31.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
30-03-2025, ஞாயிறு அன்று கோவை மக்கள் அதிகாரத்தின் 2-வது மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மாநாட்டுக்கு தோழர் சங்கர் தலைமை தாங்கினார். இம்மாவட்டத்திலுள்ள மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிகாரத்தின் கொடியை தோழர் ஆறுச்சாமி ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி மாநாடு தொடங்கப்பட்டது.
புதிய கொள்கை அறிக்கை குறித்து தலைமை குழு உறுப்பினர் தோழர் ரவி விளக்கினார். அதன் பிறகு அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று, இறுதியாக கொள்கை அறிக்கை குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடுத்ததாக, தோழர் மாறன் அவர்கள் அமைப்பு விதிகள், பொறுப்பாளரின் கடமைகள், உறுப்பினர் கடமைகள் குறித்து விளக்கினார். பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அமைப்பின் மூன்று ஆண்டு அறிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகள் விவாதிக்கப்பட்டது. அதன் மீதான தீர்மானங்கள் விளக்கம் கொடுத்து ஏற்றுகொள்ளபட்டது.
அடுத்ததாக, மாவட்ட அளவில் உள்ள பிரச்சினைகள், மக்கள் அதிகாரம் வினையாற்றிய, வினையாற்ற வேண்டிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களாக வாசிக்கப்பட்டது. அதை அனைத்து உறுப்பினர்களும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
அடுத்ததாக, கோவை மாவட்ட பகுதிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
மக்கள் அதிகாரத்தின் கோவை மாவட்டச் செயலாளராக தோழர் ராஜன், இணைச் செயலாளராக தோழர் மாறன், பொருளாளராக தோழர் குமார் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களுக்கு ஆதரவாளர் கணேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும் போது “மக்கள் அதிகாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களை பார்க்கும் போது எங்களுக்கும் உந்துதலாக இருக்கிறது. தொடர்ந்து இயங்குவதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம்” என்றார்.
கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் ஏற்புரை வழங்கினார். அதன் பிறகு இணைச் செயலாளர் தோழர் மாறன் நன்றியுரையாற்றினார்.
இறுதியாக, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான உறுதிமொழி ஒவ்வொரு தோழரின் மனதிலும் பதிந்து மாநாடு முடிவடைந்தது.
மாநாட்டுத் தீர்மானங்கள்:
- சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஜி.எஸ்.டி. வரிக் கொள்ளையை, இந்த மாநாடு கண்டிப்பதோடு, ஜி.எஸ்.டி., வரி முறையை முழுமையாக ரத்து செய்ய அனைத்து சிறு, குறு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளிகள் இணைந்து போராட அறைகூவி அழைக்கிறது.
- குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் சூயஸ் நிறுவனத்தின் உரிமைத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; குடிநீரை அரசே வழங்க வேண்டும்.
- கார்ப்பரேட் சாமியாரின் ஈஷா யோகா மையமானது விவசாய நிலங்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாடும் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். மையத்தை உடனடியாக மூட வேண்டுமென இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- திருப்பூர், கோவை பகுதியில் மின்கட்டண உயர்வு, மூலப்பொருள் விலையேற்றம், உற்பத்தி செய்யும் துணிகளுக்கு குறைவான கொள்முதல் விலை போன்றவற்றை எதிர்த்து தொடர்ந்து போராடும் நெசவாளர்கள் போராட்டத்தை மாநாடு ஆதரிப்பதோடு, மக்கள் அதிகாரம் போராட்டத்திற்கு துணை நிற்க்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.
- திருப்பூர், பல்லடம் அருகே உள்ள வாலிபாளையம் பகுதியில் அமையவுள்ள டயப்பர் தொழிற்சாலைக்கு எதிராக தொடர்ந்து போராடும் அப்பகுதி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, இந்த தொழிற்சாலைக்கு வழங்கிய அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலை உள்ளிட்ட கொங்குமண்டல ஆதிக்க சாதியினரின் தாக்குதல்களை மாநாடு கண்டிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவி வருவதை எச்சரிப்பதோடு, அதற்கெதிராக போராட்டக் களத்தை கட்டியமைக்க வலியுறுத்துகிறது. சாதிய தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த உடனடியாக சாதிய சங்கங்களை தடை செய்ய வேண்டும்.
- நீலகிரி மலை பகுதியில் சொகுசு விடுதிகள், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் மனிதர்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிக்கிறது. மேலும், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக புதிய கட்டிடங்கள் கட்டுவதை கட்டுபடுத்த வேண்டும். மேலும், மலைப்பகுதிகளில் சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டுமென இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
- மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள யு.பி.எல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் அருகில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. காற்று மாசுபட்டை குறைப்பதாக வெற்று வாக்குறுதியை மட்டும் நிர்வாகம் கொடுத்து வருகிறது. உடனடியாக காற்று மாசுபட்டை குறைக்க வேண்டும். இல்லை என்றால் ஆலையை இழுத்து மூட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
- திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்கத்திற்காக சுற்றியுள்ள ஊராட்சிகளான பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அடியனூர்த்து, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இதேபோன்று, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட பகுதிகளிலும் மாநகராட்சி, நகராட்சி விரிவாக்க பணிகளை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டத்திற்கு இம்மாநாடு ஆதரவு தெரிவிப்பதோடு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக விரிவாக்கம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
- 2019 டிசம்பரில் மேட்டுப்பாளையத்தில், நடூரில் உள்ள ஆதி திராவிடர் காலனியில், சுமார் 25 அடி உயரமுள்ள “தீண்டாமை சுவர்” இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தலித் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த தொடர்ச்சியாக அனுமதி மறுக்கும் தமிழ்நாடு போலீசை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
- வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை விரட்டும் நடவடிக்கையை கண்டிப்பதோடு, சுற்றுச்சுழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதை கைவிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- கோவை பகுதியில் இஸ்லாமியர் வழிபாட்டு தளங்களின் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து மதக்கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி அமைப்பை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு மதக் கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி அமைப்பை தடை செய் வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram