புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மே 5 அன்று திருவிழாவின் போது சாதி வெறியர்கள் பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தற்போது 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் அடைக்கலங்காத்தார் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ”அண்ணா கைப்பந்துக் கழகம்” என்கிற பெயரில் விளையாட்டு திடல் உள்ளது. அதை முத்தரையர் சமூக இளைஞர்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்தி வந்தனர். அதேபோல், தலித் மக்களும் அவ்விடத்தில் கோவில் கட்டி தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தலித் மக்கள் பொங்கல் விழா நடத்த முயன்றபோது இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இடம் யாருக்குச் சொந்தம் என்ற தகராறில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் பட்டியலின மக்களுக்குத் தான் இடம் சொந்தம் என்று தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து முத்தரையர் மக்களால் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பட்டியலின மக்கள் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போலீசார் மறியலில் ஈடுபட்ட சாதி வெறியர்களைக் கைது செய்ததுடன் பட்டியலின மக்களையும் கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. நீண்ட காலமாக இரு சமூக மக்களுக்கு இடையே நிலவுகின்ற மோதலை தீர்த்து வைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் போலீசும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.
இந்நிலையில் தான் மே 5 ஆம் தேதி அன்று முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டியலின மக்கள் குறிப்பிட்ட தூரம் வரை வெண்குடையை ஏந்தி வருவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் திருவிழா அன்று குறிப்பிட்ட தூரத்தைத் தாண்டி பட்டியலின மக்கள் வந்துவிட்டதாகக் கூறி சாதி வெறியர்கள் தகராறில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தகராறு முற்றியதில் சாதி வெறியர்கள் பட்டியலின மக்கள் வசிக்கக் கூடிய பகுதிக்குச் சென்று அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் ஒரு வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். தலித் மக்களின் 7 குடிசை வீடுகள் அடித்து நொறுக்கிய சாதி வெறியர்கள் ஒரு வீட்டைத் தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். பின்னர் கொலைவெறி தாக்குதலால் படுகாயமடைந்த 6 பெண்கள் உள்பட 20 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படிக்க: சாதிவெறியால் அத்துமீறும் திருவாரூர் போலீஸ்
தற்போது போலீசார் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சாதி வெறியர்கள் 13 பேரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சாதிவெறியர்கள் தலித் மக்கள் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலை இரண்டு சமூக இளைஞர்களுக்கு இடையிலான மோதலாகச் சித்தரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ”இரவு 11:30 மணியளவில் உள்ளூர் பெட்ரோல் பங்கில் யார் முதலில் எரிபொருள் நிரப்புவது என்பது குறித்த சண்டையால் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலிருந்தும் குடிபோதையிலிருந்த இளைஞர்கள், தலித் மக்கள் குடியிருப்பு பகுதி வரை ஒருவரையொருவர் பின்தொடர்ந்துள்ளனர்.
பின்னர் இரண்டு சமூக இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் முற்றியது. அதனால் தலித் மக்கள் மீது முத்தரையர் சமூக இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மறைத்து சாதி வெறியர்களைப் பாதுகாக்கின்ற வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
போலீசார் இவ்வாறு அறிக்கை வெளியிடுவதும், சாதிய தாக்குதல்களை முன்விரோதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று திரித்துக் கூறுவதும் இது முதல் முறையல்ல. சின்னதுரை மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதலை போலீசார் பணத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்று பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தென் மாவட்டங்களில் சாதிய படுகொலைகள் நடைபெறவில்லை; கூலிப்படையால்தான் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்று பேசியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி தமிழ்நாட்டில் சாதி கலவரங்களை நடத்தி வருகிறது. சாதிய தாக்குதல்களுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ள ஆதிக்கச் சாதி சங்கங்களை திமுக அரசு தடை செய்ய வேண்டும். அதன் மூலமே சாதிய கொலைவெறி தாக்குதல்களையும் படுகொலைகளையும் தடுக்க முடியும்.
மேலும் திமுக அரசு கொலைவெறி தாக்குதலால் படுகாயமடைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு மாற்று வீடு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் வலியுறுத்த வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram