Thursday, May 30, 2024
முகப்புசெய்திஇந்தியாஉத்தரப்பிரதேசம் மகாபஞ்சாயத்து: பா.ஜ.க.-வை புறக்கணிப்பதாக ராஜ்புத் சாதியினர் முடிவு

உத்தரப்பிரதேசம் மகாபஞ்சாயத்து: பா.ஜ.க.-வை புறக்கணிப்பதாக ராஜ்புத் சாதியினர் முடிவு

மகாபஞ்சாயத்து மேடையில் பா.ஜ.க-வின் சின்னத்தில் "X" குறியீடு போட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது. "தற்போது எம்.பி-யாக இருக்கும் சஞ்சீவ் பல்யான், செளபிசி-இன் கீழ் இருக்கும் 24 கிராம மக்களின் ஓட்டுகளால்தான் வெற்றிப்பெற்றார். ஆனால், இம்முறை அவர் எல்லா இடங்களிலும் தோற்றுப்போவார்" என்று ஒருவர் பேசியபோது அங்கிருந்த மக்கள் முழக்கமிட்டனர்.

-

டந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, குஜராத்தின் செளராஷ்டிரா பகுதியில் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த மக்கள் பா.ஜ.க-விற்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் 22-ஆம் தேதி பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ”ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை” என்று பேசியது ராஜபுத் சாதியைச் சேர்ந்த மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ராஜ்புத் சாதியைச் சேர்ந்த மக்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என வட இந்திய மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கேடா கிராமத்தில் ராஜ்புத் சாதியினர் நடத்திய மகாபஞ்சாயத்தில், அம்மாநிலத்தின் முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களைப் புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளனர். அரசாங்கத் திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருந்தது, அதிகரித்துவரும் வேலையின்மை, அக்னிவீர் திட்டம் மற்றும் ராஜ்புத் சாதியினரை அவமதித்தது போன்றவற்றை இப்புறக்கணிப்பிற்கு காரணங்களாக கூறுகின்றனர்.

ஆனால், இந்த புறக்கணிப்பு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு (ராஜ்புத் சாதியை சேர்ந்தவர்) மட்டும் பொருந்தாது என்றும் தங்கள் குரல் மத்திய பா.ஜ.க. தலைமையால்தான் கேட்கப்படவில்லை என்றும் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கும் பாக்பத், மீரட், முசாபர்நகர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் கீழ் வரும் 24 கிராமங்களின் கூட்டமைப்பான “செளபிசி” ஏற்பாடு செய்த மகாபஞ்சாயத்தில், முசாபர்நகரில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஹரேந்திர மாலிக்கிற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக முடிவெடுத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள மற்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க.-வை தோற்கடிக்கும் வகையில் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என்றும் ராஜ்புத் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகின்றனர்.


படிக்க: பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது


மகாபஞ்சாயத்தில் பேசிய ராஜ்புத் சாதியினர், 2013-இல் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக இதே மைதானத்தில் இதே போன்றதொரு பஞ்சாயத்து நடத்தப்பட்டத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினர். அந்த பஞ்சாயத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.-வின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்ததாகவும், தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பகுதியில் நடக்கும் இந்த பஞ்சாயத்து பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்றும் கூறினர்.

மகாபஞ்சாயத்து மேடையில் பா.ஜ.க-வின் சின்னத்தில் “X” குறியீடு போட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது. “தற்போது எம்.பி-யாக இருக்கும் சஞ்சீவ் பல்யான், செளபிசி-இன் கீழ் இருக்கும் 24 கிராம மக்களின் ஓட்டுகளால்தான் வெற்றிப்பெற்றார். ஆனால், இம்முறை அவர் எல்லா இடங்களிலும் தோற்றுப்போவார்” என்று ஒருவர் பேசியபோது அங்கிருந்த மக்கள் முழக்கமிட்டனர்.

இதில் கலந்துக்கொண்ட கிசான் மஸ்தூர் சங்கத்தின் தலைவர் பூரன் சிங், மேலும், “நாங்கள் மோடியின் “400 பார்” என்ற அழைப்புக்கொண்ட அஸ்வமேத குதிரையை பிடித்துவிட்டோம். அதை தேர்தல் முடிந்த பிறகுதான் விடுவிப்போம். ராஜபுத்திரர்கள் மட்டுமல்ல, 36 சாதியைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். தேசியவாதத்தையோ, பாகிஸ்தானையோ, சீனாவையோ காட்டி எங்களை பயமுறுத்தி யாரும் வாக்குகளை பெற முடியாது” என்றார்.

கைரானா மற்றும் சஹாரன்பூர் மக்களைவத் தொகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த மகாபஞ்சாயத்தில் கலந்துக்கொண்டர். “சத்ரிய சபா”, “கர்னி சேனா பாரத்” மற்றும் “பாரதிய கிசான் யூனியன்(பாஹுனு)” போன்ற பிற அமைப்புகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றன.


படிக்க: பாஜக மோடி ஆட்சியின் எட்டாண்டுகால கார்ப்பரேட் கரசேவை: வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி!


கெடா கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அஜய், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உ.பி. போலீஸ்துறைக்கான தேர்வெழுத வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அம்முறை வினாத்தாள் கசிந்து விட்டதாகவும் கோபாமாக கூறினார். மேலும், “பா.ஜ.க. சாதி அரசியல் செய்து மக்களை தங்களுக்குள் சண்டையிட வைக்கிறது. எனவே, இதுபோன்ற சர்வாதிகார ஆட்சியை யார் நடத்தினாலும் வேரோடு தூக்கியெறிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், இந்த மைதானத்தில் நடந்த பஞ்சாயத்து பிரிவினையை ஏற்படுத்தியது. இன்று சாதி, மதம் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு செல்கிறோம். நாங்கள் இன்று ஒன்றாக இருக்கிறோம்” என்று கூறினார்.

“2013-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவியது. ஆனால் பின்னர் அவர்கள் எங்களை புறக்கணித்தனர். இங்கு எந்த வேலையும் இல்லை, எந்த திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. மக்கள் அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். இனி, இந்த நிலமே பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்” என்று மகாபஞ்சாயத்தில் பங்கேற்ற 40 வயதான பாப்லி ஷர்மா கூறினார்.

பா.ஜ.க-வின் இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலையாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் ராஜ்புத் சாதியினர் பா.ஜ.க.-விற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவது பா.ஜ.க.-விற்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், குஜராத், உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் ராஜ்புத்-கள் போராட்டம் தீவிரமடைந்து வருவது பா.ஜ.க-விற்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க