அன்பார்ந்த உழைக்கின்ற மக்களே!
2025 மே 1 – தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளை சங்கம் மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தின் அருகிலிருந்து காவலான் கேட் வரை பேரணியும் அதனைத் தொடர்ந்து காவலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா கிளைச் சங்க தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர்களும் மாற்று அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், பொதுமக்களும் என 100 பேர் வரை இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி பேரணியை மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். சங்கர் அவர்கள் பறை இசையுடன் தொடங்கி வைத்தார். உயர்ந்த செங்கொடியுடன் அமைப்பின் பெயர் பதாகைகள், அதனைத் தொடர்ந்து மே தின முழக்கங்கள் அடங்கிய பேனர், ஆசான்கள் படங்கள் பொருத்திய ஆட்டோ வாகனத்தில் விண்ணதிரும் முழக்கங்களுடன் இளம் தோழர்கள் முன் செல்ல சிவப்பு சட்டையுடன் பேரணி நடைபெற்றது.
பேரணியைத் தொடர்ந்து காவலன் கேட்டில் தோழர் சௌந்தர்ராஜன் பு.ஜ.தொ.மு ஆக்சில்ஸ் இந்தியா கிளை பொருளாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தோழர் திலகவதி அவர்கள் முழக்கமிட்டார். அதனைத் தொடர்ந்து தலைமை உரையாற்றிய தோழர்.சௌந்தர்ராஜன் “வேண்டும் ஜனநாயகம்” என்ற மைய முழக்கத்தின் கீழ் பல்வேறு தலைப்புகளை முன்வைத்து இந்த ஆண்டு மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு தலைப்பை முன்வைத்து நடந்த பேரணி ஆர்ப்பாட்டம், இந்த ஆண்டு பல்வேறு தலைப்புகளில் நடத்த வேண்டிய அளவில் நெருக்கடிகள் அதிகரித்திருக்கிறது. முதலாளித்துவ கொள்கையின் நெருக்கடிகளை எதிர்த்துப் போராடி உரிமைகளைப் பெற முடியும், என்பதை நிரூபித்தது மே தினம்.
எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்று தொடங்கிய சிகாகோ தொழிலாளர்களின் போராட்டம் உலகம் முழுவதும் பற்றிப் பரவியது. அதன் விளைவாகவே இன்று உழைக்கும் தொழிலாளி வர்க்கம் சட்டரீதியாக பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ளது. அந்த உரிமைகளை தற்போது இந்தியாவில் பறித்துக் கொண்டு இருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல். சட்டப்படி சங்கம் வைப்பதற்கும் சங்கப் பதிவைப் பெறுவதற்கும், போராட வேண்டி உள்ளது. சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் சிறந்த உதாரணம் என்று உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை தோழர். சாரதா தேவி அவர்கள், பெண் தொழிலாளர் உழைப்பு சுரண்டப்படுகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. அம்பானி, அதானி போன்ற முதலாளிகள் வசதியான வாழ்வுக்காகப் பெருவாரியான மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. நாட்டில் ஆளும் ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். மக்களிடம் இந்து மதவெறியூட்டி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் நடத்தும் இந்த பேரணி ஆர்ப்பாட்டமானது தற்போது தேவையானது, அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்.ரவி பாரதி அவர்கள் தனது வாழ்த்துரையில் ஜார் மன்னராட்சியை வீழ்த்தியது கம்யூனிசம், எந்த காலத்திலும் அழிக்க முடியாத கொள்கையைக் கொண்டுள்ளது கம்யூனிசம். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்த பேரணி ஆர்ப்பாட்டமானது பெருவாரியான மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. போராட்ட களத்தில் மக்களோடு நிற்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரக் கழகம் தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சிறப்புரையாற்றிய தோழர். சுந்தர் (புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்) அவர்கள் தனது உரையில் இன்றைய தொழிலாளி வர்க்கம் மோசமான உழைப்பு சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ளது; நிரந்தர வேலை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மாற்றிவிட்டது. பெரும்பாலான ஆலைகளில் 12 மணி நேர வேலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; வட இந்திய தொழிலாளர்கள் அற்ப கூலிக்கு தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிக்காத சாம்சங் நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் விடியல் அரசு என்று மார்தட்டிக் கொண்ட தி.மு.க அரசு எடுக்கவில்லை. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பதற்காக அங்குள்ள பழங்குடியின மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். மற்றொருபுறம் வட இந்தியாவில் இஸ்லாமியர்களைக் குறி வைத்து, அவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டு அகதிகளாக்கப் படுகிறார்கள். மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, கார்ப்பரேட் முதலாளிகள் வாழ்வுக்காக பா.ஜ.க அரசு வேலை செய்கிறது. அதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. தொழிலாளி வர்க்கம் கிளர்ந்து எழுந்து போராடினால் முதலாளி வர்க்கத்தை வீழ்த்த முடியும். அதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. மோடி அமித்ஷா கும்பல் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாட்டில் மதரீதியான கலவரங்களைத் தூண்டி வருகின்றனர். காஷ்மீரில் நடந்த சம்பவம் அங்கு உள்ள கனிம வளங்களை அம்பானி அதானி கும்பல் கொள்ளை அடிப்பதற்கான நோக்கம் கொண்டது. எனவே, ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க “வேண்டும் ஜனநாயகம்” என்று முழங்குவோம் என உரை நிகழ்த்தினார்.
இறுதியாக நன்றியுரையாற்றிய மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். தோழர். சங்கர் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த மாற்று ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களுக்கும், கலந்து கொண்ட தோழர்களுக்கும், ஒலி பெருக்கி அமைத்துக் கொடுத்த தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
தகவல்:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஆக்சில்ஸ் இந்தியா கிளைச்சங்கம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
காஞ்சிபுரம் – வேலூர் மாவட்டங்கள்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram