மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்
1877ல் மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிரப் போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.
இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்க்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட் டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.
ஏனெனில், இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875ம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிரப் போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.
அமெரிக்கத் தொழிற்துறை மற்றும் உள்நாட்டுச் சந்தை 1880-90க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லாத் திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலைநாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியைத் தந்தது.
கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. ‘நைட்ஸ் ஆப் லேபர்’ என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களைத் திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலைநாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தைக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அனைத்துத் தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனைப் பெற முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்திருந்தது.
1885ல் கூட்டமைப்பு மாநாடு, அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலைநிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரின் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பு உயர்ந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலைநிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பௌடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். 8 மணி நேர வேலைநாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக்கொண்டது. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்துகொண்டிருந்தது.
தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. முந்திய ஆண்டைக் காட்டிலும் 1885-86ல் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 1886 மே முதல் நாளுக்கான வேலைநிறுத்தத் தயாரிப்புகளோடு 1885 ஆம் ஆண்டு எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-84ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000. ஆனால் 1885ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது. 1885ல் நடைபெற்ற வேலைநிறுத்தங்களைப் போல் இரு மடங்கு 1886ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 1885ல் 2467 ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886ல் 11562 ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலையில் இருந்த போதிலும் 8 மணி நேர வேலைநாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.
இவ்வேலைநிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்குதான் வேலைநிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நியூ யார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலைநிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவில் இருந்தது. இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள். மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவிய அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றி கண்டதாகச் சொல்லப்படுகிறது. மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலைநாளை அடைய முடியா விட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.
சிக்காகோ வேலை நிறுத்தமும் ‘ஹே’ சந்தையும்
சிக்காகோவில் மே முதல் நாள் வேலைநிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து போதுமான தெளிவு இல்லாவிட்டாலும் அது ஒரு போராட்ட இயக்கமாக விளங்கியது. தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை விருத்தி செய்யும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க வைப்பதாயும், அவர்களின் போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்துவதாகவும் அவ்வியக்கம் விளங்கியது.
போர்க்குணமுள்ள தொழிலாளர் குழுக்களால் சிக்காகோவின் வேலைநிறுத்தம் பெருமளவுக்குப் பிரகாசித்தது. வேலை நிறுத்தத்திற்கு வெகுமுன்பே அதற்கான தயாரிப்புகளைச் செய்ய 8 மணி நேர சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த 8 மணி நேர சங்கம் ‘நைட்ஸ் ஆப் லேபர்’ சோஷலிஸ்ட் தொழிலாளர் கட்சி (அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் அரசியல் சோஷலிஸ்ட் கட்சி) போன்ற ஸ்தாபனங்களில் இணைந்துள்ள ஐக்கிய முன்னணி ஸ்தாபனமாக விளங்கியது. இந்த 8 மணி நேர சங்கத்துக்கு இடதுசாரி தொழிற்சங்கங்களைக் கொண்ட மத்திய தொழிற்சங்கமும் முழு ஆதரவு அளித்தது. மே முதல் தினத்துக்கு முந்திய நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய தொழிற்சங்கம் ஏற்பாடு செய்த தொழிலாளர்களைத் திரட்டும் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது. எட்டு மணி நேர வேலைநாள் கோரிக்கையின் முக்கியத்துவமும், வேலை நிறுத்தத்தின் பரந்த மற்றும் தீவிரத் தன்மையும் இந்த இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அரசியல் முக்கியத்துவத்தைத் தந்தது. அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்த முக்கியத்துவம் மேலும் தீவிரமானது. 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.
அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்க்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் என கனவு கண்டார்கள். மே 3, 4 தேதிகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் வைக்கோல் சந்தை (ஹே சந்தை) விவகாரம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிக்கு வழி வகுத்தன. மே 3ம் நாள் வேலைநிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை எதிர்த்து மே 4 ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் அமைதியாக நடந்தது. போலீஸ் மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கும்போது கூட்டம் தள்ளிவைக்கப்பட இருந்தது. கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லபட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களைச் சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதுதான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. நாடெங்கிலுமுள்ள முதலாளிகளும் சிக்காகோ நகர முதலாளிகளுக்கு ஆதரவு தந்தனர்.
1886ஆம் ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது. இதன் மூலம் வேலைநிறுத்த இயக்கத்தின்போது இழந்த தங்கள் பழைய நிலையை மீண்டும் அடைய அந்த முதலாளிகள் தீர்மானித்தார்.
சிக்காகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு 1888ல் செயின்ட் லூயிஸில் கூட்டமைப்பு கூடியது. (தற்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்று அறியப்படுகிறது). அப்போது 8 மணி நேர இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கத் தீர்மானித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வர்க்க அரசியல் பிரச்சினையை அடிப்படையாக வைத்து, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்திய மே முதல் நாளையே மீண்டும் 8 மணி நேர இயக்கத்தைத் துவக்குவதற்கான நாளாக அறிவித்தார்கள். 1889 ஆம் ஆண்டு சாமுவேல் கோம்பர்ஸ் தலைமையில் நடந்த அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு வேலைநிறுத்த இயக்கத்தை முறைப்படுத்துவதில் வெற்றிகண்டது. வலுவான முறையில் தயாரிப்புகளோடு விளங்கிய மரவேலைத் தொழிலாளர் சங்கம் முதலில் வேலைநிறுத்தத்தில் இறங்குவது என்றும் வெற்றி பெற்ற பின் மற்ற சங்கங்கள் இறங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram