29.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு ஏப்ரல் 15, 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரத்தின் முதல் மாவட்ட மாநாடு 28.03.2025 அன்று நடத்தி முடிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு உற்சாகமாகத் தொடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் இயக்க வேலைகளின் மூலமாக, பாசிச எதிர்ப்பு அரசியலை ஜனநாயக சக்திகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் விரிவாக கொண்டு சென்றுள்ளோம். இதன் தொடர்ச்சியாக தனி மாவட்டமாக தற்போது எமது பகுதி செயல்படத் தொடங்குவது உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும், மேலும் மக்கள் நலனுக்காக தீவிரமாக செயல்படுவதற்கான வாய்ப்பாகவும், பாசிச எதிர்ப்பு போராட்டத்தை வேகமாக முன்னகர்த்துவதற்கான வாய்ப்பாகவும் உணர்கிறோம்.
மைய தேர்தல் குழுவின் மேற்பார்வையில் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு, அண்மையில் மரணித்த, மக்கள் அதிகாரம் நெய்வேலி பகுதித் தோழர் குழந்தைவேலு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அதற்கடுத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கை மீது விளக்கங்கள், விவாதங்கள் நடத்தப்பட்டது. தோழர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதை அடுத்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அமைப்பின் விதிகள், மூன்றாண்டு அமைப்பு அறிக்கை முன்வைக்கப்பட்டு விளக்கம், விவாதம் என்ற அடிப்படையில் தோழர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதையடுத்து, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதை மாவட்டக் குழுவில் உள்ள ஒரு தோழர் முன்மொழிந்தார். அதன் தொடர்ச்சியாக, தோழர் இரஞ்சித் செயலாளராகவும், தோழர் அருண் இணைச் செயலாளராகவும், தோழர் அர்ஷத் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைக்கப் போராடுவோம் என மாநாடு உறுதி ஏற்றது.
இம்மாவட்ட மாநாட்டில் பகுதி அளவிலான அரசியல் பிரச்சினைகள், பகுதிப் பிரச்சினைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி என்ற பெயரில், விவசாய நிலங்களை அபகரித்து, எட்டாவது சிப்காட் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தங்களின் நிலங்களைப் பாதுகாப்பதற்காக போராடும் விவசாயிகளுக்கு மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணைநின்று போராடும்.
- நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நெடுங்காலமாக வசித்து வரும் மக்களை வெளியேற்றி வாழ்வாதாரத்தைப் பறிக்கும், அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை உத்தரவாதப்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசின் செயல்பாடுகளை இம்மாநாடு கண்டிக்கிறது.
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்காகவும், நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காகவும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், பாஞ்சாலியூர், காந்தி சிலை ஆகிய பகுதிகளில் பட்டா உரிமையின்றி வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு துன்பப்பட்டு வருகின்றனர். அரசு நிர்வாகம் நீண்ட காலமாக வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக அவர்களுக்கு பட்டாக்கள் வழங்க வேண்டும் என முன்வைக்கிறது. மேலும் பட்டா நிலங்களை சமூக விரோத சக்திகள் கைப்பற்றாமல் இருப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் கோருகிறது.
- கிருஷ்ணகிரியில் உள்ள சையத் பாஷா மலையும், அங்கு உள்ள தர்காவும் மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழும் இடமாகும். இத்தகைய மதநல்லிணக்க சூழலைத் தகர்த்து மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கோடு, சட்டவிரோத செயல்பாடுகளையும், மக்கள் மத்தியில் பொய்களையும் பரப்பி வரும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பல்களை உழைக்கும் மக்கள் எச்சரிக்கையோடு இருந்து, முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் விழிப்போடு இருந்து இந்தக் கும்பலை அம்பலப்படுத்த வேண்டும் என்பதையும் இம்மாநாடு முன்வைக்கிறது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்மைக்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மேலும் இதற்கு மூலகாரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்குதடையின்றி, மாவட்டம் முழுவதும் கிடைக்கின்ற சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமுமே முழுமையான பொறுப்பு. பாலின சமத்துவம் தொடர்பான தீவிரமான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை அடியோடு தடை செய்வதையும் உத்தரவாதப்படுத்தும் வகையில், மக்களை அணிதிரட்டி போராட வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- பெங்களூரு நகரக் கழிவுகள், ஓசூர் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றால் கே.ஆர்.பி அணை மாசடைந்து மோசமான நிலையை நோக்கி சென்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளும் மாசடைந்து வருகின்றன. இதனால், இயற்கைக் சூழலும், விவசாய நிலங்களும், மக்களின் உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடிநீரில் ப்ளூரைடு கலந்த வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கெதிராக அரசைக் கண்டித்து, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் என இம்மாநாடு அறிவிக்கிறது.
- மாபெரும் தொழில் நகரான ஓசூரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் நிறுவனத்தின் வருவாய்க்கு இணையான ஊதியம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மக்கள் அதிகாரம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என இம்மாநாடு உறுதியளிக்கிறது. மேலும் இலட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் எந்த உரிமையும் அற்று பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணிநிரந்தர சட்ட உரிமைகளை நிலைநாட்டவும், தொழிலாளர்களின் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான முயற்சிகளுக்கும் மக்கள் அதிகாரம் துணை நிற்கும் எனவும் உறுதியளிக்கிறது.
- இம்மாவட்டத்தில் செயல்படும் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களை பல்வேறு கார்ப்பரேட் சட்ட, திட்டங்களின் மூலம் அழிப்பதற்கெதிரான சிறு குறு தொழில் நிறுவனங்களின் போராட்டங்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் என இம்மாநாடு அறிவிக்கிறது.
- இம்மாவட்டத்தின் பிரதான விளைபொருட்களான மாங்கனி, நெல், கடலை, கரும்பு, தேங்காய், மல்லி, காய்கறிகள், பூக்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான களச் செயற்பாடுகளுக்கு மக்கள் அதிகாரம் முன்னுரிமை கொடுக்கும் எனவும் இம்மாநாடு அறிவிக்கிறது.
- அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சானமாவு ஆகிய பகுதிகளில் யானைகள் விளைநிலங்களில் புகுந்து விளைபொருட்களை நாசம் செய்கின்றன. மேலும் யானைகள் தாக்கி மக்கள் உயிரிழப்பதும் தொடர்ச்சியாக நடக்கிறது. இதை முற்றிலும் தடுக்கின்ற வகையில் அரசின் செயல்பாடுகள் இல்லை என இம்மாநாடு குற்றம் சாட்டுகிறது. யானைகளுக்கான உணவு மற்றும் குடிநீர் காடுகளுக்குள்ளேயே கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் நிரந்தரமாகவும், தொடர்ச்சியாகவும் செய்ய வேண்டும். மேலும் கல்குவாரி, கார்ப்பரேட் நிறுவனங்கள், நெடுஞ்சாலை விரிவாக்கம் ஆகியவற்றிற்காக வனப்பகுதிகள் அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசு நிர்வாகத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கல்குவாரிகள், எம்சாண்ட் குவாரிகள் எண்ணற்றவை சட்டவிரோதமாக அதிகார வர்க்கத்தின் துணையோடு செயல்பட்டு வருகின்றன. இதனால் இயற்கைச்சூழலும், விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. சமூக விரோதக் கும்பல்களால் இயக்கப்பட்டு வரும் இந்தக் குவாரிகள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்கள் அதிகாரம் துணை நிற்கும் எனவும் இம்மாநாடு அறிவிக்கிறது.
- பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து அத்திப்பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் பேருந்து பற்றாக்குறை காரணமாக, காலை நேரங்களில் பேருந்து நிலையத்திலிருந்து அத்திப்பள்ளி சிப்காட் செல்ல வேண்டிய பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதேபோல் சூளகிரியிலிருந்து ஓசூர் செல்லும் அரசுப் பேருந்துகள் இடையிலுள்ள ஊர்களுக்கு கூடுதலாக செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், மாலை நேரங்களில் ஓசூர் வந்து படிக்கும் பள்ளி மாணவர்கள் காசு கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கும் நிலைமை உள்ளது. எனவே, போக்குவரத்துக் கழகம் உடனடியாக கூடுதலான பேருந்துகளை இயக்கி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள இலட்சக்கணக்கான விசைத்தறித் தொழிலாளர்கள், நூல்விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தொடர்ச்சியாக துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என இம்மாநாடு உறுதியளிக்கிறது.
- தர்மபுரி, கம்பை நல்லூர் பட்டாசு வெடிவிபத்தில், சட்டவிரோத ஆலை உரிமையாளரை தண்டிப்பது மட்டுமல்லாமல், செயல்படுவதற்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் தடை செய்யப்பட வேண்டும், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் அரசால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
- சேலம் (தீவட்டிப்பட்டி), தர்மபுரி பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதும், பட்டியல் சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவர்களின் மீதும் தீண்டாமை, வன்கொடுமைகள் ஆதிக்க சாதிவெறியர்களால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மேலும் கோவில் நுழைவு உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே போலீசு அடக்குமுறைகளை செலுத்துகிறது. இதனை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஜனநாயக சக்திகள் துணைநிற்க வேண்டும் எனவும், வழிபாட்டு உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்கான அவர்களின் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணைநிற்கும் என இம்மாநாடு அறிவிக்கிறது.
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram