்கள். இருப்பினும் நான்கு மாணவர்கள் இறந்தது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கிறது. பள்ளிப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து ஒரு மாணவி இறந்துபோனது; குளியலறையில் இரு மாணவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் கொல்லப்பட்டதால் இரண்டு சம்பவங்கள் விபத்தாகும், எனவே இதைக் கடந்து போகலாம். ஆனால் 12-ஆம் வகுப்பு மாணவன் பிரகாஷின் மரணத்தை அவ்வாறு கருத முடியாது.

நயினார் பாளையம், ஈரியூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் பிரகாஷ் 2007-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து போகிறார். இவ்வழக்கு 15 ஆண்டுகள் ஆன பின்னரும் தற்போதுவரை விசாரணைக்கு வரவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கும் அரசு அதிகார வர்க்கத்திற்கும் உண்டான உறவை இதிலிருந்து அம்பலமாகிறது.

அம்மாணவன் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லாத நிலையில், ‘பள்ளியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தள்ளி கிணற்றில் இறந்து கிடந்தான்’ என்பது அம்மாணவனின் பெற்றோர் மட்டுமல்ல; வேறு யாரால்தான் நம்ப முடியும்!

பிரகாஷின் மர்ம மரணத்திற்கு நீதிகேட்டு நூறு பேர் வரை அப்பள்ளி முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் விளைவாகப் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தை அறைக்கு வெளியே கவுண்டர் சாதி வெறியர்கள் நூறு பேர் கையில் கம்புகளோடு இருந்து மிரட்டியுள்ளனர். இறுதியில் பெற்றோருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விசயம் முடித்து வைக்கப்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் ஆதரவு, ஆதிக்க சாதிவெறியர்களின் பக்கபலம், ஆர்.எஸ்.எஸ் பின்னணி – இத்தனையும் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கொட்டத்தை மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது யார்தான் எதிர்பார்த்திருப்பார்!

000

தன் மகள் எப்படி இறந்தாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீமதியின் தாயார் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது மட்டுமல்ல; போலீசு, நிர்வாகம் என அனைவரும் சக்தி மெட்ரிக் பள்ளியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

கணவனின் மரணத்துக்கு நீதிகேட்டு மதுரையை எரித்தார் கண்ணகி என்பார்கள். ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்ட அந்தத்தாயின் கண்ணீர் தமிழ்நாட்டு மாணவர்-இளைஞர்களின் உள்ளத்தைச் சுட்டது. தன் மகளுக்கு நீதிகேட்டு அம்மாணவியின் தாய் தொடங்கிய மாபெரும் போராட்டம் சாதி கடந்து மக்கள்திரள் போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போர்குணமிக்கப் போராட்டத்தின் கதாநாயகர்கள் தமிழக மாணவர்-இளைஞர்கள்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தன்னெழுச்சியான மாணவர்-இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்ட மாடலை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டதைப் போலவே, ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் (Justice for srimathi) என்ற பெயரில் பல்வேறு வாட்சப் குழுக்கள் அமைத்து கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளிக்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஸ்ரீமதிக்கு நீதி கோரி பல இ-தட்டிகள், சிறிய காணொளிகள், பதிவுகள் ஆகியவற்றை தயாரித்துப் பரப்பியுள்ளனர். முழக்க அட்டைகள், கருப்புச் சட்டை என போராட்ட நாளன்று தயாரிப்போடு சென்றுள்ளனர். இதில் பங்குபெற்ற சுற்றுவட்டாரத்து இளைஞர்களுள் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும் அடக்கம்.

ஜூலை 17-ம் தேதி ஸ்ரீமதிக்கு நீதிகேட்டுத் தொடங்கிய ஆர்ப்பாட்டம் நூறுபேர் அளவில் இருக்கும்போது, ​​சாலை மறியலாக இருந்தது. நூறு பேர் என்பது மாணவர்-இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்ததும் சுமார் ஐந்தாயிரம் பேராக அதிகரித்தது. இக்காரணத்தாலேயே பண்புநிலையில் மாறுபட்ட போராட்டம் வீரியமான வடிவத்தை எட்டுகிறது. 4 நாட்களாக மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு போராடுவோரையே தொடர்ந்து குற்றவாளியாக்குவதையும், பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் நடவடிக்கைகளும், பள்ளி நிர்வாகத்தின் ஆர்.எஸ்.எஸ் பின்புலமும் மக்களின் மனதில் புயலாக மாறி பள்ளியைச் சூறையாடியது, தீக்கிரையாக்கியது.

கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்ட உயிர்களுக்குப் பழிதீர்க்கும் நடவடிக்கையாக இப்போராட்டம் அமைந்தது. இதுவரை தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நிறுவனப் படுகொலைகளுக்கு எதிராகவும் மேலும் ஒரு போராட்டத்தை தமிழகம் கண்டதில்லை. மேலும் சென்னை போன்ற பெருநகரம் அல்லாத, ஒப்பீட்டளவில் பின் தங்கிய பகுதி, சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி சின்ன சேலம் வட்டாரம். அப்பகுதியில் ஒரு அநீதிக்கு எதிராக இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரள்வது சாதாரண விசயமல்ல. இது இப்போராட்டத்தின் கூடுதல் சிறப்பு.

நடுநிலை என்று பேசுபவர்களும் நம்மில் பலருமே எந்த தர்க்க அடிப்படையும் இல்லாமல் கள்ளக்குறிச்சி வன்முறை போராட்டம், ஆர்.எஸ்.எஸ் தூண்டிவிட்ட போராட்டம் அல்லது சமூக விரோதிகள் உள்ளே புகுந்துவிட்டார்கள் என்று பேசினார்கள். அநீதிக்கு எதிராக தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டம் சூழலைப் பொறுத்து வன்முறை வடிவத்தையும் எடுக்கும் எந்த அடிப்படையான விதியைக் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு பேசுவோர் திமுக ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்கள் கிளப்பிடும் விவாதத்திற்குப் பலியாகிறார்கள்; இன்னொருபக்கம் அவர்கள் மக்கள் மீதான நம்பிக்கையின்மையை அப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டு பாணி போராட்ட மாடல் பரவிவருவதை நம்மைவிட ஆளும் வர்க்கமும் அரசும் நன்கு அறிந்து வைத்துள்ளன. கள்ளக்குறிச்சி போராட்டம் அவர்களை அச்சுறுத்தியுள்ளது. இப்போராட்டத்திற்கு பின், மிகப்பெரிய போலீஸ் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் அநீதிக்கு எதிராக ஆவேசம் கொண்டு, தன்னெழுச்சியாகப் போராடும் தமிழக மாணவர்-இளைஞர்களுக்கு அரசு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது.

பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் 12 மணியுடன் கலைந்துசென்ற பிறகு, அச்சுற்றுவட்டாரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள், மாணவர்கள், மக்களைப் பிடித்து கலவரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கைது செய்தனர். இன்னொருபக்கம் தங்கள் சாதி ஆதிக்கத்தின் குறியீடு சிதைவுற்றதைத் தாங்கிக் கொள்ள முடியாத கவுண்டர் சாதிவெறியர்கள் அப்பகுதியில் போலீசுக்கு இணையாக வேட்டை நடத்தி தலித், வன்னியர் என பிற சாதி இளைஞர்களைப் பிடித்து தாக்கியுள்ளனர்; குறிப்பாக தலித் இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்; போலீசுக்கு ஆள்பிடித்துக் கொடுத்துள்ளனர்.

ஸ்ரீமதிக்கு நீதிகேட்டு வாட்சப் குழுவை உருவாக்கிய மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று கைதுசெய்து அச்சமூட்டியது போலீசு. கைதுசெய்த மாணவர் இளைஞர்களின் கைகால்களை உடைத்து ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்கள்’ என்று வெளிப்படையாக விளம்பரம் செய்தார்.

000

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டோ, கொலை செய்யப்பட்டோ மர்மமான முறையில் இறந்து போனார்கள் என்று கணக்கெடுக்க முடியாது. ஏனெனில் அரசும் அதிகார வர்க்கமும் அந்தக் கொலைகளையெல்லாம் தற்கொலைகளாக மட்டுமே மாற்றிவிட்டன. இதன்மூலம் கல்வி தனியார்மயத்துக்கும் கொள்ளைக்கார கிரிமினல் கல்வித் தந்தைகளுக்கும் படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தையும் வர்க்கம் அந்த திசையை நோக்கித்தான் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஒட்டு மொத்த அரசின் அரசியல் கொள்கையே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்றபின் அதைக் காப்பாற்றவும், கார்ப்பரேட்டுகள் அக்கொள்கைகளால் வளம் கொழிக்கவும் மட்டுமே இந்த அரசால் முடியும். இப்படிப்பட்ட அரசு எப்படி கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்ற கோணத்தில் இருந்து சிந்திக்கும் போதுதான் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும், ஆதரிக்கவும் முடியும்.

லட்சக்கணக்கானோர் கடற்கரையில் கூடி மோடி அரசை பணியவைக்க முடியும் என்பது ஜல்லிக்கட்டு மாடல்; லட்சம் மக்கள் கூடினால் கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்தை மூட முடியும் என்பது தூத்துக்குடி மாடல்; இப்படிப்பட்ட போராட்ட வழிமுறைகள் பரவிவிடக் கூடாது என்பதற்காகவே சென்னையில் மீனவர் குடிசைகளைத் தீவைத்தது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதற்குப் பின்னாளில் அடக்குமுறைகள். இவை போலீசும் அரசும் இணைந்து மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கிய மாடல்கள்.

பல்லாயிரக்கணக்கான தன்னெழுச்சிப் போராட்ட மாடல்களிலிருந்து பல்வேறு அனுபவங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்ற மக்கள் திரளின் ஒரு பகுதி நடத்திய போராட்ட வடிவமே கள்ளக்குறிச்சி மாடல். இந்த கள்ளக்குறிச்சி போராட்ட மாடலுக்கு எதிராக ராஜசேகர் தலைமையிலான சாதிவெறி கும்பலுடன் இணைந்து போலீசு நடத்திய வெறியாட்டம் இன்னொரு ஒடுக்குமுறை மாடல்.

இந்த இரண்டில் ஒன்றின் பக்கம்தான் நாம் நிற்க முடியும். ஏனெனில் இனி கள்ளக்குறிச்சி மாடலோ அல்லது அதிலிருந்து மேம்பட்ட மாடலோதான் மக்களின் போராட்ட வடிவமாக இருக்கும். அன்றாடம் மக்களின் வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ​​அநீதிக்கு எதிராக எரிமலையாக வெடிப்பார்கள். இலங்கையில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்ட மாடலை ஆதரிப்போர் கள்ளக்குறிச்சி மாடலை ஆதரிப்பதில்லை. ஏனெனில் சாதியும் வர்க்கமும்தான் அவர்களை யோசிக்க வைக்கிறது. இந்த நடுநிலை நாயகர்களின் கூற்றைப் புறந்தள்ள வேண்டும்.

அநீதிக்கு எதிரான உணர்வை அச்சுறுத்தலால் ஒடுக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்வோம், கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை எந்த நிபந்தனையுமின்றி ஆதரிப்போம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க