புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை!

“இனப்படுகொலையை சக்திவாய்ந்த கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ததே அவரது குற்றம். அது ஒரு இனப்படுகொலை ஆட்சியால் அனுமதிக்க முடியாதது. தொடர்ந்து அமைதியாக இருப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் வெட்கப்பட வேண்டும்”

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைச் செய்திகளாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் இஸ்ரேலால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது 25 வயதான புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (Fatima Hassouna) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் படுகொலை செய்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களை பத்திரிகையாளர்கள் தங்களின் உயிர்களை பணையம் வைத்து செய்திகளாக வெளியிடுகின்றனர். அதன் மூலமே காசாவிற்குள் நடக்கும் கொடூரங்களை நம்மால் அறிய முடிகிறது. பத்திரிகையாளர்களின் பணியானது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

காசாவைச் சேர்ந்த 25 வயதான இளம் புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா. இவர் காசாவில் இஸ்ரேல் அரசு நடத்தி வரும் மிருகத்தனமான தாக்குதல்களையும், அதன் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற துயரங்களையும் தன்னுடைய புகைப்படங்கள் மூலமாக வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 16 அன்று, வடக்கு காசாவில் உள்ள அவரது வீட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதில் அவரும் அவரது கர்ப்பிணி சகோதரி உட்பட குடும்பத்தைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். அவருக்கு சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஹசௌனா இஸ்ரேலால் கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு ஆவணப்படம் பிரெஞ்சு சுயாதீன திரைப்பட விழா ஒன்றில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


படிக்க: இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை


ஈரானிய இயக்குநர் செபிதே ஃபார்சி (Sepideh Farsi) தயாரித்த “உங்கள் ஆன்மாவை உங்கள் கையில் வைத்து நடந்து செல்லுங்கள்” (Put Your Soul on Your Hand and Walk) என்ற திரைப்படம், ஹசௌனாவிற்கும் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் இடையில் படமாக்கப்பட்ட வீடியோ உரையாடல்கள் மூலம் காசாவின் துயரங்களையும் பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்க்கையையும் வெளி உலகிற்குச் சொல்கிறது.

“காசாவில் ஹசௌனா என் கண்களாக மாறினார்… துடிப்பானவராகவும் உயிரோட்ட மிக்கவராகவும் இருந்தார். அவளுடைய சிரிப்பு, கண்ணீர், நம்பிக்கை மற்றும் மனச்சோர்வை நான் படமாக்கினேன்,” என்ற ஃபார்ஸி “சில மணி நேரங்களுக்கு முன்பு நான் அவளிடம் பேசி, அந்தப் படம் கேன்ஸ்-இல் இருப்பதாகவும், அவளை அங்கு அழைக்கவும் செய்தேன்” என்றும் தன்னுடைய வலிகளைப் பகிர்ந்துள்ளார்.

ஹசௌனா படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காசா வெளியிட்ட அறிவிப்பு பதிவில் “ஃபாத்திமா ஹசௌனா ஒரு திறமையான கலைஞர், புகைப்படக் கலைஞர் மற்றும் பத்திரிகையாளர். சக்திவாய்ந்த படங்கள் மற்றும் கதைசொல்லலுக்குப் பெயர் பெற்ற அவர் காசாவைச் சேர்ந்த துணிச்சலான குரல். இன்று, இஸ்ரேல் ஃபாத்திமாவையும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பத்து பேரையும் கொன்றுள்ளது. காசாவின் உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்னவரை மௌனமாக்கியுள்ளது,” என்று உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் “இனப்படுகொலையை சக்திவாய்ந்த கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ததே அவரது குற்றம். அது ஒரு இனப்படுகொலை ஆட்சியால் அனுமதிக்க முடியாதது. தொடர்ந்து அமைதியாக இருப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் (United Nations Special Rapporteur on the Occupied Palestinian Territories) பிரான்செஸ்கா பி. அல்பானீஸ் (Francesca P. Albanese) தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹசௌனா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் “நான் வெறும் செய்தியாகவோ அல்லது ஒரு குழுவில் ஒரு எண்ணாகவோ இருக்க விரும்பவில்லை; உலகம் கேட்கும் ஒரு மரணத்தைக் காலத்தால் நிலைத்திருக்கும் ஒரு தாக்கத்தை, காலத்திலோ இடத்திலோ புதைக்க முடியாத ஒரு காலமற்ற பிம்பத்தை நான் விரும்புகிறேன்” என்று உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டிருந்ததைப் பலரும் தற்போது நினைவுகூர்ந்து வருகின்றனர்.

பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்து தன்னுடைய நரவேட்டையை மறைப்பதற்கு இஸ்ரேல் முயன்று வருகிறது. ஆனால், இழப்புகளை எல்லாம் மீறி ”புதையுண்ட மண்ணிலிருந்து எழும் விதை போல” பாலஸ்தீனம் எழுந்து நிற்கும். அதற்கு உலகம் முழுவதும் நடைபெறுகின்ற இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயக சக்திகளாகிய நம் முன்னே உள்ள முக்கிய கடமையாகும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க