29.03.2025
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (28.03.2025) காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு (திருநெல்வேலி – தூத்துக்குடி) தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடைபெற்று. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகி மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் நினைவாக அவரது பெயர் மாநாடு அரங்கத்திற்கு வைக்கப்பட்டது.
மாநாட்டுக்கு தோழர் தாளமுத்து செல்வா தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிகாரம் கொடி ஏற்றப்பட்டு தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு மாநாடு உற்சாகமாக ஆரம்பமானது.
புதிய கொள்கை அறிக்கை குறித்து தோழர் ரவி விளக்கினார். அதன் பிறகு கொள்கை அறிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்ததாக மக்கள் அதிகாரத்தின் அமைப்பு விதிகள், பொறுப்பாளரின் கடமைகள் மற்றும் உறுப்பினர் கடமைகள் என அனைத்தையும் தோழர் குருசாமி விவரித்தார்.
அமைப்பின் மூன்று ஆண்டு அறிக்கைகள் மற்றும் நிதி சம்பந்தமான அறிக்கைகள் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அடுத்ததாக மாவட்ட அளவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற 17 போலீசார் மீதும், 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். தியாகிகள் 15 பேருக்கும் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- தூத்துக்குடி, இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசை வன்மையாக இம்மாநாடு கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- பொட்டலூரணி கழிவு மீன் ஆலைகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை இம்மாநாடு ஆதரிப்பதோடு, அவர்களின் கோரிக்கைகளான மூன்று கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூட வேண்டும், போராட்டக் குழுவினர் மீதான பொய் வழக்குகளை தி.மு.க அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதையும், விளாத்திகுளம் வெம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்தும் போராடும் மக்களை ஆதரித்தும் இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- அம்பானி – அதானி பாசிச கும்பலின் நலனுக்காக, இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் 9,990 சதுர அடி பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஏலம் விட்டுள்ளது பாசிச பா.ஜ.க அரசு. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவதோடு, கடல் வளமும் அழிந்து போகும் நிலை ஏற்படும். ஆகவே இந்தத் திட்டத்தைக் கொண்டு வரும் பாசிச மோடி அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
- தென் மாவட்டங்கள் முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதோடு இதற்குக் காரணமான ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்களையும் தடை செய்ய வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுகிறது.
- 11 மாத கட்டாய ஒப்பந்த வேலை நியமனத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- சனாதன எதிர்ப்புப் போராளி அய்யா வைகுண்டரை சனாதனவாதியாக சித்தரித்து ஆளுநர் வெளியிட்ட நூலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்களின் பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- வல்லநாடு சங்கரன் விஷம் குடித்து இறந்தது, நெல்லை டவுன் ஜாகிர் உசேன் கொல்லப்பட்டது, அம்பையில் விசாரணை என்ற பெயரில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கியது ஆகிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- கடந்த மழைக்காலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பொருட்சேதமும் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இவை மீண்டும் நிகழாத வண்ணம் முறையாக வடிகால் அமைத்து வெள்ளநீர் புகாமல் இருக்க உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- தூத்துக்குடியை சுற்றியுள்ள பல பகுதிகளை மாநகராட்சியோடு இணைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியோடு ஊராட்சிகளை இணைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- தூய்மை பணியாளர்களின் கோரிக்கையான ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமையை இம்மாநாடு கண்டிப்பதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகிறது.
இத்தீர்மானங்கள் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக தோழர் தாளமுத்து செல்வா, இணைச் செயலாளராக தோழர் தமிழ் வேந்தன், பொருளாளராக தோழர் சந்துரு ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதி நிகழ்வாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு மாநாடு நிறைவடைந்தது.
சிறப்பான ஏற்பாடுகளுடன், உற்சாகத்துடன் இம்மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி மாவட்டம்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram