19.04.2025

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை;
மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!

போராட்டங்களை வலுப்படுத்துவோம்!
வக்ஃப் சட்டத் திருத்தத்தைத் தூக்கியெறிவோம்!

பத்திரிகை செய்தி

க்ஃப் (திருத்த மற்றும் ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) சட்டம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வந்தது. முஸ்லீம் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கி தனிமைப்படுத்தும் பாசிசக் கும்பலின் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களும், இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இன்னொரு பக்கம் இச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, ”இந்தியா” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லீம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில், ஏப்ரல் 16, 17 ஆகிய நாட்களில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜராகினர். ஒன்றிய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

விசாரணையின் இறுதியில், வக்ஃப் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு  இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இத்தீர்ப்பை ஜனநாயக சக்திகள் பலரும் வரவேற்றுள்ளனர். அதேசமயம் உச்சநீதிமன்றம் சாட்டையைச் சுழற்றியிருக்கிறது என்ற கோணத்தில் கருத்துகளை முன்வைப்பதையும் பார்க்க முடிகிறது.

உண்மையில் இடைக்காலத் தடை விதிப்பதற்கு முதன்மையான காரணம், நாடு முழுவதும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் தாக்கம்தான்.

அதேசமயம், இத்தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் பாசிச கும்பலுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்கிறது. பாசிச பி.ஜே.பி அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் “சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் இருப்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். அதேபோல் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று சொல்வதும் சரிதான், எல்லா நேரத்திலும் சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்தி வைப்பதில்லை” என்று பாசிச கும்பலுக்குச் சாதகமான குரலில் நீதிபதிகள் பேசியதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

வழக்கு முடியும் வரை திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் அமலுக்கு வராது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றாலும், மேற்கொண்டு கூறிய கருத்துகள் சிக்கலுக்குரியவையாகவே இருக்கின்றன.

மே 5 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை குறித்த மனுதாரர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேசமயம் எதிர்த்தரப்பு மனுதாரர்கள் 73 பேரில் 5 மனுதாரர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவையாகக் கருதப்படும் என்றும் கூறியுள்ளனர். இவையெல்லாம் வழக்கைப் பலவீனப்படுத்தும் வகையில் இருப்பதாகவே தோன்றுகிறது.

மேலும்  கடந்த காலங்களில் குஜராத் இனப்படுகொலை, பாபர் மசூதி உள்ளிட்டு பல்வேறு வழக்குகளில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், பாசிச கும்பலுக்கு ஆதரவாகவும் பல்வேறு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறைப்பட்டிருக்கும் தோழர்களைப் பிணையில் விடுவிக்க சட்டப்பூர்வ வாய்ப்புகள் இருந்தும், அதைக் கண்டுகொள்ளாமல் உச்சநீதிமன்றம் கள்ள மௌனத்தில் இருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது.

சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும். அவ்வழியில் பாசிச எதிர்ப்பு சக்திகள் தமது செயல்பாடுகளை முன்னகர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க