Saturday, May 25, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?

உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?

-

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: சமீப காலமாக உச்சநீதிமன்றம் வழங்கிவரும் தீர்ப்புகள் மோடி அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இவற்றை எப்படிப் பார்ப்பது?

ண்டிகர் மேயர் தேர்தல், தேர்தல் நிதிப் பத்திரம் போன்ற வழக்குகளில் அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுத்ததாக பலராலும் பார்க்கப்படுகிறது. உண்மையில், இத்தீர்ப்புகள் மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதா? என்றால், ‘‘ஆம்’‘ என்பதுதான் பதில். ஆனால், அது பாதி பதில் மட்டுமே.

பத்தாண்டுகால பாசிச மோடி ஆட்சியில் நீதித்துறை பாசிசமயமாகி வருகிறது. பாசிஸ்டுகளுக்கு எதிரான தீர்ப்பு என்பதே காண்பதற்கரிய காட்சியாகிவிட்டது. அதனால்தான் சாதாரணமான சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தின் தீர்ப்பானது பிரமிக்கதக்கதாக தோற்றமளிக்கிறது என முதலாளித்துவ ஊடகவியலாளர்கள் சிலரே அம்பலப்படுத்தியிருந்தனர்.

மேலும், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தைப் பொறுத்தவரை, பாசிச பா.ஜ.க-வின் கையாளாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி அனில் மசிக் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் ‘‘எக்ஸ்’‘ குறியிட்டு, அவற்றை செல்லா வாக்குகளாக மாற்றும் சி.சி.டி.வி. காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, இந்திய ‘தேர்தல் ஜனநாயத்தின்’ இழிநிலை பேசுபொருளானது. அப்படியிருந்தும் இந்த தேர்தல் முடிவுக்கு ஹரியானா உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.  இந்நிகழ்வு, வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் நியாயமான முறையில்தான் நடக்குமா? என்ற கேள்வியை பலரிடத்திலும் ஏற்படுத்தியது. எனவே, நிலவுகின்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பின் மீதும் தேர்தல் முறையின் மீதும் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளது.

இதேப்போல், தேர்தல் நிதிப் பத்திரம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாசிச பா.ஜ.க-விற்கு சில நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், 2018-ஆம் ஆண்டு தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதிப் பத்திர முறை ரத்து செய்யப்பட்டது சரியானதுதான் என்றாலும், அது மிகவும் காலதாமதமாக செய்யப்பட்டுள்ளது என்பதும் இத்தீர்ப்பு பாசிச பா.ஜ.க-விற்கு தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடாத வகையில் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

நவம்பர் 2, 2023 அன்றே தேர்தல் நிதிப் பத்திர வழக்கின் விசாரணை முடிவு பெற்று தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், பிப்ரவரி 15, 2024 அன்றுதான் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், ஜனவரி 2 முதல் 11 வரையிலான தேதிகளில், தேர்தல் நிதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேவையான தேர்தல் நிதியை பா.ஜ.க. முற்றிலுமாக வசூல் செய்து கொண்ட பின்புதான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை கழிவறைக் காகிதமாக கூட மோடி அரசு மதிப்பதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. சான்றாக, டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கிலும், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கிலும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை, நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி செல்லாக் காசாக்கிவிட்டது பாசிச பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்ற உத்தரவை கணக்கில் கொள்ளாமல் மேற்குறிப்பிட்ட வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அடக்கியே வாசித்து வருகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அவமானகரமான வரலாற்று நிகழ்விற்குப் பின்னரும் கூட, ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏன், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இம்மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடைக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு அனுமதியளித்து சங்கப் பரிவார கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்குத் துணைப் புரிந்தது.

2019 பாபர் மசூதி இடிப்பு வழக்கு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடங்கி தற்போது வரை மோடிக் கும்பலின்  இந்துமுனைவாக்கத்திற்கும், பாசிச சர்வாதிகாரத்திற்கும் சட்ட அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க