காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ”தைனிக் ஜாக்ரன்” பத்திரிகை நிரூபர் மீது பாசிச கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் ஒரு வெளிநாட்டுப் பயணி உள்பட 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இக்கொடூர தாக்குதல் பாகிஸ்தானின் லஷ்கர்- இ- தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டதாக மோடி அரசு கூறுகின்றது.
பாதுகாப்பு குறைபாடுகளை மறைத்து தங்களை தேசபக்தர்கள் என்று மக்களை நம்ப வைப்பதற்குப் பாசிச கும்பல் தேசவெறி ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதற்காக பாகிஸ்தானுடனான இந்திய எல்லையை மூடியது; பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது; இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க கும்பல் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று கதுவா மாவட்டத்தில் கலிபாரி சவுக் (Kalibari Chowk) பகுதியில் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தியது. அதனைப் பதிவு செய்வதற்காக டைனிக் ஜாக்ரன் (Dainik Jagran) பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் ராகேஷ் சர்மா பஹல்காம் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கே பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹிமான்ஷூ சர்மாவிடம் (Himanshu Sharma) ”பாகிஸ்தானின் உருவ பொம்மைகளை எப்போது வரை எரித்துக் கொண்டே இருப்பீர்கள்? இதுவும் பாதுகாப்பு குறைபாடுதான்” என்று பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு “இந்த பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானின் மொழியைப் பேசுகிறார்கள். அவர்கள் தேச பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர்” என்று பத்திரிகையாளர்களை ஹிமான்ஷூ இழிவாகப் பேசியுள்ளார்.
படிக்க: காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?
இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் பா.ஜ.க கும்பல் ராகேஷ் சர்மா மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலின்போது பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் தேவிந்தர் மன்யால், ராஜீவ் ஜஸ்ரோட்டியா, பாரத் பூஷண் ஆகியோரும் ஹிமான்ஷூ உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மூத்த பத்திரிகையாளர்கள் குழு கதுவா மாவட்ட போலீஸ் அதிகாரி ஷோபித் சக்சேனாவிடம் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்துப் புகார் அளித்துள்ளனர்.
மேலும், ஏப்ரல் 24 அன்று கதுவா மாவட்டத்தின் ஷஹீதி செளக் (Shaheedi chowk) மற்றும் ஜம்முவில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் (Press Club) பத்திரிகையாளர் ராகேஷ் சர்மா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பா.ஜ.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

பாசிச கும்பல் பாதுகாப்பு குறைபாட்டை மறைத்துவிட்டு “பாகிஸ்தானைப் பழிவாங்க வேண்டும்” என்று தேசவெறியைக் கிளப்பி வருகிறது. பெரும்பாலான மைய நீரோட்ட ஊடகங்களும் பாதுகாப்பு குறைபாடு குறித்துக் கேள்வி எழுப்பாமல் பா.ஜ.க-வின் ஊதுகுழல்களாகச் செயல்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் பத்திரிகையாளர் ராகேஷ் சர்மாவின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram