இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்

நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச  கும்பலின் நோக்கமாகும்.

பாசிச பா.ஜ.க. கும்பலானது வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு போன்ற தேர்தல் முறைகளைப் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான கருவிகளாக மாற்றியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையை அதன் அடுத்த இலக்கில் வைத்துள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டம்; தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” கூட்டம்; தமிழ்நாட்டு எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை தொகுதி மறுவரையறை விவகாரத்தை இந்திய அளவில் விவாதப் பொருளாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிநிரல் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், இதனை மென்மேலும் தீவிரப்படுத்திவிடக் கூடாது என்ற பீதியில் ஆரம்பத்திலிருந்தே இவ்விவகாரத்தைத் தற்காப்பு நிலையிலிருந்தே அணுகி வருகிறது பா.ஜ.க. கும்பல்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தென்மாநில ஆட்சியாளர்கள், கட்சியினரைக் கொண்டு நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம்

தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

தொகுதி மறுவரையறை என்பது குறிப்பிட்ட காலத்தில் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் நடவடிக்கையாகும்.

இந்நடவடிக்கையானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்படும் “ஒரு வாக்கு ஒரு மதிப்பு” என்ற கருதுகோளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதாவது, இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரைச் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் (60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு இது பொருந்தாது); அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம எண்ணிக்கையிலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இவற்றின் மூலமே இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் சமமான மதிப்பை வழங்க முடியும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. இதனை ஈடேற்றும் வகையிலேயே தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அந்தவகையில், ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும். 

1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் இதுவரை நான்குமுறை எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று முறையும் அதற்கு முன்பு கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. 1971-இல் கணக்கிடப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் 1973-இல் நிர்ணயிக்கப்பட்ட 543 மக்களவை தொகுதிகளே தற்போதுவரை நீடிக்கின்றன.

ஏனெனில், அச்சமயத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் தொகுதி மறுவரையறையால் அது பாதிக்கப்படக் கூடாது அல்லது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திவரும் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்ற சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக, 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அரசாங்கமானது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையிலும் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது.

இதே காரணத்தின் பேரில், 2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசாங்கமும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையில் மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையைத் தள்ளிவைத்தது. இருப்பினும், 2002-இல் அமைக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படாமல் அதன் எல்லைகள் மட்டும் மறுநிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகும் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சமநிலையை அடையவில்லை. 2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 1971-இல் 4.11 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகையானது 2023-இல் 7.68 கோடியாக அதிகரித்திருக்கிறது; ஆனால், 8.38 கோடியாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் மக்கள்தொகை 23.56 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்கள், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கும் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இந்தி வளைய மாநிலங்களுக்கும் இடையில் மக்கள்தொகை வளர்ச்சியில் பாரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போது தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதானது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை வஞ்சிப்பதாகவே அமையும். சான்றாக, தற்போதைய 543 தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு எட்டு மக்களவை தொகுதிகளை இழக்கும்; தொகுதிகளின் எண்ணிக்கையை 848-ஆக உயர்த்தி மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய விகிதத்தின்படி தமிழ்நாட்டிற்குக் கிடைக்கப்பட வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், மோடி அரசோ தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் தன்னை எதிர்க்கும் மாநிலங்களை வஞ்சித்து ஒடுக்குவதில் தீவிரமாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, 543 பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவையில் 888 இருக்கைகளும், 250 பிரதிநிதிகளைக் கொண்ட மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தது பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக திட்டத்தை அம்பலப்படுத்தியது.

ஏற்கெனவே, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அளவுகோலில் 1971 மக்கள்தொகைக்குப் பதிலாக  2011 மக்கள்தொகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சித்துவரும் மோடி அரசானது, தொகுதி மறுவரையறையிலும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு அடிபணியாத மாநிலங்களை ஒடுக்கப் பார்க்கிறது. இதன் காரணமாகவே, 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

அசாமின் அனுபவம் உணர்த்துவதென்ன?

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மார்ச் 5 அன்று தமிழ்நாடு தி.மு.க அரசால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை 2056-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்து சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 7.18 என்ற விகிதத்திலேயே தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில், தென்மாநில எம்.பி-க்களை கொண்ட “கூட்டு நடவடிக்கைக் குழு” (JAC)-விற்கான கூட்டம் மார்ச் 22 அன்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறைக்கு முன்னர் அனைத்து மாநிலங்களிடமுள்ள கட்சிகள், ஆளும் அரசுகள், பிற அமைப்பினருடன் ஜனநாயகமாக விவாதிக்க வேண்டும்; 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையைத் தொடர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு ஜனநாயக சக்திகளும் பத்திரிகையாளர்களும் கூட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டும் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், அல்லது எதிர்க்கட்சிகள் கோரும் விழுக்காட்டின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்தினாலும், அது பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமையும். இதற்கு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஜம்மு & காஷ்மீரிலும், அசாமிலும் மேற்கொள்ளப்பட்ட சட்டமன்றத் தொகுதி மறுவரையறையே சாட்சி.

ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட பின்னர், 2022-இல் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட்டு, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 83-லிருந்து 90-ஆக உயர்த்தப்பட்டது. அப்போது இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஒரு தொகுதி மட்டுமே அதிகரிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரைக் காட்டிலும் குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட, இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய ஜம்முவிற்கு ஆறு தொகுதிகள் அதிகரிக்கப்பட்டன. 2024 செப்டம்பரில் நடத்தப்பட்ட ஜம்மு&காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்முவில் புதியதாக இணைக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் ஐந்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 2023-இல் அசாமில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது, 14 நாடாளுமன்ற மற்றும் 126 சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், தொகுதிகளின் எல்லைகள் பா.ஜ.க. கும்பலுக்குச் சாதகமான வகையில் மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள 10 தொகுதிகள் உடைக்கப்பட்டு அவை இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன; பல தொகுதிகள் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாகவும் இருக்கும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டன; இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகள் பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான தொகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.

மேலும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பார்பேட்டாவில் ஆறு முதல் ஏழு தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுவந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அவற்றில் பெரும்பான்மை தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இவ்வாறு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பையும் இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்தும் வகையில், வாக்குவங்கியைக் காவிமயமாக்கி தொகுதி மறுவரையறை மேற்கொண்டிருப்பதன் மூலம் இனி அசாமில் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க-வால் எளிமையாக வெற்றிபெற முடியும் என்ற நிலைமையைப் பாசிச கும்பல் உருவாக்கியுள்ளது. அதாவது, தொகுதி மறுவரையறை என்பது பாசிச  கும்பல் தனக்கான மக்கள் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கேற்ப தொகுதிகளைச் செப்பனிடும் பணியே ஆகும்.

பாசிசமயமாகும் தொகுதிகள்

நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச  கும்பலின் நோக்கமாகும்.

ஆகவே, தொகுதி மறுவரையறையால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதைக் கடந்து தொகுதிகள் பாசிசமயப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பா.ஜ.க. பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளால் வெற்றிபெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறையின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் அவற்றிடமிருந்து பறிக்கப்படும். இது இந்தியாவில் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பாசிச பா.ஜ.க. கும்பலின் கனவை நனவாக்குவதற்கான துலக்கமான நடவடிக்கையாகும்.

ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகளின் செல்லப்பிராணியாக மாற்றிக்கொண்டு, பல்வேறு பாசிச சட்டத்திருத்தங்கள், தேர்தல் முறைகேடுகளை அமல்படுத்துவதன் மூலம், சொல்லிக்கொள்ளப்படுகின்ற ‘தேர்தல் ஜனநாயகத்தை’ ஒழித்துக்கட்டி பா.ஜ.க. மட்டுமே வெற்றிபெறும் வகையில் தேர்தலை முற்றிலுமாக பாசிசமயமாக்கி வருகிறது. இதன் உச்சக்கட்ட நடவடிக்கையாகவே ஒரே நாடு ஒரே தேர்தலையும் தொகுதிகள் மறுவரையறையையும் பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ளது. எனவே தொகுதி மறுவரையறை என்பது பாசிச கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான அடிக்கட்டுமான நடவடிக்கையாகும்.

மேலும், பாசிச பா.ஜ.க. கும்பல் தொகுதி மறுவரையறை செய்வதானது தென்மாநிலங்களுக்குரிய பிரச்சினை மட்டுமல்ல. இது இந்தியா முழுவதுமுள்ள பலதரப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்குகின்ற பாசிச நடவடிக்கையாகும்.

அதேபோல், வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புல்டோசர் ராஜ்ஜியம், மசூதிகள் அபகரிப்பு போன்றவற்றின் மூலம் இஸ்லாமிய மக்களின் பொருளாதாரத்தை சூறையாடிவருகிறது பா.ஜ.க. கும்பல். தற்போது, தொகுதி மறுவரையறையின் மூலம் இஸ்லாமிய தொகுதிகள் என்ற ஒன்றையே இல்லாமல் செய்து அதன்மூலம் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்துவது என்ற நடைமுறையை ஒழித்துக்கட்ட எத்தனிக்கிறது. இதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்கு மிச்ச மீதமிருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் ஒழித்துக்கட்டி அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கிறது.

தற்போது, இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கும் பா.ஜ.க. கும்பலானது பிற்காலத்தில் அவற்றையும் ஒழித்துக்கட்டி அம்மக்களையும் இந்துராஷ்டிரத்தின் இரண்டாந்தர குடிமக்களாக்கும். இந்த ஒடுக்குமுறையானது கிறித்தவ சிறுபான்மை மக்களுக்கும் பாசிச கும்பலுக்கு அடிபணியாத பிரிவினருக்கும் நடந்தேறும்.

அதேபோல், தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்படுவதென்பது நேரடியாக அம்மாநிலங்களில் வாழும் தேசிய இன மக்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும்.

ஆனால், இதுகுறித்தெல்லாம் வாய்திறக்காத எதிர்க்கட்சிகள், தங்களுக்கு ஜனநாயகம் வழங்கியும் தாங்கள் பாதிக்கப்படாத வகையிலும் தொகுதி மறுவரையறையை நடத்த வேண்டுமென பா.ஜ.க-விடம் கோரிக்கை வைக்கின்றன. இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாக அமையக்கூடிய தொகுதி மறுவரையறையைப் பாசிச பா.ஜ.க. நடத்தக்கூடாது என்று அறைகூவி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக, அப்பட்டமாக பா.ஜ.க. கும்பலின் பாசிச சதித்திட்டத்திற்கு மக்களைப் பலியாக்குகிறார்கள்.

தேசிய இனங்களின் கூட்டாட்சி குடியரசுக்காகப் போராடுவோம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் தற்போது பாசிச கும்பல் இதனை நடத்துவதில் உள்ள அபாயம் குறித்துப் பேசுவதுடன் நிறுத்திகொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் 1947-இல் அதிகாரமாற்றம் நடந்ததிலிருந்து இதுநாள் வரையிலும் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைகளும் அதன்மூலம் வழங்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவே இருந்து வந்துள்ளது என்பதே உண்மை.

ஏனெனில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமானது, மக்கள்தொகையை மட்டுமே சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான ஒற்றை அளவுகோலாக நிர்ணயித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு நாட்டில் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அளவுகோளாக மக்கள்தொகையை மட்டுமே தீர்மானிப்பதென்பது அப்பட்டமாகச் சிறிய தேசிய இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் அதன்மூலம் அந்த தேசிய இனங்களின் குரல்வளையை ஒடுக்கும் செயலாகும். அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில மக்கள் இத்தகைய ஒடுக்குமுறையை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர். அதனால்தான், இந்தியாவைத் தேசிய இனங்களின் சிறைச்சாலை என்கிறார்கள்.

இதுகுறித்து நாம் பேசுகையில்,  நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள “இந்தியா முழுவதுமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை சம எண்ணிக்கையிலான மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” என்ற விதியிலிருந்து 60 லட்சத்திற்குக் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டலாம். ஆனால், இவையெல்லாம் அம்மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை மறைப்பதற்கும் அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகும். மாறாக, அளவு ஏற்றத்தாழ்வின்றி அனைத்து தேசிய இனங்களும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம், மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூட அனைத்து மாநில மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடையாது. அதிலும் மக்கள்தொகை எண்ணிக்கையையே அளவுகோலாக நிர்ணயித்து பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களுக்கு தலா ஒரு சீட்டு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் எத்துணை ‘மேன்மை’யானது என்பதைப் பறைசாற்றுகிறது.

ஏனெனில், இந்தியா என்பது தேசிய இனங்களுக்கும் மாநிலங்களுக்கும் அதிகாரம் வழங்குகின்ற உண்மையான கூட்டாட்சி நாடல்ல. இந்தியா ஒரு அரை-கூட்டாட்சி நாடு என்பதே அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமாகும். பாசிச  கும்பல் அதிகாரத்திற்கு வந்தப் பிறகு தேசிய இனங்களுக்கான பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் படிப்படியாகச் சிதைத்து வருகிறது. இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் தேசிய இனங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் படிப்படியாகப் பறித்து மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கு கப்பம் கட்டும் காலனிகளாக மாற்றி வருகிறது.

ஆகவே, இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் நின்றுக்கொண்டு தேசிய இனங்களின் உரிமைகளை நம்மால் நிலைநாட்டிவிட முடியாது.

மாறாக, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தையும் உண்மையான அதிகாரத்தையும், பிரிந்து போகும் அதிகாரம் கொண்ட தேசிய சுயநிர்ணய உரிமையையும் வழங்கக்கூடிய தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசாக விளங்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசிற்காக போராடுவதன் மூலமே தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க