இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!

"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"

ஸ்ரேல் விமானப்படையின் ஒரு பகுதியினர் உடனடியாகப் போரை நிறுத்தி பணயக்கைதிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்துப் பிரச்சார இயக்கத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி கிட்டத்தட்ட 1,000 இஸ்ரேலிய விமானப்படை வீரர்கள் ஒரு திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டபோது, இராணுவம் உடனடியாக வினையாற்றி, ஆவணத்தில் கையெழுத்திட்ட செயலில் உள்ள அனைத்து ரிசர்வ் படையினரையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதன் பின்னர், இராணுவம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற மற்றும் ரிசர்வ் படை வீரர்கள் இதேபோன்ற ஆதரவு கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக போரை அரசாங்கம் நிலைநிறுத்தி வருவதாகவும், மீதமுள்ள பணயக்கைதிகளை வீட்டிற்குக் கொண்டு வரத் தவறிவிட்டதாகவும் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். முதல்கட்ட‌ போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர், மார்ச் 18 அன்று சில பணயக்கைதிகளை விடுவிக்க உதவிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக மீண்டும் போருக்குத் திரும்ப நெதன்யாகு முடிவு செய்ததே இந்தக் கடிதங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளதாகப் பலரும் கருதுகின்றனர்.

இந்த சம்பவமானது காசாவில் போர்தொடுத்துவரும் இஸ்ரேலின் இராணுவத்தினரிடையே அதிகரித்துவரும் ஆழமான பிளவு மற்றும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. “போர் மீண்டும் தொடங்குவது அரசியல் காரணங்களுக்காகத்தான், பாதுகாப்பு காரணங்களுக்காக அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று விமானப்படை கடிதத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற விமானி கைபோரன் கூறியுள்ளார். காசா மீதான இந்த இன அழிப்புப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தால் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணியினர் அச்சுறுத்திவருவதால் தான், நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளார்” என்று குற்றம் சாட்டுகிறார்.

நீங்கள் எழுதும் இந்த கடிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுமா அல்லது இவை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இஸ்ரேலின் பல போர்களில், தற்போது நடந்துகொண்டிருக்கும் காசா போர் உட்பட, விமானப்படையின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. சொல்லப்போனால் ஒரு போரின் திசைப்போக்கை மாற்றும் சக்தியுடையதாக இருந்துள்ளது. இஸ்ரேலிய மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். எனவே விமானப்படையின் பலம் தான் அவர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பிற்கான உறுதியாகும். அந்த வகையில் மக்கள் மத்தியில் இது தாக்கம் செலுத்தும் என்று நம்புகிறோம். கையெழுத்திட்ட 10,000 வீரர்களில் பெரும்பான்மையானவர்கள் எப்படியிருந்தாலும் ஓய்வு பெற்றவர்கள். ஆயினும்கூட, இஸ்ரேலின் யூத பெரும்பான்மையினரிடையே இராணுவத்திற்கு, குறிப்பாக போர் விமானிகள் மற்றும் பிற மதிப்புமிக்க பிரிவுகளுக்கு மரியாதை இருப்பதால், முன்னாள் விமானிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இஸ்ரேலிய விமானப்படை விமானிகளின் பிராண்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம், மேலும் சமூகத்தில் செல்வாக்கு செலுத்துவதற்காக இந்த பட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் இது என்று நாங்கள் உணர்ந்தோம்” என்று பதிலளித்தார். மேலும் பேசிய அவர், “நாங்கள் கேட்பது எல்லாம் ஒன்றேயொன்று தான்; என்ன விலை கொடுத்தாவது, இந்த போரை உடனடியாக நிறுத்தியாவது, பாலஸ்தீனத்தின் வசமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் திரும்ப அழைத்துவர வேண்டும் என்பதுதான்” என்று கூறினார். பலதரப்பட்ட‌ இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த சுமார் 15,000 ரிசர்வ் வீரர்கள் இதேபோன்ற  கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கடிதத்தின் சிறு பகுதி

பெரும்பாலான யூத ஆண்களுக்கு கட்டாயமாக இருக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் பல முக்கிய பிரிவுகள் பெரும்பாலும் ரிசர்வ் வீரர்களையே நம்பியுள்ளன. இராணுவ ரிசர்வ் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் சேவை செய்கிறார்கள். இதில் 18 முதல் 43 வயதுடையவர்கள் அடங்குவர். இஸ்ரேலின் பெரும்பாலான குடிமக்கள் இளம் வயதிலேயே 2-3 ஆண்டுகள் IDF (இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்) இல் படைவீரர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

அவர்களின் கட்டாய சேவையை முடித்தவுடன், அவர்களின் இராணுவ அனுபவம் மற்றும் நாட்டின் தேவைகளைப் பொறுத்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு – பொதுவாக 40 அல்லது 45 வயது வரை – ரிசர்வ் பட்டியலில் சேர்க்கப்படுவர்.

இஸ்ரேலின் நிலையான இராணுவம் 1,69,500 செயலில் உள்ள பணியாளர்களைக் கொண்டிருந்தாலும், கிடைக்கக்கூடிய ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கை சுமார் 4,65,000 ஆகும். இந்த போர் தொடங்கியது முதல், கிட்டத்தட்ட 3,00,000 IDF ரிசர்வ் வீரர்கள் சண்டையில் சேர அழைக்கப்பட்டுள்ளனர், பலர் சராசரியாக சுமார் 2 மாதங்கள் பணியாற்றிய பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போதைய சூழலில் சோர்வு, குடும்பக் காரணங்கள் மற்றும் வேலையிழப்பால் ஏற்படும் நிதிச்சுமை ஆகியவற்றைக் காரணம் காட்டி, ரிசர்வ் வீரர்கள் பணிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். இது இஸ்ரேலிய இராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

2,500 முன்னாள் பாரா ட்ரூப்பர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏற்பாடு செய்த எரான் துவ்தேவானி, இஸ்ரேலிய இராணுவம் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார். “விமானிகளைத் தொடர்ந்து பணியிலிருந்து விடுவித்தால், கடிதங்களில் கையெழுத்திட்ட மற்ற அனைவரையும் என்ன செய்வது? அவர்களும் பணியிலிருந்து விலக்கப்படுவார்களா?” என்று அவர் கூறினார். “விமானிகள் தனியாக இல்லை” என்பதைக் காட்டவே இந்தக் கடிதத்தை ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.

கையொப்பமிட்டவர்களில் சில நூறு பேர் மட்டுமே இன்னும் தீவிரமாகச் சேவை செய்து வருகின்றனர் என்றாலும், இஸ்ரேலிய இராணுவம் 18 மாதங்களாகச் சண்டையிட்டு வருகிறது. மேலும் யாரையும் ரிசர்வ் கடமையிலிருந்து திருப்பி அனுப்பும் நிலையில் இல்லை. ரிசர்வ் படையினர் மீண்டும் மீண்டும் நடவடிக்கைக்கு அழைக்கப்படுவதாலும் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி ஆளும் கூட்டாளிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து கட்டாய இராணுவ பணிகளிலிருந்து விலக்குகளை வழங்கி வருவதாலும் பல இஸ்ரேலியர்கள் கோபமடைந்துள்ளனர். ரிசர்வ் ட்யூட்டிக்கு தொடர்ந்து பதிவு செய்யும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், இராணுவம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பணியாற்ற ஆட்களை நியமிக்க முயன்றுள்ளது.

ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் சமூக உளவியலில் நிபுணரான எரான் ஹால்பெரின், இந்த கடிதங்களை “இந்த குறிப்பிட்ட போரில் நெறிமுறைகள் அரிக்கப்பட்டதற்கான மிக முக்கியமான அறிகுறி இது” என்று குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் போருக்கு பரவலான ஆதரவு கிடைத்த போதிலும், பல பணயக்கைதிகள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு, இஸ்ரேலிய இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 850 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

“போர் தொடர்பான முக்கிய கேள்விகள் குறித்து இவ்வளவு ஆழமான கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது, இதுபோன்ற வன்முறை மோதலில் ஒரு போரை பராமரிப்பதும் நிர்வகிப்பதும் மிக மிகக் கடினம்” என்று ஹால்பெரின் கூறினார். இதனால் இராணுவத்தினரிடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடானது இஸ்ரேல் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியையே ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்.

’ஹமாஸை ஒழிப்பதே முதன்மை இலக்கு’ என சொந்த நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் யூத இனவெறி பாசிஸ்டு!

தற்போது 24 பேர் உயிருடனும் 32 பேர் இறந்தநிலையிலும் மொத்தம் 56 இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸை கட்டாயப்படுத்த இராணுவ அழுத்தம் தேவை என்று நெதன்யாகு கொக்கரித்துவரும் நிலையில், பணயக்கைதிகளின் குடும்பங்கள் உட்படப் பலரும் இது அவர்களைக் கொல்லவே வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர். ஹமாஸை அழிப்பது மற்றும் பணயக்கைதிகளை சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவது ஆகிய இரண்டினை இந்த போரின் இலக்குகளாகக் கூறிவந்த நெதன்யாகு, கடந்த மே 1ஆம் தேதியன்று “பணயக்கைதிகளை மீட்பது அல்ல, ஹமாஸை ஒழிப்பதே நமது முதன்மை இலக்கு” என்று அறிவித்தார். இந்த கருத்திற்கு‌ அந்நாட்டு மக்களிடமே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதுதான் போரின் மிக முக்கியமான குறிக்கோள் என்று கிட்டத்தட்ட 70% இஸ்ரேலியர்கள் கூறுகிறார்கள். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் நெதன்யாகுவின் இரண்டு இலக்குகளையும் ஒன்றாக அடைய முடியாது என்று கூறியுள்ளனர்.

நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியானதும் அதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸை ஒழிப்பது இரண்டாம்பட்ச இலக்குதான். பணயக்கைதிகளை மீட்டுக் கொண்டுவருவதே நமது முதன்மை நோக்கம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் பாசிஸ்டு நெதன்யாகு பாலஸ்தீனத்தின் மீதான‌ வெறுப்பைக் கக்கி தனது யூத இனவெறியை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளார்.

மக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு – களப்போராட்டங்களே தீர்வு!

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனிதநேயமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேல் நாட்டு மக்களிடையே எதிர்ப்புகள் வலுத்துவருவதும் பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் அதிகரித்துவருவதும் இங்கே கவனிக்கத்தக்கது. சேனல் 12 கருத்துக் கணிப்பின்படி, சுமார் 60% இஸ்ரேலியர்கள் பிரதமர் நெதன்யாகு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நெதன்யாகு பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 31% பேர் நம்புவதாகவும், 9% பேர் உறுதியாக இல்லை என்றும் சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பெரும்பான்மையான மக்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல் எழுந்துவரும் சூழலில் இராணுவத்தினரின் ஒரு பகுதியினரிடையே தொடர்ந்து நடைபெற்று வரும் காசா போர் குறித்து கருத்து வேறுபாடு எழுந்துள்ளது, இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகவே அமையும் என்று கருதப்படுகிறது.

உள்நாட்டில் நெதன்யாகுவிற்கு கடும் நெருக்கடி உண்டாகியிருக்கும் சூழலில், உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் இணைந்து யூத‌ இனவெறியாளனுக்கு எதிராக களப்போராட்டங்களை கட்டியமைத்தால் இந்த இனப்படுகொலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது உறுதி.


மக்கள் அதிகாரம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க