முன்குறிப்பு: ஏப்ரல் மாதத்தில் மட்டும் வரி என்னும் பெயரில் உழைக்கும் மக்களிடம் மோடி அரசு உறிஞ்சி கொழுத்தது, 2 லட்சம் கோடியை தாண்டுமாம்! மக்கள் மீது வரி விதிப்பதில் அமெரிக்காவையும், சிங்கப்பூரையும் முந்திச் செல்கிறது, பாசிச மோடியின் அம்பானி-அதானி சேவை இந்தியா!
பச்சிளம் பிஞ்சுகள் குடிக்கும் பாலுக்கும் வரி!
பசிக்கு உண்ணும் பிஸ்கட்டுக்கும் வரி!
தயிருக்கு வரி!
மோருக்கு வரி!
பருத்திக்கு வரி!
நூலுக்கு வரி!
ஜவுளிக்கு வரி!
விற்பனைக்கு வரி!
பணக்காரர்களுக்கு ஒரு வரி!
ஏழைகளுக்கு ஒரு வரி!
இங்கு இதுவே நியதி!
பெண்கள் பயன்படுத்தும்
நாப்க்கினுக்கு வரி!
முதியவர்கள் பயன்படுத்தும்
மாத்திரைகளுக்கு வரி!
அதானியின் கஞ்சாவுக்கு மட்டும்
துறைமுகத்தில் என்ட்ரி ஃப்ரீ!
ஜி.எஸ்.டி-க்கு பின்
சிறுகுறு முதலாளிகளின்
முகவரி கேட்டால்,
பெரும்பாலும் கல்லறைக்கு
வழி சொல்கிறார்கள்.
மிச்சசொச்சம் இருந்த அண்ணாச்சிகளோ,
தொழில் என்னாச்சி எனக் கேட்டால்,
“எல்லாம் நாசமாப் போச்சு” என்கிறார்கள்.
மானம் மறைக்க கோவணம் கட்டியவனின்
கோவணத்தையும் பறித்துக் கொண்டது ஜி.எஸ்.டி!
அவசரத்திற்கு மூத்திரம் வந்தாலும்,
இனி அதற்கும் வரி!
பிணங்களை எரிக்கும்
சுடுகாடுகளை விட்டு வைத்திருக்கிறார்கள்.
அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால்,
அதற்கொரு வரிப்போட்டு
செத்தவன் நெற்றிக் காசையும்
களவாண்டு விடுவார்கள்.
இன்னும் எத்தனை வரிகளைதான்
தாங்கும் எங்கள் முதுகுகள்.
பாசிசக் கூட்டமே,
நாங்கள் ஒன்றும் அணில்கள் அல்ல,
உங்கள் ராமனின் வரிகளை
முதுகிலே சுமந்துத் திரிய!
செந்தாழன்