காவிகளின் “சூரத் ஃபார்முலா”:
தேர்தல் ‘ஜனநாயகத்துக்கு’ வெட்டப்படும் சவக்குழி
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மோடி – அமித்ஷா கும்பல், தன்னுடைய அதிகார பலம், பண பலம், ஊடக பலம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பு மூலம் பல்வேறு சதி நடவடிக்கைகள், மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, தன் கட்சியினரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் சுயேட்சை வேட்பாளர்களையும் மிரட்டி, வேட்பு மனுக்களை திரும்பபெற வைத்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானி மற்றும் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்பு மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி சௌரப் பார்தியால் நிராகரிக்கப்பட்டது. இவர்களின் மனுக்களை முன்மொழிந்திருந்த நால்வரும், மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று தன்னிடம் புகாரளித்ததை அடுத்து வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க : ஃபெலிக்ஸ் சவுக்கோட முடியாது! | தோழர் மருது நேர்காணல்
மேலும், சூரத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 7 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரு பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரும் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். எனவே, முகேஷ் தலாலை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாத காரணத்தால்தான் அவர் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழிந்தவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், பகுஜன் கட்சியின் வேட்பாளர் ஆகியோர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த குண்டர்களாலும், குஜராத் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சியே வேட்பாளர்கள் தங்களுடைய மனுக்களை திரும்பப்பெற்று கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, சுயேட்சை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு தனது கட்சி கோரிக்கை விடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளதே அதற்கு சான்றாகும். அதாவது வேட்பு மனுக்களை திரும்பப்பெறுமாறு மிரட்டியதைதான் கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்.
அதேபோல, ஏப்ரல் 29-ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்திபாம், தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று பா.ஜ.க-வில் இணைந்தார். காந்திபாமின் இந்நடவடிக்கையானது, 2007-ஆம் ஆண்டு அவர் மற்றும் அவருடைய தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிலத் தகராறு வழக்கில் சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) சேர்க்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில நாட்களுக்கு பிறகே நடந்துள்ளது. எனவே இதன்மூலம் காந்திபாமும் பா.ஜ.க குண்டர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தே தன்னுடைய வேட்புமனுவை திரும்பப்பெற்றுக்கொண்டு காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் என்பதும் உறுதியாகிறது.
அதேபோல, மே மாதத் தொடக்கத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களில் 12 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். 4 பேர் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களும் பா.ஜ.க குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்பட்டுள்ளனர்.
16 பேரில் மூவர், தங்களுடைய வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்காக உள்ளூர் பா.ஜ.க அரசியல்வாதிகள் மற்றும் பா.ஜ.க கட்சியுடன் தொடர்புடையவர்களால் மிரட்டப்பட்டதாக ஆங்கில ஊடகமான “ஸ்க்ரோல்”-யிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்களில் இருவர், தங்களை குஜராத் போலீசும் மிரட்டியது என்றும் கூறியுள்ளனர். வேட்பு மனுவை திரும்பப்பெற்ற சுயேட்சை வேட்பாளரான ஜிதேந்திர சவுகான், “என் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்; இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்; அது ஆபத்தில் உள்ளது” என்று தான் வெளியிட்ட காணொளியில் கூறுகிறார்.
காந்திநகரில் பிரஜாதந்திர ஆதார் கட்சி சார்பில் போட்டியிடும் 43 வயதான சுமித்ரா மவுரியா காவிக்குண்டர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் செயல்பட்டு வருகிறார். காவிக் குண்டர்களின் மிரட்டலில் இருந்து தன்னை தற்காலிகமாக தற்காத்துக் கொள்ள 400 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற சுமித்ரா மௌரியாவையும் குஜராத் போலீசு அவர் இருக்கும் இடத்திற்கே சென்று மிரட்டியுள்ளது. ஆனால், அவர் இன்றுவரை தன்னுடைய வேட்பு மனுவை திரும்பப்பெறவில்லை.
இவ்வாறு, மோடி – அமித்ஷா கும்பல் தற்போது வரை மூன்று மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுக்களை திரும்பப்பெற வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவுதான் முடிவுற்றுள்ள நிலையில், மேலும் பல எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப்பெற காவிக் குண்டர்களாலும் போலீசாலும் மிரட்டப்படுவர் என்றே கருதத்தோன்றுகிறது. பா.ஜ.க. கும்பலின் இந்நடவடிக்கையானது முதலாளித்துவ ஊடகங்களிலாலேயே “சூரத் ஃபார்முலா” என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த மூன்று தொகுதிகளும் இதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெற்ற தொகுதிகளாகும். தற்போதைய தேர்தலிலும் பா.ஜ.க-வினரே நிச்சயம் வெற்றி பெறுவர் என்று நம்பப்படுகிறது. தாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க-வினர் கருதுகின்ற தொகுதிகளிலும் ஏன் எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்ட வேண்டும் என்ற கேள்வியை முதலாளித்துவ ஊடகங்களும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் எழுப்புகின்றனர்.
“1984 முதல் சூரத் மற்றும் இந்தூர் மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. ஆனால், 2024-இல் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்யப்பட்டுள்ளனர். ஏன்?” என்று தன்னுடைய “எக்ஸ்” பதிவில் கேள்வியெழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
படிக்க : மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி
பா.ஜ.க கும்பல் தன்னுடைய தோல்வி பயத்தால் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜ.க-வின் இந்நடவடிக்கைகளை அந்த அடிப்படையில் பார்க்க முடியாது. மாறாக, பா.ஜ.க கும்பலின் நீண்டகால கனவான ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் ஒரே கட்சி என்ற நோக்கத்தின் அடிப்படையிலான “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா” என்பதன் ஓர் அங்கமாகும்.
அந்த நோக்கத்திலிருந்துதான், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னுடைய அடியாட்படைகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுவது, அடிபணிய வைப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க. கும்பல், தற்போது சுயேட்சை வேட்பாளர்களையும் காவிக் குண்டர்கள் மூலமும் போலீசின் மூலமும் மிரட்டத் தொடங்கியுள்ளது.
இனி வருங்காலங்களில் சூரத் ஃபார்முலா அடிப்படையிலான நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். அதன்மூலம், சூரத்தை போன்று தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிட ஆட்களே இல்லாத நிலையை உருவாக்க காவிக்கும்பல் விழையும்.
இவ்வாறு இந்த பெயரளவிலான ஜனநாயக அரசுக் கட்டமைப்பை தங்களுடைய இந்துராஷ்டிர அரசுக் கட்டமைப்பாக படிப்படியாக மாற்றி வருகின்றனர் பாசிஸ்டுகள்.
கதிர்