Saturday, May 25, 2024
முகப்புசெய்திஇந்தியாமணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி

மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி

கலவரச் சூழலிலிருந்து மீளாத பெரும்பான்மை மணிப்பூர் மக்களுக்கு இத்தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை. எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்பதே மெய்தி இன மக்கள் உட்பட அனைத்து மக்களின் கவலையாக உள்ளது.

-

டந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீது தொடங்கிய வன்முறை வெறியாட்டங்களும் கலவரங்களும் இன்றளவும் ஓயவில்லை. கார்ப்பரேட் கொள்ளைக்காகவும் இந்துமுனைவாக்க நோக்கத்திற்காகவும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இக்கலவரத்தை முன்னின்று நடத்தியது. ஆனால், காட்டையும் உரிமையையும் பாதுகாப்பதற்கான குக்கி இன மக்களின் எழுச்சி பாசிசக் கும்பலை பின்வாங்க வைத்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் கலவரத்தை தற்காலிகமாக நிறுத்தினால்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பாசிசக் கும்பல், நயவஞ்சகமாக, இக்கலவரத்திற்கு தொடக்கப் புள்ளியாக இருந்த மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனின் தீர்ப்பை திரும்பபெறச் செய்தது. இதன் மூலம், குக்கி இன மக்களை சமாதானப்படுத்திவிடலாம் என்று பகல் கனவு கண்டது. ஆனால், இன்று வரை குக்கி இன மக்கள் மீதான கலவரங்கள் ஓயாத நிலையில், “நீதி இல்லை, வாக்களிக்க முடியாது” எனக் கூறி குக்கி பழங்குடியின அமைப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. குக்கி இன மக்கள் மற்றும் அமைப்புகளின் இம்முடிவு பா.ஜ.க-வின் நரித்தனமான திட்டத்தில் மண்ணைக் கொட்டியுள்ளது.

தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே, பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், முன்னாள் வெளி மணிப்பூர் எம்.பி. கிம் காங்டே மற்றும் டெல்லியில் உள்ள குக்கி-ஜோமி-ஹ்மர் மகளிர் மன்றங்களின் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய “குளோபல் குக்கி-ஜோமி-ஹ்மர் பெண்கள் சமூகம்” என்ற பெண்கள் அமைப்பு தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தது. இதற்கிடையே, இம்பாலில் ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சார்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, “குக்கி தேசிய சட்டமன்றம்” மற்றும் “குக்கி இன்பி” ஆகிய இரண்டு குக்கி அமைப்புகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.


படிக்க: மணிப்பூர்: நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி – அமித் ஷா கும்பல்


இதுகுறித்து பேசிய குக்கி தேசிய சட்டமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் மங்போய் ஹாக்கிப், “எங்கள் தலைவர்கள் மீது நாங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம். சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் திறன் கொண்ட இந்தியப் படைகள், பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியது வருத்தமளிக்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற கூற்றின் மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது” என்றார்.

மேலும், “இந்தியத் தலைமைக்கு எங்களின் வேதனையை வெளிப்படுத்த, மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்தியாவில் துன்பம்தான் எங்கள் உரிமையாகக் கருதப்படுமெனில், தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்பதை நாங்கள் தேர்வு செய்கிறோம். இந்தப் புறக்கணிப்பு எங்களின் துன்பங்களையும் வலியையும் இந்தியாவிற்கும் உலகிற்கும் தெரிவிப்பதற்கான ஒரு வழியாகும்” என்று உணர்வுபூர்வமாகவும் அதேசமயம் உறுதியாகவும் தெரிவித்தார். மற்றொரு அமைப்பான குக்கி இன்பி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தலில் வாக்களிக்காமல் இருக்க தீர்மானம் நிறைவேற்றியது.

கூடுதலாக, கடந்தாண்டில் கலவரம் தொடங்கியபோது சுராசந்த்பூரில் பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவான பழங்குடியினத் தலைவர்கள் மன்றம் (ஐ.டி.எல்.எஃப்.) கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பாதுகாப்புப் படைகளானது அமைதி மற்றும் நடுநிலையை பராமரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் இன்று அவர்களின் நடவடிக்கைகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளன” என்று தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

மெய்தி இன மக்கள் மத்தியிலும் பா.ஜ.க-விற்கு பெரியளவில் ஆதரவு இல்லை. மணிப்பூரில் தேர்தலை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற்ற பா.ஜ.க. கும்பல், அதனோடு மணிப்பூர் மக்களை வாக்களிக்கச் செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. சான்றாக, கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கலவரச் சூழலிலிருந்து மீளாத பெரும்பான்மை மணிப்பூர் மக்களுக்கு இத்தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை. எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்பதே மெய்தி இன மக்கள் உட்பட அனைத்து மக்களின் கவலையாக உள்ளது. இதன் காரணமாக, 2019 மக்களவைத் தேர்தலில் 82 சதவிகித வாக்குகளுடன் அதிகபட்ச வாக்குகள் பதிவான மாநிலமாக திகழ்ந்த மணிப்பூரில், தற்போது சுவரொட்டிகள், பேனர்கள், மெகா பேரணிகள் எனத் தேர்தல் நடப்பதற்கான எந்த அறிகுறியையும் காண முடியவில்லை.


படிக்க: மணிப்பூர் கலவரம் – தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தண்டிக்க முடியமா?


இதற்கிடையே, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மக்களவை தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வெளி மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் குக்கி வேட்பாளர்களை பின்வாங்கும்படி பல அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. பழங்குடியின மக்களுக்காக (எஸ்.டி.) ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் குக்கி இன மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி பா.ஜ.க-வும் நேரடியாக போட்டியிடவில்லை. இந்த அச்சத்தின் காரணமாகவே பா.ஜ.க-வின் ‘நட்சத்திர பிரச்சாரகரான’ மோடியும் மணிப்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. கலவரம் நடந்துகொண்டிருக்கும் ஓராண்டாக மணிப்பூர் பக்கம் எட்டிப்பார்க்காமல் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மட்டும் சென்ற காரணத்தினால், பா.ஜ.க. சார்பாக சென்ற அமித்ஷாவின் வருகையும் மணிப்பூர் மக்களை ஆத்திரமூட்டியுள்ளது.

நடந்துகொண்டிருக்கும் மக்களவை தேர்தல், இந்தியா எந்த திசையில் செல்லப்போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்று பலராலும் பார்க்கப்படும் நிலையில், குக்கி இன மக்களும் அமைப்புகளும் தேர்தலை புறக்கணித்திருப்பது கவனிக்க வேண்டிய விசயமாகும். மெய்தி இனவெறி அமைப்பான அரம்பை தெங்கோல்  (Arambai  Tenggol) முழுமையாக கைப்பற்றியுள்ள மணிப்பூரின் ஆட்சியதிகாரத்தில் இனியும் எந்த உரிமையையும் பெற முடியாது என்பதே குக்கி இன மக்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவிற்கு காரணம். மணிப்பூர் அரசு கட்டமைப்பு முற்றிலுமாக ஜனநாயகமற்றதாக, பாசிசமயமானதாக மாறியுள்ளது என்பதை சொந்தமுறையில் உணர்ந்துள்ள குக்கி இன மக்கள் ஓர் ஜனநாயக கட்டமைப்பை கோருகின்றனர். அதுவே பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசாகும். குக்கி இன மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும்  அத்தகைய மாற்று கட்டமைப்பிற்காக போராட வேண்டும்.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க