மே தினம் உலக தினமாக மாறியது
சாமுவேல் கோம்பர்ஸ் அவர்கள் தனது சுயசரிதையில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு எங்ஙனம் மே தினம் ஒரு உலகத் தொழிலாளர் விடுமுறை தினமாக மாறுவதற்கு வழி செய்தது என்பது குறித்துக் கூறுகிறார். “எட்டு மணி நேர இயக்கத்துக்கான தயாரிப்புகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. நாங்கள் தொடர்ந்து எங்கள் நோக்கத்தைப் பரவலாக்குவது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தோம். பாரிஸில் சர்வதேச தொழிலாளர் காங்கிரசுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த காங்கிரசின் மூலம் உலகளாவிய ஆதரவைப் பெறுவதின் மூலம் எங்கள் இயக்கம் பயனடைய முடியும் என்று நான் நினைத்தேன்.” கோம்பர்ஸ் தனது சந்தர்ப்பவாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளார். பின்னர் அது அவரின் வர்க்க சமரசக் கொள்கையில் முழுமையாக வெளிப்பட்டது. முன்பு தீவிரமாக எதிர்த்துப் போராடிய சோஷலிஸ்டு தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் அவர் தயாராய் இருந்தார்.
1889 ஆம் ஆண்டு 14ஆம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்காக உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்கத் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தைப் போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்கப் பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்துகொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.
“எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட்ட நாளில் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் அவர்களின் நாட்டுச் சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.”
1890 ஆம் ஆண்டு பல ஐரோப்பிய நாடுகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் மரவேலைத் தொழிலாளர்களும் கட்டிட வேலைத் தொழிலாளர்களும் சோஷலிஸ்ட்டான பீட்டர் மெக்கியூரி தலைமையில் 8 மணி நேர வேலைநாளுக்காக பொது வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜெர்மனியில் சோஷலிஸ்டுகளுக்கு எதிராக பல விசேஷ சட்டங்கள் இருந்தபோதிலும் பல தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினார்கள். அதேபோல் மற்ற ஐரோப்பிய தலைநகரங்களிலும் அதிகார வர்க்கத்தின் எச்சரிக்கையையும் ஒழுங்குமுறையையும் மீறி தொழிலாளர்கள் மே தினத்தைக் கொண்டாடினர். அமெரிக்காவில் சிக்காகோவிலும், நியூயார்க்கிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் 8 மணி நேர கோரிக்கையை வலியுறுத்தி அணிவகுத்தனர். முடிவில் முக்கிய மையங்களில் திறந்த வெளிக் கூட்டங்கள் நடைபெற்றன.
1891ல் அகிலத்தின் அடுத்த மாநாடு பிரான்ஸில் நடந்தது. மே முதல் நாளின் உண்மையான நோக்கம் 8 மணி நேர வேலைநாள் என்பதை மீண்டும் எடுத்துறைத்தது. பொதுவான வேலை நிலைமைகளை சீர் செய்ய வேண்டும், நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் அத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றது. மாற்றியமைக்கப்பட்ட தீர்மானம் குறிப்பாக 8 மணி நேர வேலைநாள் மே தின ஆர்ப்பாட்டத்தின் வர்க்கத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலைநிறுத்தம் நடைபெற வேண்டும் என்று தீர்மானம் சொன்னது. அதே நேரத்தில் மே தின ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தவும் ஸ்தூலப்படுத்தவும் அகிலம் முயற்சி எடுத்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைமையே ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளோடு சேர்ந்துகொண்டு, மே முதல் நாள் வேலை நிறுத்தத்தை ஏற்க மறுத்து அதை அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வாக்களித்தது. இதன் மூலம் அது தன் சந்தர்ப்பவாத்தை வெளிக்காட்டியது.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram