பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க

“பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது." - நேஹா சிங் ரத்தோர்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து கருத்து பதிவிட்ட போஜ்புரி நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோர் (Neha Singh Rathore) மற்றும் லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மத்ரி ககோட்டி (Madri Kakoti) மீது உத்தரப் பிரதேச போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிச கும்பல் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அம்மக்களின் வீடுகளை இடிப்பது போன்ற மதவெறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்புகின்ற சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்குவது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்து ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று பீகாரைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி நேஹா சிங் ரத்தோர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் அரசியல் நடத்துவதாகப் பதிவிட்டுள்ளார். இவர் தன்னுடைய பாடல்கள் மூலம் அரசியல் நையாண்டியுடன் உ.பி அரசு மற்றும் பாசிச கும்பலின் மககள்விரோத நடவடிக்கைகளை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் பா.ஜ.க அரசு “புல்வாமா தாக்குதலின் பெயரில் வாக்குகளைச் சேகரிக்கிறது; பஹல்காம் தாக்குதலின் போதும் இதுவே மீண்டும் நிகழும்” என்று பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 26 அன்று பதிவிட்ட மற்றொரு பதிவில், “பஹல்காம் பிரச்சினையை மையமாகக் கொண்டு பீகார் தேர்தல்கள் நடத்தப்பட்டால், பீகாரின் சொந்த பிரச்சினைகள் ஓரங்கட்டப்படும் என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறுவேன்” என்று பாசிச கும்பலின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவிஞர் அபய் பிரதாப் சிங் என்பவர், “இந்த சூழ்நிலையில், பாடகியும் கவிஞருமான நேஹா சிங் ரத்தோர், தனது டிவிட்டர் (இப்போது X) முகவரியான @nehafolksinger -ஐ பயன்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை மோசமாகப் பாதிக்கும் சில ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிட்டார். மதத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகத் தூண்டுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டார்” என்று ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


படிக்க: காஷ்மீர்: முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்த அதிகாரிகள்


அதனடிப்படையில் போலீசார் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்ததாக நேஹா சிங் ரத்தோர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

அதில் “இந்தியாவுக்கு எதிராக நேஹா சிங் ரத்தோரின் பதிவுகள் பாகிஸ்தானில் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தானில் உள்ள மக்கள் நேஹா சிங் ரத்தோரை பாராட்டி வருகின்றனர். நேஹா சிங் ரத்தோரின் அனைத்து கருத்துகளையும் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. நமது எதிரி நாடு பாரதத்திற்கு எதிராகக் கேள்விகளை எழுப்புகிறது. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், இந்தியாவுக்கு எதிராக நேஹா சிங் ரத்தோரின் தொடர்ச்சியான பதிவுகள் கவிஞர்கள் அனைவரினது மற்றும் நாட்டின் மரியாதையைப் பறிக்கின்றன”என்று போலீசார் பதிவு செய்துள்ளனர்.

பாசிச கும்பலின் ஒடுக்குமுறைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேஹா சிங் ரத்தோர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர்? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது. இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமா? உங்களிடம் பலம் இருந்தால், பயங்கரவாதிகளின் தலைகளை எடுங்கள். உங்கள் தோல்விகளுக்கு என்னைக் குறை கூற வேண்டிய அவசியமில்லை. ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது போலவே, ஒவ்வொரு கேள்வியும் முக்கியமானது. நான் கேள்விகள் கேட்பதில் அரசாங்கத்திற்கு ஒரு சிக்கல் உள்ளது, அதனால்தான் நான் கேள்விகள் கேட்பதைத் தடுக்க விரும்புகிறது,” என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார். தற்போது வரை பாசிச கும்பல் எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், லக்னோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான ககோட்டி பஹல்காம் தாக்குதல் குறித்து சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் நாடு எவ்வளவு பிளவுபட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, “கலவரங்கள் எழுவதற்கு ஒரு நொடி கூட ஆகாது” என்று இந்தியில் கூறுகிறார். காஷ்மீருக்கு வெளியே வாழும் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தன்னுடைய கருத்தினை பதிவிட்டுள்ளார். அவர் மீதும் அமைதியைச் சீர்குலைத்தல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டில் உ.பி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

பாசிச கும்பல் கருத்துச் சுதந்திரத்தை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கவிஞர்கள், பேராசிரியர்கள் மீதான பாசிச கும்பலின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்ப வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க