வடசென்னையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான துறைமுகம் 337 ஏக்கர் பரப்பளவில் காட்டுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்துறைமுகம் அப்பகுதியில் அமைக்கப்பட்டதிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக அங்குள்ள மீனவ கிராம மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு துறைமுகத்தின் சரக்குகளைக் கையாளும் திறனை ஆண்டுக்கு 24.65 மில்லியன் டன் என்ற தற்போதைய அளவிலிருந்து 320 மில்லியன் டன்களாக (MTPA – Million Tonnes Per Annum) அதிகரிக்க அதானி குழுமம் திட்டமிட்டது. அதன்பொருட்டு துறைமுகத்தின் பரப்பளவை 6,110 ஏக்கருக்கு விரிவுபடுத்தும் வகையில் ரூ.53,031 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி விண்ணப்பித்தது.
அவ்விண்ணப்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு (Environmental Impact Assessment) மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் (Environmental Management Plan) ஆகியவற்றைத் தயாரித்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி நான்காண்டுகளுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் அதானி குழுமத்திற்கு அவகாசம் வழங்கியது.
இதனடிப்படையில் அதானி குழுமம், இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி ஒன்றிய அரசிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு சமர்ப்பிக்க முடியாமற்போனால் மீண்டும் அடிப்படை ஆய்விலிருந்து தொடங்க வேண்டும்.
படிக்க: காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !
இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தே கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி முடிக்க முயற்சித்து வருகிறது அதானி குழுமம். 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அ.தி.மு.க. அரசு அனுமதி வழங்கியது. ஆனால், அதற்கு மீனவ கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மக்கள் மத்தியில் இருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அப்போது கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று தேர்தல் வாக்குறுதியளித்தது தி.மு.க. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் விரிவாக்கத் திட்டத்திற்கான முயற்சிகளைத் தடுக்காமல் இருப்பது மட்டுமின்றி, சென்ற மாதம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதியும் வழங்கி அதானிக்கு கார்ப்பரேட் சேவகம் செய்கிறது.
மக்களின் எதிர்ப்பு
கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதற்கு மீனவ கிராம மக்கள், பூவுலகின் நண்பர்கள், பழவேற்காடு பாதுகாப்பு இயக்கம், சென்னை க்ளைமேட் ஆக்சன் குரூப், பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து அப்பகுதியில் பேரணி நடத்தினர்.
இதற்கிடையே மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 10 ஆம் அன்று நடக்கவிருந்த கூட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இருப்பினும், அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய சுற்றுச்சூழல் பேரழிவுக்கு உள்ளாகும் சென்னை
அதானியின் துறைமுகம் அமைந்துள்ள காட்டுப்பள்ளி பகுதியானது வங்காள விரிகுடா கரையில் உள்ள சிறிய மணல் தீவாகும். இத்தீவை சுற்றிலும், பல லட்சக்கணக்கான மக்கள் கடலை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தீவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும், மேற்கே கொற்றலை (கொசஸ்தலை) ஆறும், தெற்கே சென்னையின் உபரிநீர் கடலில் கலப்பதற்கு முக்கிய ஆதாரமாக உள்ள கொற்றலை ஆற்றின் முகத்துவாரமும், வடக்கே இந்தியாவின் இரண்டாவது உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரியும் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கு மேல் கடலரிப்பு ஏற்படும் பகுதிகள் அபாய பகுதிகளாக (ஹாட் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டு, துறைமுகங்கள் போன்ற திட்டங்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளக் கூடாது என்பது சுற்றுச்சூழல் விதிமுறையாகும். ஆனால், காட்டுப்பள்ளியில் துறைமுகங்கள் கட்டப்பட்டதன் காரணமாக கடலில் ஆண்டுக்கு 8.6 மீட்டருக்கு கடலரிப்பு ஏற்படுகிறது என்று அதானி துறைமுகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வே குறிப்பிடுகிறது.
துறைமுகத்தின் அளவை 20 மடங்காக விரிவாக்க தேவையான 6,110 ஏக்கர் நிலப்பரப்பை தேற்றுவதற்கான திட்டம் அதானி குழுமத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கரோடு சேர்த்து 1,515 ஏக்கர் தனியார் நிலத்தையும், கிராமங்களில் வாழும் மீனவ மக்களை துரத்தியடிப்பதன் மூலம் 2,291 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,967 ஏக்கர் நிலத்தை கடல் மீட்பு (Sea Reclamation) திட்டம் மூலம் கடலில் சுமார் 6 கி.மீ. தொலைவிற்கு மணலைக் கொட்டி நிரவி, நிலமாக மாற்றி கடலை ஆக்கிரமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் விரட்டியடிக்கப்படுவர். கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களின் தற்சார்பான வாழ்க்கைமுறை ஒழித்துகட்டப்பட்டு அவர்கள் அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாகும் அவலநிலை உருவாகும்.
படிக்க: பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்
இன்னொருபுறம், மணலைக் கொட்டி கடலை நிலமாக மாற்றுவதன் மூலம் காட்டுப்பள்ளிக்கு தெற்கே உள்ள கொற்றலை ஆற்று முகத்துவாரம் அடைபட்டு போகும். ஏற்கனவே எண்ணூரிலுள்ள கொற்றலை ஆற்று முகத்துவாரத்திலிருந்து தூர்வாரப்படும் மணல் முறையாக அப்புறப்படுத்தப்படாததாலும், எண்ணூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடுநீரோடு மணலும் கலந்து வருவதாலும் முகத்துவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து வருகிறது. முன்பு 12 அடியாக இருந்த நீர் மட்டம் தற்போது ஒரு அடிக்கும் குறைந்து கொக்குகள் உட்காரும் அளவிற்கு அடைந்து போயுள்ளது. இந்நிலையில், இம்முகத்துவாரம் முற்றிலுமாக அடைந்து போனால் வருங்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும்.
இத்துடன், இவ்விரிவாக்கத் திட்டத்தினால் காட்டுப்பள்ளிக்கு வடக்கில் உள்ள பழவேற்காடு ஏரி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும். பல்வேறு அறிய வகை உயிரனங்களின் இனப்பெருக்கத்திற்கான தகுந்த இடமாகவும் வாழ்விடமாகவும் பழவேற்காடு ஏரி உள்ளது. 50 வகையான கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் பறவைகள் உள்ளிட்டு 250-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கும் “பழவேற்காடு பறவைகள் சரணாலயமும்” இந்த ஏரியில்தான் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடலில் மணலைக் கொட்டி நிலமாக மாற்றுவதனால் காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள பழவேற்காடு ஏரிக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் இடையிலான நீரோட்டம் தடைப்படும். இந்த நீரோட்டம்தான் பழவேற்காடு ஏரி பல்லுயிர்களின் வாழ்விடமாக இருப்பதற்கு ஆதாரமாக உள்ளது. இதன் வழியாகவே இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் பல்வேறு உயிரினங்கள் கடலிலிருந்து ஏரிக்கும் ஏரியிலிருந்து கடலுக்கும் இடம்பெயர்கின்றன.
கடல் மீட்பு திட்டத்தினால் இந்த பாதை அடைபடுவதால் ஏரிக்கான நீர்போக்குவரத்து நின்றுபோய் அதனால் ஏரி சாக்கடையாக மாறும் அபாயம் உள்ளது. அதானி துறைமுகம் கட்டப்பட்டதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஏரியை நம்பி வாழும் உயிரினங்கள், இவ்விரிவாக்கப்பட்ட திட்டத்தால் ஒரேயடியாக அழிந்து போகும். ஏரியை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கிவிடும்.
இதுமட்டுமின்றி, கடல் அரிப்பு பல மடங்கு அதிகரித்து பழவேற்காடு ஏரிக்கும் வங்காள விரிகுடாவிற்கும் தடையாக செயல்படும் காட்டுப்பள்ளி தீவு மூழ்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், பழவேற்காடு ஏரி நீரில் மூழ்குவதோடு கடல் தற்போது இருப்பதை விட பல மடங்கு சென்னைக்கு அருகாமையில் வர நேரிடும்.
மொத்தமாக, இவ்விரிவாக்கத் திட்டத்தினால் சென்னையின் வரைபடத்தையே மறுவடிவமைப்பு செய்யும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்கிறார் காலநிலை ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன். புவி வெப்பமயமாதலால் சென்னை போன்ற கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கும் நிலையில், அதானி திட்டம் அதனை விரைவுப்படுத்துகிறது.
துறைமுகத்தை நிரந்தரமாக மூடுவதே தீர்வு
மக்களின் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்காக அதானி குழுமத்தின் கார்ப்பரேட் ‘சமூகப் பொறுப்பு’ப் பிரிவான அதானி அறக்கட்டளை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வது போல பாசாங்கு காட்டி வருவதை அம்மக்கள் தன்மானத்துடன் எதிர்த்து வருகின்றனர்.
ஆனால், எப்படியேனும் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்பதே லாபவெறிப்பிடித்த அதானியின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது. அதற்கு காரணம் இத்துறைமுகத்தை சர்வதேச அளவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்ற அதானியின் திட்டமாகும்.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றிந்தபோது, இந்தியாவின் லார்சன் & டூப்ரோ நிறுவனத்திற்கும் (L&T) அமெரிக்க கடற்படைக்கும் இடையில் “மாஸ்டர் கப்பல் பழுதுபார்க்கும் ஒப்பந்தம்” (Master Ship Repair Agreement) கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள லார்சன் மற்றும் டூப்ரோ கப்பல் கட்டும் தளத்திற்கு அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்களான “சால்வர்” வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வருங்காலங்களில் இந்த துறைமுகத்தின் மூலம் ஆயுத ஏற்றுமதிகள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, அவ்வளவு எளிதில் அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான திட்டம் கைவிடப்படாது. எப்படியாவது அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கூட்டதை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கார்ப்பரேட் அதானி கும்பல் தீவிரமாக உள்ளது.
இதற்கேற்ப திருவள்ளூர் ஆட்சியினரின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. “திட்டம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வந்ததால் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார். அதாவது, கருத்துக் கேட்புக்கு மக்கள் திரள்வதைத் தடுக்கும் வகையில், பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்துள்ளது அதானி-அரசு கூட்டு கும்பல்.
அப்படி அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கூட்டத்தை நடத்த முடியாமல் போனாலும் அது அதானிக்கு மிகப்பெரிய இழப்பு அல்ல. ஒன்றிய அரசிடம் சுற்றுசூழல் அனுமதி வேண்டி மீண்டும் விண்ணப்பித்து துறைமுகத்தை விரிவுப்படுத்தவதற்கான வேலைகளையே மூர்க்கமாக முன்னெடுக்கும். இல்லையேல், கருத்துக் கேட்பு கூட்டத்தையே நடத்தாமல் மத்திய அரசிடம் ஆவணங்களை சமர்ப்பிக்கும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கார்ப்பரேட் நலனே தனது உயிர் மூச்சாகக் கருதி செயல்படும் பாசிச மோடி அரசும் சரி, பாசிசத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. போன்ற மற்ற மாநில அரசுகளும் சரி, மக்களின் நலனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி, கேரளத்தில் விழிஞ்சம் என அதானியின் சாம்ராஜ்ஜியம் விரிந்து கொண்டே வருகிறது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான இந்த கார்ப்பரேட் கொள்ளை என்பது தனி ஒரு திட்டமல்ல. சாகர் மாலா என்ற விரிந்த உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.
ஆகையால், அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது காட்டுப்பள்ளி மீனவ மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எதிரானதென்பதை உணர்ந்து அம்மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இக்கார்ப்பரேட் திட்டங்களை முறியடிக்க உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
துலிபா
(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)