பஹல்காம் தாக்குதல்: தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

தேசவெறி பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு தனது பாசிச சதித்திட்டங்களை அரங்கேற்ற துடிக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடி கும்பலின் தேசவெறி பிரச்சாரத்திற்கு பலியாகி அதன் ஊதுகுழலை போல கருத்து தெரிவித்து வருகின்றன.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, “நாங்கள் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரதமர் மோடி அரசாங்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பயங்கரவாத சூழலையும் அழித்துள்ளது” என்று கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற “ஜே&கே மற்றும் லடாக் த்ரூ தி ஏஜஸ்” (JK & Ladakh Through The Ages) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கொக்கரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால், சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தே வந்துள்ளன.

அத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டப் பிறகு, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிகப்படியான மக்கள் உயிரிழந்துள்ளது இந்த பஹல்காம் தாக்குதலில்தான்.

இத்தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் மற்றும் தாக்குதலைத் தடுக்க முயன்ற சையது ஆதில் ஹூசைன் என்ற காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த குதிரை சவாரிக்காரர் என மொத்தம் 26 பேர் பயங்கரவாதிகளால் ஈவிரக்கமின்றி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்த்து பாதிப்புக்குள்ளான மக்கள் அதிர்ச்சியிலிருந்தும் சோகத்திலிருந்தும் இன்னும் மீளவில்லை. திருமணமான ஒரு வாரத்திலேயே பெண் ஒருவர் தனது கணவனை இழந்திருப்பது, ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொல்லப்பட்டிருப்பது என இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் ஆறுதல்படுத்த முடியாதவை.

இத்தகைய கொடியத் தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆன போதிலும், இத்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது, எத்தனை பேர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் அரசு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மாறாக, ஊடகங்கள்தான் சந்தேகம் என்ற பெயரில் நொடிக்குநொடி பரப்பரப்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தாக்குதல் நடத்தியதற்கு “லக்‌ஷர்-இ-தொய்பா” பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான “தி ரெசிஸ்டென்ஸ் ப்ரண்ட்” என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது என்றும் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களில் ஒருவன் பாகிஸ்தானின் இராணுவப் பிரிவான எஸ்.எஸ்.ஜி-யைச் சேர்ந்தவன் என்று சந்தேகம் உள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி

இஸ்லாமிய வெறுப்பைக் கக்குவதற்காக நாக்கைத் தொங்கவிட்டு காத்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பலும், அதன் ஆதரவு ஊடகங்களும் பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கின.

பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் இந்துவா? முஸ்லீமா? என்று கேட்டும், ஆடைகளை அவிழ்த்து முஸ்லீம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டும், இந்துகளை மட்டும் படுகொலை செய்ததாக தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதன் உண்மைத்தன்மை சோதிக்கப்படும் முன்பே இச்செய்திகளை பரப்பி காவிக் கும்பல் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியது; காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் பயங்கரவாதத்திற்கு துணைபோவதாகப் பொய்யாக சித்தரித்தது. பா.ஜ.க-வை சேர்ந்த சுவேந்து அதிகாரி, இத்தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணிடம், அவருடைய கணவர் இந்து என்பதால் கொல்லப்பட்டார் என்று சொல்லக் கூறி மிரட்டும் காணொளிகள் வெளியாகி பாசிசக் கும்பலின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தின.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள்தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று சித்தரிக்கும் வகையிலான கருத்துகள், புகைப்படங்கள், காணொளிகளை காவிக் கும்பல் சமூக வலைத்தளங்களில் பரப்பியது. பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களில் “பாகிஸ்தான் வாழ்க” என்று முழக்கங்கள் எழுப்பப்படுவதாக காணொளிகளை திரித்து வெளியிட்டது. மேற்குவங்கத்தில் உள்ள பிதான் சந்திரா வேளாண் பல்கலைக்கழகத்தின் விளம்பர சுவரில் “நாய்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அனுமதியில்லை” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது. வட மாநிலங்களில் சில சாலைகளில் பாகிஸ்தான், வங்கதேசம், பாலஸ்தீன நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்டன. இதன் உச்சமாக, உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் இந்துமதவெறி போதை தலைக்கேறிய காவிக் குண்டர், இஸ்லாமிய இளைஞர் இருவரை சுட்டுக்கொன்ற கொடூரமும் அரங்கேறியது.

ஆனால், பஹல்காமில் தாக்குதலுக்குள்ளான மக்களை காஷ்மீரின் இஸ்லாமியர்கள் காப்பாற்றிய காணொளிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி காவிகளின் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தன. காயமடைந்த சிறுவனை பல கிலோமீட்டர் தொலைவிற்கு முதுகில் சுமந்து சென்று காப்பாற்றிய சஜ்ஜாத்தின் காணொளி; காஷ்மீர் மக்கள்தான் தங்களை பாதுகாத்தார்கள் என்பதை காஷ்மீரில் இருந்து திரும்பிய சுற்றுலாப் பயணிகள் ஊடகங்களில் தெரிவித்தது; தாக்குதலில் தந்தையை பறிக்கொடுத்த பெண் ஒருவர் தனக்கு காஷ்மீரில் இரண்டு அண்ணன்கள் கிடைத்துள்ளார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியது போன்றவை சங்கிக் கும்பலின் வெறுப்புப் பிரச்சாரத்தின் மீது காரி உமிழ்ந்தன.

இஸ்லாமியர்கள்தான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று சங்கிக் கும்பல் ஊளையிட்டுக் கொண்டிருந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது சங்கிக் கும்பலின் சதித்திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டது. அதிலும், ஜனவரி 23 அன்று ஜம்மு காஷ்மீரில் இப்பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டியது. இவையன்றி, பல்வேறு ஜனநாயக சக்திகளும் நடிகர்களும் சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடித்தும் கருத்துக்களை தெரிவித்து பாசிசக் கும்பலால் இஸ்லாமிய வெறுப்பை தீவிரமாக எடுத்துச் செல்ல முடியாமல் செய்தனர்.

தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் எடுபடாததை உணர்ந்துகொண்ட மோடிக் கும்பல், தேசவெறிப் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக தேசவெறியை தூண்டிவிடும் வகையில், தாக்குதல் நடந்த அடுத்த நாளே பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டுமென உத்தரவிட்டது; இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது; வாகா எல்லையை மூடியது உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகளை மோடி அரசு அடாவடித்தனமாக மேற்கொண்டது. பா.ஜ.க. அடிவருடி ஊடகங்களின் துணையுடன் வடமாநில மக்களை இலக்கு வைத்து இந்நடவடிக்கைகளை ஊதிப்பெருக்கியது. இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் நடுங்கிக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை மோடி ஊடகங்கள் கட்டமைத்தன.

ஆனால், பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் துளியளவும் நெருக்கடியை ஏற்படுத்தாத மோடி அரசின் இந்நடவடிக்கைகளால், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த மக்களும், பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்களுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மறுபுறம், பாகிஸ்தான் அரசும் தன்பங்கிற்கு போர் தயாரிப்புகளில் ஈடுபடுவதை போன்று அறிவிப்புகளை வெளியிட்டு உள்நாட்டு நெருக்கடியில் இருந்து மக்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தனது அரசியல் நெருக்கடியை தீர்த்துகொள்வதற்கான நல்வாய்ப்பாகவே இத்தாக்குதலை பார்க்கின்றன. இந்தியாவில் தேசவெறியை தூண்டிவிடும் வகையில் நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் மோடி அரசு, இதன்மூலம் உண்மைகளை மறைத்து பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மக்களைத் திசைத்திருப்பும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளது.

முதலாவதாக, பஹல்காம் தாக்குலையொட்டி மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில் மட்டும் ஏன் இராணுவ வீரர்கள் இல்லை? தாக்குதல் நடந்த பிறகும் மக்களை காப்பாற்ற உடனடியாக இராணுவ வீரர்கள் ஏன் அங்கு வரவில்லை?

அதேபோல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கசிந்திருந்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை என “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மோடியின் காஷ்மீர் பயணம் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அதேபோல, காஷ்மீரில் தாக்குதல் நடந்தவுடன் தன்னுடைய சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியாவிற்கு வந்த மோடி, தாக்குதல் நடத்தப்பட்ட காஷ்மீருக்கு செல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்காமல் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது நமக்கு புல்வாமா தாக்குதலையே நினைவுப்படுத்துகிறது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலின் போது இதேபோன்று சங்கிக் கும்பலால் தேசவெறி கிளப்பிவிடப்பட்டது. ஆனால், புல்வாமா தாக்குதலின்போது காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் மோடிக்கு தெரிந்தே அல்லது மோடியால் அனுமதிக்கப்பட்டே நடைபெற்றது என்பதை அம்பலப்படுத்தினார். இதன்மூலம் தன்னுடைய தேர்தல் ஆதாயத்திற்காக 40 உயிர்களை மோடிக் கும்பல் தெரிந்தே பலிக்கொடுத்தது என்பது அம்பலமானது.

தற்போதும், பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி பீகார் தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறது. இதனைப் பார்க்கும்போது பஹல்காம் தாக்குதலையும் மோடி அரசு தெரிந்தே அனுமதித்துள்ளாதா? என்று கேள்வி நமக்கு இயல்பாக எழுகிறது.

ஆனால், நியாயப்பூர்வமான இக்கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தனக்கே உரிய பாசிசத் திமிருடன் மோடி அரசு நடந்து கொள்கிறது. மோடி அரசை பார்த்து கேள்வியெழுப்பியதற்காக பாடகர் நேஹா சிங் ரத்தோர், டாக்டர் மெடுசா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்துள்ளது. அதன்மூலம் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாத தன்னுடைய கையாலாகத்தனத்தை மறைத்துக்கொள்கிறது.

பாசிச கும்பலின் சதித்திட்டம்

ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற போதெல்லாம் மாநில அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், தற்போது இத்தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ‘இந்துக்களின் மீட்பர்’, ‘தேசத்தின் பாதுகாவலர்’ என்றெல்லாம் மோடிக்கு பொய்யான பிம்பங்களை கட்டியமைக்க முயற்சிக்கிறது.

ஏனென்றால், விவாசாயிகள் போராட்டம் உள்ளிட்டு நாடுமுழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களால் பாசிசக் கும்பல் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்டதையடுத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மோடியின் ‘வளர்ச்சி நாயகன்’, ‘தேசத்தின் பாதுகாவலன்’ போன்ற முகமூடிகள் கிழிந்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் பெரும்பான்மையை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டது. ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் பா.ஜ.க-விற்கு உத்வேகத்தை அளித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு கைக்கொடுக்கவில்லை.

நாடுமுழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்கள், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள், இராமன் கோவில் திறப்பிற்கு பிறகு நாடுத்தழுவிய நிகழ்ச்சிநிரலை உருவாக்க முடியாத தோல்விகள், சர்வதேச அளவில் பாசிச டிரம்பின் வரி விதிப்புகள் போன்றவை பாசிச கும்பலின் நெருக்கடியையும் தோல்வி முகத்தையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதிலிருந்து சமாளித்து கொள்வதற்காக பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி இந்தியா முழுவதும் தேசவெறியை கிளப்பிவிடுகிறது. இதனை தனது தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்த திட்டமிடுவதுடன், வக்ஃப் திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்டு நாடுமுழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கத் துடிக்கிறது.

பஹல்காம் தாக்குதலில் மோடி அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நியாயமான கேள்விகளையெழுப்பும் ஊடகவியலாளர்கள், ஜனநாயக சக்திகள் மீது தேச விரோதி என்ற முத்திரையைக் குத்தி சிறையிலடைத்து வருகிறது பாசிச கும்பல்.

மறுபுறம், பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு ஜம்மு-காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளை அதிகரித்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று கூறி ஆதரங்கள் ஏதுமின்றி இதுவரை 12-க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளை இடித்து, காஷ்மீர் இஸ்லாமிய மக்கள் மீது புல்டோசர் பயங்கரவாதத்தை ஏவி வருகிறது.

அதேபோல், ஏப்ரல் 24-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அழைக்காமல் புறக்கணித்தது; “காஷ்மீரில் தேர்தலை நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்குமா?” என்று சங்கி அர்ணாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருப்பது ஆகிய நடவடிக்கைகள் காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்து காஷ்மீரை இராணுவ சர்வாதிகார பிடியின் கீழ் இருத்த வேண்டும் என்ற பாசிசக் கும்பலின் நோக்கத்தை அம்பலப்படுத்துகின்றன.

குறிப்பாக, காஷ்மீரில் மிகப்பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களை சூறையாடும் நோக்கிலேயே பாசிசக் கும்பல் 370 சட்டப்பிரிவை இரத்துச் செய்தது. அதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் காஷ்மீரை சூறையாடிவந்த நிலையில், கடந்த ஆண்டில் ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடந்து அங்கு தேசிய மாநாடு கட்சி ஆட்சியமைத்தது பாசிச கும்பலை எரிச்சலூட்டியது. அதன் தொடர்ச்சியாக, காஷ்மீரில் சந்தேகத்திற்குரிய வகையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்ததுயடுத்து, “இது தேசிய மாநாடு கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம்” என அக்கட்சியை சார்ந்த ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார். தற்போது பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், காஷ்மீரில் மோடி அரசின் அதிகாரத்தை விரிவுப்படுத்திக்கொண்டு அங்கு கனிமவளச் சூறையாடலை தீவிரப்படுத்துவதற்கான சதி அரங்கேறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு இத்தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு பாசிச கும்பல் பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. தேசவெறி பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு தனது பாசிச சதித்திட்டங்களை அரங்கேற்ற துடிக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடி கும்பலின் தேசவெறி பிரச்சாரத்திற்கு பலியாகி அதன் ஊதுகுழலை போல கருத்து தெரிவித்து வருகின்றன. இச்சூழலில், மோடி அரசின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டிய கடமை இந்தியா முழுவதுமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தோள்களிலேயே சுமத்தப்பட்டுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க