தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | சென்னை

“அதிகரித்து வரும் வேலையின்மை, விலை ஏற்றம், உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை ஆவடியில் (01.05.2025) இன்று காலை 9:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (மா.ஒ.குழு) வடக்கு மண்டல பொருளாளர் தோழர் ப. சக்திவேல் தனது தலைமை உரையில் “தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றும் பறிக்கப்படுவதும் தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ளும் காண்டிராக்ட் முறை, நீம் (NEEM) ஸ்கீம் ஆகியவை அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராகப் போராட வேண்டும்” எனப் பேசினார்.

தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர். தீரன் தனது உரையில் “கல்வி கார்ப்பரேட் மயமாவதை எதிர்க்காமல் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகப் பேசும் ஆளும் தி.மு.க அரசை அம்பலப்படுத்திப் பேசியதுடன் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் எனவும், மாணவர்கள் அமைப்பாக இருப்பதன் மூலம் அநீதிக்கு எதிராகப் போராட முடியும் என்றார்.

மேலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா. சிவா அவர்கள் தனது உரையில் “நாட்டில் நிரந்தர தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார்த் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சேர்ந்த ஊழியர்கள் அனைவரின் பணி நிலைமையும் இன்றைக்கு கேள்விக் குறியாக உள்ளது. மறுபுறம் நிரந்தரம் அற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகி எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறை சுரண்டல் அத்தொழிலாளர்கள் மீது ஏவப்படுகிறது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி அதானி பாசிசம் நாட்டு மக்கள் – தொழிலாளர்களின் துயரத்திற்குக் காரணமாகும். எனவே இதற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது உரையில் நாட்டு மக்களை எவ்வாறெல்லாம் இந்த பாசிச பா.ஜ.க மோடி அரசு துன்பப்படுத்துகிறது என்பதை எடுத்துக் கூறினார். மேலும், ”இதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராட வேண்டும். நாம் சிறிய சக்தியாக இருக்கலாம் ஆனால் பெருவாரியான மக்களின் விடுதலைக்கான கருத்துகளை நாம் கொண்டுள்ளோம். அதனைக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்திட களம் காண்போம்” என்றார்.

ஒவ்வொரு பேச்சாளரின் உரையின் முடிவிலும் இடையிடையே மே தின முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை இணைப்பு சங்க தொழிலாளர்கள், மாணவர்கள், திரளாகக் கலந்து கொண்டு உணர்வுடன் முழக்கமிட்டனர்.

இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் லட்சுமணன் அவர்கள் நன்றியுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க